Saturday, October 19, 2013

எனது வீட்டுத்தோட்டம்

உலகின் பதற்றநிலையிலிருந்து
வெகுதூரம் இல்லை எனது வீடு
வீட்டின் ஜன்னலை உரசிக்கொண்டுதான்
நிற்கிறது எனது தோட்டம் எனினும்
உலகைவிட்டு, இந்த வீட்டைவிட்டு
வெகுதூரம் தள்ளியிருக்கிறது எனது தோட்டம்


நான் விழிப்பதற்கு முன்
என் கனவில் தென்பட்டது?
காடோ? தரிசோ?
விழித்தவுடன் என் கண்ணில்படாது
(ஒரு ரசாயன மாற்றம் பெற்று
மறைந்துகிடக்கும் சக்தியாக மட்டுமே
அது இருக்கலாம்)

மூங்கில்களைத் துளையிடும் வண்டுகளைப் போலவும்
தன் சிறகுகளால் இரும்பு விலங்குகளை
உடைத்துவிடக்கூடிய வண்ணத்துப் பூச்சிகளைப் போலவும்
இன்று மட்டுமே உலாவுகிறது இங்கே
இல்லை;
காய், கனி, பிஞ்சு, கனியுள் விதை என்று
எக்காலமும்
இன்றாக மட்டுமே இருக்கிறது இங்கே

கடிகாரங்களைப் பார்த்து அன்று
பூமியின் பருவகாலங்களைக் கேட்டு
அவை நடக்கின்றன,
ஒரு துறவியின் உள்ளத்தைப் போல,
துறவிக்கும் என் தோட்டத்திற்கும் வீடு
கிடையாது என்று எண்ணியிருந்தேன்; அது தவறு,
தோட்டக்காரனின் பராமரிப்பே
தோட்டத்தின் வீடு
தோட்டப் பராமரிப்பில் இருக்கும் ஒருவனிடம்
ஒரு மதவாதிக்கோ தத்துவவாதிக்கோ
தீர்க்கதரிசிக்கோகூட சொல்வதற்கு ஏதுமில்லை

Read more...

Friday, October 18, 2013

அன்பின் முத்தம்

பார்த்திருக்கிறாயா?
பாலை நடுவே ஒரு கடலை?
அங்கே
உள்ளங் கைகளின் பாதுகாப்பில் வரும்
சுடராக, ஒரு குடம் தண்ணீரை, ஏந்தியபடி
அலைகளிலே அசைந்து வரும் படகை?

பருகியிருக்கிறாயா,
பருகும் ஒவ்வொரு துளி நீரிலும்
உள்ளதாம் அன்பின் முத்தம்?

கலங்கியிருக்கிறாயா என்றாவது,
எனக்கு எனக்கு எனப் பதறும் கைகளால்
குடம் நீர் கவிழ்ந்து
கடல் நீரோடு கலந்துவிட்டதைக் கண்டு?

பருகு நீர், பறவைகள், பூ, மரம், காடு
பொங்கும் குழந்தைமை – எங்கே? எங்கே?
தவிதவித்திருக்கிறாயா,
சூர்ய அடுப்பாக மாறி
இழந்ததையெல்லாம் மீட்பதற்கு?

இறுதியாக,
உன் துயரங்களினின்றும்
உயிர்த்தெழுந்திருக்கிறாயா,
தன்னந்தனியாய் அப்படகில் வரும்
அந்தத் தண்ணீர்க் குடமாக?

Read more...

Thursday, October 17, 2013

எழுதுவது எப்படி என்று என்னைக் கேட்கும் ஆர்வம் மிக்க வாசகனுக்கு

ஒரு கவிதை எழுதப்படுவதற்கு முன்னும் பின்னும்
நான் எவ்வாறு இருக்கிறேன் தெரியுமா?

இருண்ட கானகத்துள் தொலைந்து போனவன்
அடுத்த அடியை வைக்கும் பாதம் தொடுவது
பெரும் முள்பரப்பா, ஆழ் சகதியா, பள்ளமா தெரியாது
எனது வழியற்ற வழியில் நான் கண்டவர்கள்
குறிக்கோளையும் பாதைகளையும் மிகத் தெளிவாய் அறிந்த
தீர்க்க நடையினர்
நானோ சென்றடைய வேண்டிய இடத்தின்
திக்கோ அடையாளமோ தெரியாதவன்
வழிகாட்டப்படக்கூடும் வாய்ப்பினை இழந்தவன்

பீதியுற்ற குழந்தையாய்
நான் அரண்டு நின்றதும் வெகு நேரம் இல்லை.
கதறி அழுவதையும் விட்டுவிட்டேன். அதன் எதிரொலியாய்
கானகமே அழுவதைக் கண்டு
பிறிதோர் மேன்மைப் பயத்திற்கு ஆட்பட்டு
இப்போது நான் அடிக்கும் சீட்டியொலியும், குரல் தூக்கலும்
பாடல் அல்ல; பயத்தின் பேய்விரட்டல்

அதோ அந்த விண்மீன்களிடமிருந்தா?
இந்தக் குன்றிடமிருந்தா?
இந்த மரங்களிடமிருந்துதானா?
ஏதோ ஒரு மௌனமான
பொறுமைப் பார்வையினின்று வந்த காற்றில்
ஓர் அற்புதம் போல் முகிழ்ந்த ஒரு மலரால்
இக் கானகச் சூழல் எனக்கு அன்யோன்யப்படும்
அந்தக் கணம், எல்லாமே மாறிவிடும்
நானும் புதியதாய்
ஒரு கவிதையை எழுத அல்லது வாழத் தொடங்கியிருப்பேன்

Read more...

Wednesday, October 16, 2013

மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பு

அடுத்த அறையில் என் மனைவி என் மகளிடம் -
”அப்பா என்ன செய்து கொண்டிருக்கிறார்?”
”கவிதை...”

நான் அந்தச் சொல்லை எத்தனையோ பேர்
எத்தனையோ சந்தர்ப்பங்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இவ்விதமாய்
அர்த்தச் செறிவும் அர்த்தமின்மையும் ஒருங்கிணைந்த
ஓர் அம்ருதத் தன்மையுடன்
ஒரு நாளும் ஒலித்ததில்லை அது.
ஏன்?
அவளுக்குக் கவிதை தெரியும் என்பதாலா?
அல்லது ஏதும் அறியாத சின்னஞ் சிறுமி என்பதாலா?

நான் எழுதி முடித்த கவிதையைத்
தனக்கு வாசித்துக் காட்டியே ஆகவேண்டும் என்பாள் அவள்.
அப்போது அவளுக்குப் புரியுமொரு மொழியில்
மொழிபெயர்ப்பாகும் அக் கவிதை.
நன்றாயிருக்கிறதெனப் பரவசித்து
என் கன்னத்தை
தன் மொட்டுவிரல்களால் எடுத்து முத்தமிடுவாள்

முதல் ரசனையை ஏற்ற
என் கவிதையின் அந்தக் காட்சியை உற்சாகத்தோடு
நான் என் கவிதை ரசிக நண்பரொருவருக்கு
நடித்துக் காட்டுகையில்
அது அக்கவிதையின்
மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பாகும்
அதில் ’எனது கன்னம்’ என்பது
’வெளி’ என்றாகியிருக்கும்

அதனாலென்ன?

மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்புத்தானே
முற்றான கவிதை

Read more...

Tuesday, October 15, 2013

ஷம்லா குன்றில் ஒரு சூர்யோதயம்

தன்னந்தனியே
ஓடோடி வந்து
நான் அந்த இடத்தைக் காண விழைவேன்
சூர்யன் உதித்துவிடும் முன்னே!

ஆனால் அந்தோ
நான் அங்கே வந்த உடனேயே
சூர்யன் உதித்துவிடுகிறது!

சூர்யன் வரும்முன்னே
வந்துவிடும் அதன் மெல்லொளியில்
இருளும் குளிரும்கூட இதமாயிருந்தது

பருவமொட்டின் ஊசிநுனியை
உள்நின்று மோதியது
பிரபஞ்ச விரிவின் பெருக்கு

குன்றை நேசித்தபடியே
அதைப் பிளந்துகொண்டிருந்தது மரம்
அந்தப் பிளவில் தம் பீடமைத்தன பறவைகள்
குன்றை நேசித்தபடியே
அதைக் குடைந்தேன் நான்
குன்றை நேசித்தபடியே
என் கவிதைகளை அதன் மீது
கிறுக்கினேன் நான்

ஓ ஷம்லா குன்றே!
காலை உணவைக் கைவிட்டுவிட்டு உலாவுகிறேன்
அடிவானில்
என் பசியைப் போல்
உதித்து ஏறிக்கொண்டிருக்கும் சூர்யன்முன்
’என்னைப் புசி’ என்னும் ஓர் அற்புத உணவாய்
நான் நின்றேன்
ஓ ஷம்லா குன்றே!
இனி இங்கிருந்து வேறெங்கும் நகர
விரும்பும் வேட்கையெனும் சக்தியற்றுக்
கிடக்கும் ஒரு பெரும் ஏரி நான்
சூர்யவொளியின் தீவிரத்தை எதிர்கொண்டு
என்னிலிருந்து உயர்ந்தெழும்
நீராவியல்லவோ என் கவிதை!
ஏதோவொரு கோணத்தில்
சூர்யனாய்த் தகதகத்தது ஏரியும்.
சூர்யனின் உன்னிப்பான பார்வையில்
பளிங்கு ஏரியில்
பளீரெனத் துலங்கியது
படிந்துள்ள அனைத்தும்

Read more...

Monday, October 14, 2013

நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்

ஆராத்தி எடுக்கப்படுவது போன்ற சலனம்.
வெள்ளத்துப் பூக்களாய் மிதந்துவரும்
மேகங்களைப் பார்வையிடும் சூர்யன்.
உடம்புக்குச் சந்தனம் தடவுவது போன்ற காற்று.
சாரல் என்மீது பன்னீர் தெளிக்கையில்தான்
உணர்ந்தேன், சொர்க்கத்தின்
நுழைவாயிலிலேயே நான் நின்று கொண்டிருப்பதை

’குற்றாலத்தில் நல்ல சீசன்’ என்றான்
உலக அறிவாளி ஒருவன்
இவ்வளவு பக்கத்தில் நின்று
சீசன் தன் கை நீட்டி அழைக்கையில்
விட்டு வைப்பார்களா யாராவது?

பணக்காரர்கள்தான் போகிறார்களா?
தேங்காய் உடைப்பு ஆலைத் தொழிலாளிப் பெண்கள்
துவரை உடைப்பு ஆலை
உப்பு சுமப்போர்
ஒரு பள்ளி ஆசிரியர்கள்
ஓரலுவலகக் கூட்டாளிகள்
ஓர் இயக்கத் தோழர்கள்
எல்லோரும்தான்
கூடிக்கூடிச் செல்கிறார்கள்
குழு குழுவாய்ச் செல்கிறார்கள்

என்னிடம்தான்
போதுமான காசும் இல்லை,
ஆகவே கம்பெனியும் இல்லை
(’பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’)
ஆனால்;
அவ்வுலகின் நுழைவாயிலிலேயே நின்றிருந்த நான்
காசும் கம்பெனியும் வேண்டப்பட்டதாலா
உள் நுழையாது நின்றிருந்தேன்?
பன்னீர் தெளித்து வரவேற்ற தோரணையில்
இல்லையே அந்த எதிர்பார்ப்பெல்லாம்!
பின், எப்படி நேர்ந்தது
இப்படி நான்
நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்?

சொர்க்கத்தை
வெறும்
குற்றால சீசனாக்கிவிட்டது;
உலகியலறிவும் பற்றாக்குறையும்

Read more...

Sunday, October 13, 2013

கொசு

மிகப் பிரியமான ஜீவன் அது
பிரியத்தைப் போலவே
அதன்மீது நான் எரிச்சலை உமிழும்
சமயமும் உண்டு
எனது இரத்தமே அதன் உணவாவதில்
பெருத்த ஒரு நியாயம் இருக்கிறது
என்ற அமைதியும் உண்டு என்னிடம்
காரணம்:
எனது குற்றங்களின் சாக்கடையே
அதன் ஜன்மபூமி என்பதுதான்

உங்கள் காதுகளைத் தேடிவந்து
அது பாடும் பாடலை நீங்கள் கேட்டதுண்டா?
’யாரறிவார்
பாவப் பிறப்பறுக்கும் அப்பாடலை அது பெற்றவிதம்?’
என வியந்ததுண்டா?
விழிப்பை இறைஞ்சும்
அந்தப் பாடலின் பொருளறிய
நீங்கள் முயற்சித்ததுண்டா?
அப்படியெல்லாம் மெனக்கெடாமல்
’பட்’டென்று
நீங்கள் அதைக் குறிவைத்த அடி
உங்கள் உடம்பின்மீதும் விழுந்ததையாவது
யோசித்தீர்களா?

Read more...

Saturday, October 12, 2013

கடற்கரை நகர்

சின்ன வயதில்
நேராய் கிழக்குநோக்கி நடந்து சென்று
கடலை நான் பார்த்து வருவதுண்டு.
இன்று அந்த இடம், நிலம் விழுங்கி விழுங்கித்
தூரப் போய்விட்டது.
ஏற்கனவே
நலிந்த பகுதியாயிருந்த எமது கடற்கரை
நகரத்தின் சாக்கடை கலந்த ஓர் ஏரி போலானது.
கடலின் பெரும் பெரும் உயிர்களால்
சுத்தமாகி விடாதபடிக்கு தனித்துவிட்டது.
கண்ணெட்டுந் தூரத்திலிருந்த தீவும்
நிலம் தீண்டி தீபகற்பமானது.
கப்பல்கள் வந்து நிற்கத்தகும் கடல் ஆழம் காண
கடலூடே நெடுந்தூரம்
சாலையமைக்க வேண்டியதாயிற்று

இன்று
பொங்கி எழுந்து
நுரை சிலிர்த்து வீசிவரும்
அலைகள் காண,
கால்களை நனைத்து, திரும்பத் திரும்பத்
தன்னுள் என்னை அழைத்துக்கொள்ளும் கடல் காண
இந்த நகருக்குள்ளே பஸ் பிடித்து
இந்நகரைக் கடந்து செல்லவேண்டியதாயிற்று
ஆனாலும்
கடலின் இடையறாத பெருங்குரல் மட்டும்
எங்கும் எப்போதும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது

Read more...

Friday, October 11, 2013

எனது குழந்தைகள்

கொலுசுப் பூச்சிகள் ஒலிக்கக்
குறுகுறு என ஓடிவந்து
என் கண்களைப் பொத்தும் நிஷா.
கண்களைத் திறந்துவிட்டு...
பட்சிகள் சப்தம் கை கொட்டிச் சிரிக்க
இலைகளை ஊடுருவி நிற்பாள் உஷா

காலையில் கண்ணைக் கசக்கி எழுகையில்
கையைப் பிடித்து இழுத்துப் போய்
வால் நட்சத்திரங்களாய்ச் சிந்திக் கிடக்கும்
பன்னீர்ப் பூக்களை வியப்பாள்

விழித்தவுடனேயே
ரோஜாப் பதியனின் முகத்தில்
புதுத் தளிர் பார்க்கும்
என்னுடன் அமர்ந்து
பூவை - அதிலே
கனவிக் கனவிக் களிப்பாள்
சூர்யபிரபா
O

என் அல்ப ரூபத்தில்
அடையாளம் காணமுடியாமல்
பள்ளி போகும் தெருவெல்லாம்
பாராமல் போகும் குழந்தைகள்,
ஓடும் பஸ்ஸில்முன் ஸீட்டுப் பெண்ணின்
தோள்வழி எட்டிக்
கண்டுகொள்ளும்;
சிரிக்கும் எனக்கு

முற்றத்து நிழலில்
வீடு கட்டிச்
சீரும் செட்டுமாய்க்
குடும்பம் நடத்திப்
பிள்ளைகள் பெற்றுப்
பெரிய மனுஷர்களாய்
விளையாடும் வாழ்க்கை

Read more...

Thursday, October 10, 2013

புழு

நட்டநடுச் சாலையில் ஒரு புழு

என்னை வியக்கவைத்தது;
பயம் பதற்றமற்ற நிதானமான அதன் நடை
வேட்டையாடாது, வியர்க்காது
இலைகள் தின்று உயிர் வளர்க்கும்
அதன் வாழ்க்கை.
இயற்கை மத்தியில்
தன்னுள் ஆழ்ந்து
தானே ஆகிய கூட்டில்
சிறகு முளைக்கும் வரை புரியும் தியானம்

சிறு குச்சியொன்றைக் கையிலெடுத்து
அதைச் சீண்டுவேன் விளையாட்டாக;
பயம், பதற்றத்தை நான் அதற்கு ஊட்டுவேன்
சிறுவயதில்
அது துன்புறுவதை அறியாத ஆய்வு ஆர்வம்
சிறுவயதினுள் பெருவயதின் குரூரம்

Read more...

Wednesday, October 9, 2013

மொட்டைமாடிக் கொட்டகையும் ஆன்டெனாவும்

சொர்க்கத்தின் கனி பறிக்க
உன்னி எழுந்து வீறிட்ட
ஆன்டெனா விரல்கள்
காற்று உரத்து வீசும் காலம்
ஆன்டெனாக் கம்பம் பொருத்தப்பட்ட
தூண் சரிந்து
ஆட்டங் காண்கிறது,
குருவிக் குடும்பம் ஒன்றுள்ள
என் மொட்டைமாடிக் கொட்டகை

ஆன்டெனாக் கம்பம் அறையும்போதே
அடி கீறி
மாடியோடு தன் பிடிப்பை விட்டுவிட்டது
அத்தூண்
காற்று உரத்து வீச வீச
அசையும் ஆன்டெனாக் கம்பத்தோடு
அசையும் அத்தூண்
தன்னோடு இழுத்துச் சரித்துவிட்டது
தன் பின்னாலுள்ள தூணையும்

வீசும் காற்று
ஆடும் கொட்டகை
சரிந்த தூண்கள் என்றாகிவிட்ட
இன்று,
விருட்சம் ஒன்றிலிருந்து
பாய்ந்துவந்தது ஓர் ஒளிக்கற்றை.
அந்த ஆன்டெனாவைப்
பாய்ந்து பற்றியிருக்கும்
ஜீவனுள்ள ஓர் ஒற்றைக் கம்பி,
அதனால் மட்டுமே
இன்னும் விழாதிருக்கிறது கொட்டகையும்.
ஆன்டெனாவைப் பிடித்திருக்கும்
முத்திசைக் கம்பிகளில்
ஜீவனுள்ள அக்கம்பியே நடுநரம்பாக
இன்றைக் காக்கும் இன்றாக
அனல் பற்க்கக் கிளர்ந்து நிற்கிறது
அசுரபலத்துடன்

Read more...

Tuesday, October 8, 2013

இனி இவள் உன்னுடையவள்

உள்ளங்கைக் குழிவிலிருந்து
இறக்கிவிடு இறக்கிவிடு எனத்
துடிதுடித்தன விதைகள்

நாற்றங்காலில் வளர்ந்தபடி
வீதி வீதி வீதி என அரற்றல்

வீதிக்கு அழைத்து வந்தேன்
விலங்குகள் விலங்குகள் என நடுக்கம்

வேலிக்கெனச் செலவழிக்க இயலாத ஏழை நான்
முள் விளாறுகளை வெட்டி வேலியமைக்கிறேன்
காய்ந்த முள் விளாறுகளை அடுப்பெரிக்க
பிடுங்கிச் செல்லும் ஏழைகள்…
அவர்களை என்ன செய்ய?
நான்தான் என் வழிமுறையை மாற்றிக்கொண்டேன்

விலங்குகள்.. முன்னங்கால்கள் தூக்கி
எக்கி எழுந்து வாய் நீட்டும்
அவற்றின் வாய்க்கு அகப்படாத உயரம்வரை
என் வீட்டிலேயே வளர்க்கிறேன் இவளை

அன்பானவனே!
இப்போது
இடுப்பிற்கு மட்டும் சிறியதாய்
ஒரு முள் ஆடையை அணிவித்திருக்கிறேன்.
பூமி குளிர மழைக்கும் உன் கரங்களில்
இவளைப் பிடித்துக் கொடுத்துவிட்டேன்.
இதுவரை இவள் என் மகளாக வளர்ந்தாள்
இனி இவள் உன்னுடையவள்

Read more...

Monday, October 7, 2013

ஜானகியின் அதிகாலை

ஜானகி விழித்தெழுந்தபோது
எதைப் பார்த்திருந்தனவோ நட்சத்ரங்கள்
சொல்ல முடியாத ஒரு வியப்பில் முழித்தன அவை

ஆதரவற்றுத் தன்னந்தனியாக இருந்தது பூமி
சூடான கண்ணீர்த் துளி ஜில் என்று தொடுகையாவது போல்
குளிர்ந்திருந்தது பொழுது
நிலவொளியில் கருகருவென்று மேகங்கள்
பூமியைவிட்டு விலகிச் சென்று கொண்டிருந்தன
பூமியின் மிக மெல்லிதான மூச்சுக் காற்றில்
அதிர்ந்து நடுநடுங்கின
அதன் நாசியில் கூடு கட்டியிருந்த
சிலந்தியின் வலைகள்

மோனத்தைக் கிழித்துப் பயத்தை எழுப்பப் பார்த்தது
தென்னை மரத்தின் மீது துயில் கலைந்து
இடம் மாறிய ஒரு கரிய பறவையின்
ஒற்றைக் குரல் – ’கர்!’

அறியாதவோர் உலகில் நுழைந்து
அறியாதவோர் செயலைச் செய்துவிட்டு
முழிக்கும் சிறுமியைப் போல் ஜானகி
சும்மாவாச்சும் ஆள்காட்டி விரலால் பட்டனை அழுத்தி
இரவு விளக்கை அணைத்தாள்
இரவு முடிந்தது!

தினசரிக் காலண்டரின் மேல்தாளை நீக்கினாள்
நிகழ்ந்தது,
அந்த ஒரே செயலில் ஒரு பேரோசையுடன்
ஒரு நாளின் மரணமும்
பிறிதோர் நாளின் பிறப்பும்!

யாவற்றுக்கும் பின்னாலுள்ளதும்
நட்சத்ரங்கள் பார்த்துக் கொண்டிருந்ததுமான
ஒரு பூதாகரமான வெறுமையைப்போல்
நின்றுகொண்டிருந்தாள் ஜானகி,
ஏதோ ஒன்று அந்த வெறுமையிலிருந்து பொங்கி
அந்த வெறுமைமீதே பொழிவது போல்
திடீரென்று குழாய்நீர் சொரியும் ஓசை

ஒரு குடத்தினுள்ளே அந்நீர் சொரிந்து பெருகுவதுபோல்
கூடிவரும் ஒளி

Read more...

Sunday, October 6, 2013

ஒற்றை மரம்

ஒரு மேற்கத்திய இசை நடத்துநனைப் போல்
உணர்ச்சியுடன் கைகளை அசைத்து அசைத்து
உருகிக்கொண்டிருந்தது தனித்த வேப்பமரம் ஒன்று

வாத்ய கோஷ்டி ஏதும் எதிரே இல்லை!

வியர்த்தம் வியர்த்தம் எனக் கரைந்தது
அதன் கிளைகளூடே ஒரு காகம்

ஆச்சர்யத்துடன் அந்த மரத்தை நெருங்கினேன்
அது எழுப்ப விரும்பும் இசையைக்
கேட்க விரும்பியவன் போல் –

தன்னுள்ளே ஏராளமான வாத்யங்களுடன்
தானே இசைத்துக்கொண்டுமிருந்தது அது!

அந்த இசையைத்தான்
இன்னும் என் செவிகள் எட்டவில்லை
காரணம்?
புலன்களுக்கெட்டாத ஒரு கண்ணாடிச் சுவர்!
ஆயினும் என் மனம் குதூகலித்தது
நான் கேளாத அந்த இசைக்கு
அந்த மரத்தின் உறுப்புக்கள் அனைத்தும்
நடனமாடிக் கொண்டிருந்ததைக் கண்டு

திடீரென்று ஓர் அமைதி,
அந்தக் கண்ணாடிச் சுவரின் தொடுகை
அதை உடைத்துக்கொண்டு ஒரு வெள்ளம்
என் செவியையே மூழ்கடித்து
அடித்துச் சென்றுவிட்ட இசைவெள்ளம்

Read more...

Saturday, October 5, 2013

மொட்டை மாடியில் ஒரு கொட்டகை

பறவைகள் சிறகுதட்டி ஆர்ப்பரிக்க,
ஆகா ஆகா என்று மரங்கள் எல்லாம்
தலைகள் ஆட்டி ஆடும் மொட்டை மாடியில்,
அவனது ஓலைக் கொட்டகை மாத்ரம்
அவன் எட்டிப் பார்க்கும்போதெல்லாம்
சாதிக்கிறது அந்த மௌனத்தை!

அதில் ஒரு குருவிக் குடும்பம்
கூடு கட்ட வேண்டுமென்று,
பூ பத்தி தேங்காய் பழங்களை
ஒயிலாகத் தன்னுள் கொள்ளும்
பூஜைக் குடலை ஒன்றை
அதன் ஒயில் குன்றாது தொங்கவிட்டான்

குருவிக் குடும்பமொன்று
குடியேறி விட்டதாவென்று
அடிக்கடி அவன் பார்த்தான்
பாம்புப் படிக்கட்டின் தலையாகி

பூஜைப் பொருள்களற்ற
பூஜைக் குடலையோடு
பூஜிக்கப் படுவோனும்
பூஜிப்போனுமில்லாது
ஒரு பூஜை நடக்கும்
வெற்றுக் கோயிலாக
மாடிமீது அந்தக் கொட்டகை
இன்னும் அதே மௌனத்தில்!

ஒரு நாள் அது நடந்தே விட்டது.
பந்துக்களோடு வந்து படபடத்து நின்ற
ஒரு குருவிக் குடும்பத்தின் கூச்சல்.
அப்போதும் அந்தக் கொட்டகை
அதே மௌனத்தில்!
பறவைகளின் கூச்சலைப்
பரவசமிக்க ஒரு பாடலாக்கிற்று
அந்த மௌனம்

Read more...

Friday, October 4, 2013

மலைக் கோயில்

அடிவாரத்தில் அமர்ந்து
விலா நோக, விழி குத்த
செதுக்கிச் செதுக்கி என்ன பயன்?
”என்ன பயனா?
பார் அந்தப் புன்னகையை!
கல்லில் அகப்படவில்லையா தெய்வம்?”
என்று முறைக்கிறான் சிற்பி

பாட்டாளித் தலைச் சுமைக்காரனுக்குக்
கல்லென்ன? சிலையென்ன? தெய்வமென்ன?
எல்லாமே கழுத்தை இறுக்கும்

பிரதிஷ்டைக்காக
மலையுச்சியை வந்தடைந்த கல் –
இல்லை, சிலை –
இல்லையில்லை, தெய்வம் –
சிற்பிகள், சுமைகூலிகள் மற்றுமுளோர்
அனைவரையும் திகைப்பிலாழ்த்தியபடி

ஆவியாகிக் கரைந்து மறைந்து
வியாபித்தது எங்கும்

Read more...

Thursday, October 3, 2013

ஆப்பிள் மரம்

என் ஜன்னல் வழியே
வானையும் நட்சத்ரங்களையம் மறைத்து நின்றது
ஒரு நூறு பறவைகளின் ஓசைகளுடன்
இலை செறிந்து அடர்ந்து
இருண்டிருந்த ஒரு மரம்

நான் அறிந்த பறவைகளின் ஓசை கேட்டு
இன்புறுகிறேன்,
அறியாத பறவைகளின்
அறியாத ஓசை கேட்கையில்
அந்த மௌனம் –
காரணமற்றுக் கண்ணீர் மல்கவைக்கும்
அந்த மௌனம்…

அறிந்தும் அறியாததுமான
பறவைகளின் கோஷ்டி கானம்
இலைகள் அமைத்த இருளைக்
கொத்திக் கிழித்துக்கொண்டிருக்கும் வேளை,
அந்த இருளின் ஆழத்துள்ளிலிருந்து
ஏதோ ஒன்று
எனக்கு மிக அருகில்
கதகதக்கும் ஜீவனுடன்

எனது பயத்தின் நரம்புகளைப் பிறாண்டியபடி
எச்சில் கனியுடன் ஓர் அணில்.
சர்வ ஜாக்ரதையுடன் அதிநுட்ப உக்கிரத்துடன்
அங்கும் இங்கும் அசைந்தன அதன் கண்கள்
அதன் இயக்கம் பம்மல், தாவல்
விர்ர்ர்களுடன்

வீட்டுக் கூரைகளாய் அமைந்த வெளியில்
என் ஜன்னல் கம்பிகளை முறைத்தபடி
மதில் மீது விர்ர்ரிட்டு ஓடித் தாவி
பறக்கும் வேட்கையில்
சிறகைக் கட்டிக்கொண்டு குதித்தவனைப்போல்
குதித்தது, மண்ணில் விழ விரும்பாது
ஒரு பறவையினுடையதாகி விட்டிருந்தது
அதன் குரல் மட்டுமே

Read more...

Wednesday, October 2, 2013

தனிமை

என் தனிமையைப் போக்கும்
ஒரு மணற்குன்று: விழிமூடிய இமைப் பரப்பு.
நான் போய் அமர்ந்திருந்தேன்:
இமைப்பரப்பைக் குனிந்து
முத்தமிடும் இதழ்வேளை

முத்தமிட்டதை முத்தமிட்டது விலகி நின்று பார்க்கையில்
மெல்ல இமை தூக்கிற்று
ஒரு சுரங்கக் கதவைப்போல் அந்த விழி
உள்ளே: ஒரு மலைப் பிரதேசத்தின்
கிடுகிடு பள்ளத்தாக்கின் அடியில் ஓர் ஓடை
அந்த ஓடையினின்று
என்னை ஈர்க்கும் ஒரு வாசனை
சரிந்து உருண்டு விழுந்துவிடாதபடி
அதீதமான ஓர் ஆர்வம் உந்த
நுண்ணுணர்வு துலங்க வெகு பத்திரமாக
கிடுகிடுவென வந்து சேர்ந்துவிட்டேன்

வந்து சேர்ந்த பின்னும்
குளிராய் நடுங்கிக்கொண்டிருந்த ஒரு தயக்கம் –
இன்னும் நான் கடக்க வேண்டிய தூரமாயிற்று
எங்கே அந்த வழி?

மூக்கு நுனியால் சோதித்து நிச்சயித்துக்கொண்டு
காட்டின் ஒளி நிழலை மீட்டியபடி
தேக்குமரச் சருகுகள் அதை உச்சரிக்க
தனது இரையை நோக்கி
தனது இயல்பான பசியின் கம்பீரம் துலங்க
நெருங்கிக்கொண்டிருந்தது ஒரு புலி
ஓடையின் பளிங்கு நீரில் அதன் முகத்தைக்
கண்ட மாத்திரத்தில்
அலறி அடித்துக் கிடுகிடுவென ஏறி
ஓட்டமாய் ஓடித் தப்பி
வெகுதூரம் வந்து திரும்பிப் பார்த்தேன்:

தூரத்தே நின்று என்னை அழைத்து
என் தனிமையைப் போக்கிய ஒரு மணற்குன்று
விழி மூடிய அந்த இமைப்பரப்பு

Read more...

Tuesday, October 1, 2013

வாசனை

மரங்களின் மடியில்போய் அமர்ந்திருந்தது என் வீடு
இந்தக் குளிர்காலக் காலையின்
நகர்ந்துகொண்டிருக்கும் குளிரை
எனக்காக சற்று பிடித்து வைத்திருந்தன மரங்கள்
இதோ வந்துவிட்டேன் என
அதை எட்டிப்பிடிப்பதுபோல்
என் பாதங்கள் ஒலித்து விரைந்தன
மாடிப்படிக்கட்டுகள் மேல்

செவ்வகமானது இந்த மொட்டைமாடி எனினும்
இன்னும் சில தலைமுறைகளையும்
மேலும் சில அறைகளையும் தாங்க
பூமியில் நன்றாய் அஸ்திவாரமிடப்பட்டது எனினும்
எல்லையற்ற வான்வெளி கண்டு
தன்னைத் துறந்துநிற்கும் பேறு கொண்டதுமாகும்

அந்த ஓய்வுநாளில்
மரநிழல் கனிந்த மொட்டைமாடியின்
ஏகாந்தம் – ஒரு பிரபஞ்ச கானம்
நாசிநுனியை பற்பலவிதமான சுகந்தங்களாய்
வருடக்கூடியது அந்த கானம்

இங்கிருந்து என்னைக் கீழே இழுத்துப் போடும்
மனைவியின் குரல் கேட்காது இன்று
(எல்லாம் வாங்கிப் போட்டுவிட்டேன்
ஒரு மாதத்திற்கு கவலையில்லை)
ஒரு தகராறுக்குச் சாட்சியாக
போலீஸ் அழைத்துக்கொண்டிருந்த
தொந்தரவும் ஒருவாறு முடிவு பெற்றுவிட்டது

கவலைகளைப் போலவே
இந்த நிம்மதிகளும் தொலைந்து
அமர்ந்திருக்கிறேன்

மரங்களிடையே திடீரென்று ஒரு பெரும் சலனம்,
மிகுந்த வேதனையுடன் அடிவயிற்றை இறுக்கியபடி
ஆலகால விஷமொன்றை வாரி விழுங்குவதுபோல
நாசிநுனியில் ஒரு துர்கந்தம்
கீழே சுற்றுப்புறத்தில்
ஒரு தொழிற்சாலையின் கழிவுத்தேக்கம்
என் சுவர்களுக்குள் பூக்கள்
(ஒவ்வொரு பூவின் உறுப்புக்கு நலம் தருவதாகும் எனும்
விபரப்பட்டியல் உண்டு என் மனைவியிடம்)

”இந்த வாசனையை இழுத்து முகருங்கள்
உங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது இது” என்றபடி
என் நாசி நோக்கி நீண்ட அவள் விரல்களில்
இரத்தச் சிவப்பான ஒரு ரோஜா

என் உயிர் உறிஞ்சப்பட்ட வாசனை
என்னுள் நிறைந்து
என் வியர்வைத் துவாரங்களெங்கும் கமழ்ந்தது
ஆரத் தழுவி நின்றேன் என்னை நானே

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP