Tuesday, April 30, 2013

எத்தனை ஆசீர்வதிக்கப்பட்டவன் நான்!

”எத்தனை ஆசீர்வதிக்கப்பட்டவன் நான்!”
எனத் துடித்த ஆருயிரைக்
காப்பதற்கோ நெஞ்சைப்
பற்றிப் பதிந்தன, உள்ளங்கைகள்
தானெழுந்து?

Read more...

விழியிருந்தும்

விழியிருந்தும்
திடமான கை கால்களிருந்தும் –
கண்ணீருகுக்க விடலாமோ,
குறைப் பிறவியாய்
தன் விழிகளையே நம்பியிருக்கும்
குருட்டுத் தாயை?

Read more...

அலை

கண்பார்க்க விரிந்து
கரையைத் தீண்டியது
நீரில் கல் எழுப்பிய அலை.
நில்லாமல் அது
ஒவ்வொரு மண்துகளையும் தொட்டு
புவி முழுக்கப் பரவப்
போராடிக்கொண்டிருந்ததைப்
பார்த்துக்கொண்டிருந்தது
பார்க்கத் தெரிந்த கண்.

Read more...

Monday, April 29, 2013

அந்தி

கண்காணாக்
களி துள்ளும்
வைகறை ஒளிதான் ஒளியோ?

ஒளியும் பொருள்களும் மெல்ல மெல்ல
ஒளியும் பொருள்களும் இழந்து
மண்டையைப் பிளக்கும் வெம்மை தாக்கிச்
சவத்தன்மை கொண்டதென்ன மானுடம்?

துள்ளும் மகிழ்ச்சியில்லை எனினும்
நெஞ்சைப் பிடித்திழுக்கும் இந்த
அந்தி ஒளிமயக்கின்
அற்புத எழில்!
மாண்டு கிடக்கும் மனிதர்கள் எழுந்து
கண்மலர்த்திப் பார்க்கக்
காத்துக் கிடக்கும் நம்பிக்கையோ பரிதாபமோ
பேரிருப்போ தீராக் கருணையின்
பேரறிவுச் சுடர் ஓவியமோ
என் உச்சி குளிர சிரம்வருடி
அன்பே என்று நீ என்னை
அழைக்கும் குரல் தானோ?

Read more...

முத்துச் சிப்பிகள்

அமைதிக் கடலிலாழ்ந்து
அமுது பருகி நிற்கும் விழிகளோ?

கண்மணிகள் பொத்திக்
காக்கும் பேரிமைகளோ?

அய்யமும் துயரமுமாய் சிறக்கணித்து
ஆயும் அரைமலர் மொக்குகளோ?

வியப்பால் விரிந்தலர்ந்த
வாய்த் திறப்போ?
அத் திறப்பு வழி புகுந்து
உட் தாழிட்டுக் கொண்ட மெய்மையோ?

தான் கண்டுபிடித்ததன்
பேழையேயாகிக்கொண்ட இதயமோ?

Read more...

Sunday, April 28, 2013

விண் வரையும் தூரிகைகள்

பறவைகள்
தேர்ந்துகொண்ட நிலம் தேடிப்
பாய்ந்து வந்தமையோ
ஞானம் என்பது?

சுற்றுச் சூழல் பற்றிய
அக்கறை குறைந்த
அழுக்குக் கிராமம்தான்
இந்தக் கூந்தகுளம் எனினும்
பறவைகளைத் தாங்கும் மரம்போலும்
கருணை கொண்டிருப்பது போதாதோ?

துய்க்காதிருப்பார்களோ, மனிதர்கள்
கொட்டு முழக்கங்களும்
ஒலி பெருக்கிகளும் ஒலிக்காத
பறவைகள் மீதான தங்கள் அக்கறைக்குப்
பரிசுபோல்
இயற்கை தங்கள் ஊருக்கு அளித்துள்ள
தெய்வீக அமைதியினை?

ஆயிரம் ஆயிரம் குஞ்சுப் பறவைகளின்
குவாக் குரல் கேட்கவோ
ஒலிகள் அடங்க மனம் கொண்டது ஊரும்?

செவியுற்று வியந்து
இது தங்கள் இடம் தங்கள் இடம் என்றோ
ஓடிவந்து முகாமிட்டனர் ஓவியர்கள்,
குஞ்சு பொரித்து வளர்ந்து
கூட்டிச் செல்லும் பறவைகள் போலும்?

இங்கே பறவைகள்
தங்கள் முட்டைகள்
குஞ்சுகளுக்கு அருகாய்
மரங்களின் மேல் –
தங்களுக்கு எதிரே
கடந்து செல்லும்
பொருளற்ற காட்சிகளைப் பார்த்தபடி,
தன் நிழலும் இப்பூமியைத்
துன்புறுத்தாது வருடிச் செல்ல;
தன்னை விடுத்து
விண் வரையத் தொடங்கியதோ
இப் பூமி தாங்காதென
மேலெழுந்து
விண்ணெலாம் விரிந்த
பெருந் துயரில்
நீந்திக்கொண்டிருந்த பறவை?

Read more...

Saturday, April 27, 2013

காற்றிலசையும் ஒரு வெண்மலர்

அண்டைநிலத்து பூச்சிமருந்தைத் தின்று விட்டு
நீர்த்தொட்டியோரம் மடிந்துகிடந்த மீன்கொத்திச்
சோகம் பரந்த பண்ணைவெளியில்
ஒரு கணமும் சோராத உயர் முயற்சியாய்
பறவைகள் தம் ஊர் அமைக்க –
நீர் புகுந்த தன் குளக்கரைவயலின் ஒரு பகுதியை
தன் பங்குக்கான ஒரு செயல்பாடாகவோ
நீருக்கே கொடுத்துவிட்டான் அவன்?

நீர்க்கரையோரத்து அவன் வீடு
தன்னையும் அவர்களில் ஒருவனாய்
இணைத்துக் கொள்ள வேண்டிப்
பறவைகளிடம் இறைஞ்சிக் கொண்டிருக்கும் கோலமோ?
யாவும் கண்டுணர்ந்து கொண்டிருக்கும் தவமோ?

கவனிப்பாரற்றுக்
கனன்று அலறும் பசி வாய்களோ
மரத்துக்கு மரம்
பறவைகளின் அலகு தீண்டி
தம் இதயம் திறந்து நிற்கும் கனிகள்?

பூமியின் மார்பு திறந்து
தென்னைமரங்களூடே விரைந்துவரும்
வாய்க்கால் நீர் –
தீண்டும் கால்கள் யாவுமே
கடவுளுடையனவாமோ?

”ஓ...வ்!” நீளமான ஒரு பறவைக் குரல் வீசி
”போதும்! வாங்க இங்கே” என்றாள்
சாவா மருந்தருந்திய காதலன்போல்
விக்கித்து நின்றிருந்த தன் துணைவனை
நோக்கி, ஏஞ்சலா. அவளைப்
புரிந்து கொண்டவன்போன்ற அவன் புன்னகையிலும்
”நீயும்தான் சமயங்களில்...” என வெளிப்பட்ட
அதன் தொடர் ஒளியிலும்
”சரி சரி. சாப்பாட்டுக்கு நேரமாச்சு” என்று
அவனோடு அவளுமடைகிற அமைதியிலும்
தவழ்ந்து நின்ற காதல் வாழ்வைக்
கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தது,
யாரோ?

மண்ணில் மகிழ்ந்துறுதி கொண்டு
நிமிர்ந்து, எட்டி, குனிந்து, வளைந்து
சரிந்து, ஏறி, சாய்ந்து,
பற்றி, படர்ந்து, இளைப்பாறி
தங்களோடு விளையாடிக் கொண்டிருந்த
மாமரத்திலிருந்திறங்கி
தாத்தா பாட்டியிடம் ஓடி வந்துகொண்டிருந்தனர்
சூர்யாவும் அதீதியும்.
”தாத்தா பாட்டியையே மறந்துட்டீங்களா
என் மாமரத்து அணிற் குஞ்சுகளா?”

அவ்வளவு பெரிய வானம்
அவள் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.
கழிப்பறை வாளிநீர் மீன்குஞ்சை
ஒரு பாத்திரத்து நீரில் தாங்கியபடி
வற்றாத பாசி பச்சைகளுடனிருக்கும்
கிணற்றை நோக்கி – யாரோ தன்னைப்
பின் தொடர்ந்து கொண்டிருப்பதையறியாதே –
நடந்து கொண்டிருந்தாள் அதீதி.

கட்டக் கடைசியாய்க்
கண்ட்டைந்து விட்ட கோலமோ
காற்றிலசையுமொரு வெண்மலர்போல்
மரங்கள் சூழ
பறவைகள் ஊரமைத்துக் கொண்ட
இந் நீர்நிலை?

Read more...

Friday, April 26, 2013

கொக்கு

நிலைநின்ற நிலையால்
கன்றிச் சிவந்த கால்களும்
இடையறாது கழுவிச் செல்லும் நீரால்
வெண்மை கொண்ட உடலுமாய்
கொக்கு;
நமக்கு தேவதைகளை ஈன்றளித்த தாய்.
சிறகு விரித்தால் வானுலகு
சிறகு குவித்தால் நீர் விரிப்பு.
புழுவையும் பறவையாக்கும்
செயலே உயிர்வாழ்வு.

Read more...

கண்டிலமோ?

வானம் ஊன்றிய
மழை வித்துக்களின் பிறப்பன்றோ
கவின் கொஞ்சும் இவ்வியற்கை?
கவின் கொஞ்சும் இவ்வியற்கை

கண்கலங்கத் தகுமோ?
இருள் விழுத்துமோ கார்மேகம்?

ஊன்றிய உடனே உடையும் மய்யங்களும்
முடிவற்றுத் தழுவ விரியும் வட்டங்களுமாய்
தங்களுக்குள் மோதிச் சச்சரவிட்டுக் கொள்ளாது
கரைந்து மறையும் ஒருகோடி மழை வித்துக்கள்
கண்டிலமோ?

Read more...

Thursday, April 25, 2013

வேலி மூங்கிற் கன்றுகள்

வேலி மூங்கிற் கன்றுகள் வளர்ந்து
நாளும் பறவைகளைக்
கூவி அழைத்தபடியே புதர்களாகி
வனம் நோக்கி நின்றது –
’வனமே நல்வேலி’ என்றமையோ?
இல்லை,
வேலி எனும் நம் திட்டத்தையே
கண்டு கொள்ளாத் திமிறோ?

Read more...

இன்ப நீராடுவதெப்போ?

நான்குபேர் நீரில் குதிக்க
விரிந்த நான்கு வட்டங்கள்
ஒன்றோ டொன்று மோதிச்
சிதைந்து பாய்ந்து
மீண்டும் அவரவரிடமே
நெருங்கிக் கொள்ள
நான்குபேர் கழுத்தைச் சுற்றிலும்
மரணக் கயிராய்ச் சுருங்கி நிற்கும்
வட்டங்கள்.

Read more...

நீர்க்கரை மரத்திலிருந்த ஒரு கனி

கனிந்த போதோ
பொட்டென்று விரைந்து வந்து
தொட்ட போதோ
தன் மையம் அழிந்து
எல்லையில்லா இப்பிரபஞ்ச முழுமையையும்
தழுவ விரியும் வட்டம் வீசியபோதோ
நீர்வாழ் உயிரினம் தவிர
யாரும் அறிய வொணா
நீரடியில் போய் அமர்ந்தது?

Read more...

Wednesday, April 24, 2013

இரத்தம் சிந்தல்

அது ஓர் அரூப உலகம்;
ஆகவே
உருவுடன் அங்கே நுழைய எவருக்கும் அனுமதியில்லை
மரணத்தின் நாவினைப் போல்
அந்த அரூப உலகின் இரும்புகேட் அருகே
நிற்கிறான் ஆயுதமேந்திய அந்தக் காவலாளி

மரணத்தின் நாவுகள் மாமிசம் எண்ணியே
எப்போதும் சப்புக்கொட்டியபடி நிற்கின்றன
உண்மையின் ஈவு இரக்கமற்ற கடுமையுடன்
பூட்ஸ் கால்கள் மற்றும் புஸுபுஸுவென்று மயிரடர்ந்த
முரட்டுக் கைகளில்
அயராத தயார் நிலையில் நிற்கிறது
வேட்டைத் துப்பாக்கி
தப்புதல் என்பதே கிடையாது

உருளும் சிறு சிறு கற்கள்
மிதிபட்டு அலறும் புற்கள்
நொறுங்கிக் கதறும் சருகுகள்
மரங்களெங்கும் பதறும் இலைகள்

யாவும் அமைதிகொள்ளும் அவ்வினாடி
சொற்கள் பெருமூச்செறியும்
குறிபிசகாத் துல்லியத்தில் குவியும் கவனம்
விரியும் மௌனம்

வராதே! வராதே! ஐயோ வராதே!
உன் தாகம் எத்துணை புனிதம் எனினும்
உன் உடல் எத்துணை அழகியதாயினும்
என் மானே!
அவ்வுடலோடு ஒடிவராதே இங்கே

உன் தாகம் தணிக்க நிற்கும் இந்த நீர்நிலை
உருவமற்ற வெறுமை ஒன்றின் பார்வை
உன் குருதியால் இதனைக் கலங்க அடித்துவிடாதே

Read more...

Tuesday, April 23, 2013

கடவுள் சித்தம்

”உன்னுடைய எழுத்தாளர்கள், புத்தகங்கள்
படைப்புக்களைச சொல்”
(நான் உன்னைப் புரிந்து கொள்ள)
என்று நட்புக்கரம் வீசியபோது
நினைவில் தட்டியது யாரோ ஓர் அறிஞன் சொன்னது:
”உன் நண்பர்கள் யார் என்று சொல்
நான், நீ யார் என்று சொல்கிறேன்”

அன்று இரவு கடவுள் வந்தார்
”உன் உலகைப் பார்த்தேன்
உன்னைப் புரிந்துகொண்டேன்” என்றார்
உதட்டைப் பிதுக்கியபடி
”அய்ய்யா ஆஆ...” என்று அலறிவிட்டேன் அலறி
””இதோ, ஏதுமறியாத இந்தக் குழந்தையைப் பாருங்கள்
இதற்காகவாவது நீங்கள் ஏதாவது செய்தாக வேண்டும்”
என்றேன். என்னை ஊடுறுவி அறுத்தது
அவர் புன்னகை, அதே உதட்டுப் பிதுக்கல்
இரக்கமே தெரியவில்லை அவர் முகத்தில்

Read more...

குளியலறைக் கூரை

நெருக்கும் நான்கு சுவர்கள்தான்
எனினும்
வாயில் உண்டு; கதவு உண்டு;
எனினும்
கூரையில்லாதிருந்தது எங்கள் குளியலறை.
எனினும் – அப்படியிருக்கையில் தான் –
அந்தப் பாட்டு எழும்புகிறது,
வானத்தின் அம்மணப் பார்வையும்
குளியலறையின் அம்மணப் பார்வையும் இணைந்து

இன்று, மாடியறையின்
கீழ்நோக்கிய பார்வையின்
ஆபாசம் தவிர்க்க என
ரெண்டு தென்னந்தட்டியை எடுத்து
வெடுக்கென அணிந்துகொண்டது குளியலறை
அதுவே, பாட்டு எழும்பத் தவிக்கும் ஓர் ஊமை வாத்யம்
அதுவே, காலத்தால் கெட்டு பொத்தலாகி
தொட்டித் தண்ணியை அழுக்காக்கிக்கொண்டிருக்கிறது

கர்ப்பிணி மனைவி
மாடிமீதமைந்த ஸ்டோர் ரூம் ஏறி
மாற்றுக்கூரை எடுத்து வரவும் மாற்றவும் இயலாதவள்
”கூரையை மாற்றுக மாற்றுக” என என்னிடம்
ஒரு கோடி முறை உரைத்து விட்டாளாம்!
”இன்று ஞாயிறு.
நானும் உதவுகிறேன் உங்களுக்கு
கண்டிப்பாய் மாற்றுக” என்ற அவள் குரலுக்கு
இனியும்செவி சாயாது நின்றால்
என்ன மனிதன் நான்?

Read more...

Monday, April 22, 2013

வெளிக்கதவின் மதில்மேல் ஓர் அணில்

அகலத் திறந்திருந்தது வரவேற்பறையின் வாயில்
வீடு பெருக்கியவளின் கைங்கர்யம் அது
மூட்டமாய்ப் பொங்கிய தூசுகளை
வாயிலை நோக்கி அடித்து விரட்டியது
ஜன்னல் வழியாய்ப் பாய்ந்துவந்த காற்று

பளிச்சென்று துலங்கிய வெளிக்கதவின் மதில் மீது
ஒரு குஞ்சு அணில் பிள்ளை
மனிதனைப் போலவே
முன்கால் இரண்டையும் கைகளாக்கி
ஏதோ ஒன்றைக்
கடித்துத் துருவிப்பார்த்துக்கொண்டிருந்தது

திடீரென விவாதம் அணைந்த என் முகம்
சுட்டிய அக்காட்சியைக்
கண்டாள் என் மனைவியும்
”இந்த அணிலை
ஏற்கனவே நான் பார்த்திருக்கிறேன்” என்றாள்
”இருக்கவே இருக்காது”
”அதெப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?”
மீண்டும் கிளம்பிற்று விவாதப் புழுதி
”இதை அந்த அணிலிடமே கேட்போமா?” என்றேன்

அணில் திரும்பிப் பார்த்தது எங்களை
இயங்கும் சலனப்படக் கருவிமுன்
விளம்பும் கவிதை நட்சத்ரம் போல்
”எனது விழிப்பு, துறுதுறுப்பு, துருவும் மனம்
மற்றும் புத்துணர்வுடன் கூடிய
எனது ஆரோக்யத்தின் ரகசியம்
நான் எப்பொழுதும்
என் உயிர் வாழ்வுக்கு அனாவசியமான
அன்றாட வாழ்வின் நிகழ்ச்சிகளைச்
சற்றும் சுமந்து கொண்டிருக்காததுவே”
என்றது அந்த அணில்

Read more...

Sunday, April 21, 2013

அறைக்குள் ஒருவன்

முதல் மழைக்குப் பூமிசெய்த எதிர்வினையை
நான் முகர்ந்துள்ளேன் ஆகவே
சொல்லத் தெரியாதவன் எனினும்
அனைத்தையும் அறிந்தவன்

குளிர்ந்த காற்றுடன் மழை வீசிக்கொண்டிருந்தது அன்று

ஜன்னல்கள் அடைக்கப்பட்டு மின்விளக்குகள் தூண்டப்பட்ட
பாதுகாப்பான அறைக்குள் நான்
ஸ்வெட்டர், மஃப்ளர், இத்யாதிகளுடன்.
எல்லாப் பாதுகாப்புகளையும் மீறி
எதிலும் நுழைந்துவிடுகிறது மழை

பாதுகாப்புத் தடைகளையெல்லாம் மீறி
சந்தித்துக் கொள்ளும் ’காதலர்’களைப்போல்
ஜில்லென்று ஸ்பரிசித்துக்கொண்டோம்
மழையும் நானும்

மயிர்க்கால்களெல்லாம் சிலிர்த்தபடி
மரங்கள் மழையை ஏற்பதையும் ஆனந்தமாய் நனைவதையும்
கண்டிருந்ததை நினைத்துப் பார்த்தேன்,
’காதல்’ நாட்களை நினைவுகூரும் ஒரு நடுவயதின்னைப் போல

வானம் பூமியெங்கும் மழையால் எழுந்த
ஒலிகள் அனைத்தையும்
என் அறைக்குள்ளிருந்தே நான் கேட்டேன்
பழுத்து ஒடுங்கி அமர்ந்த ஒரு முதியவனைப்போல

மழையின் பேச்சு என்ன என்றோ
என்ன நோக்கில் அது இப்படிப் பெய்கிறது என்றோ
பூமியுடன் அது நடத்திய உரையாடல் என்ன என்றோ
சொல்லு சொல்லு என்று அதை நான் நச்சரிப்பதில்லை
புரிந்துணர்வுமிக்க பண்பட்ட காதலனைப்போல
கம்மென்றிருந்தேன்.

தாகத்துடன் எழுந்து தண்ணீர்ப்பானையை நோக்கி நடந்தேன்
பருகினோம் நாங்கள் கேள்விகளற்ற வாயால்
ஒருவரை ஒருவர்

Read more...

Saturday, April 20, 2013

பரத்தையர் வீதி

கண் தெரியாதவள் எனினும்
ஒளிபொருந்தியவை அவளுடைய சொற்கள்
”பூட்டிய கதவையே பார்த்துக்கொண்டு
திறந்திருக்கும் கதவைத் தவறவிடாதே”
என்றாள் ஹெலன் கெல்லர்
பதிவிரதையர் தெருக்கள் நீங்கி
பரத்தையர் வீதிக்கு வந்தேன்
எனக்கு வயது இருபத்தைந்து
இன்னும் பெறவில்லை ஐயா அந்த அனுபவம்

ஒரு நூறு மங்கையர் ’விரகதாபத்துடன்’
என்னை அழைக்க, ஒருவரையும் தொடாது
என் இல் வந்து அழுதேன், அவர்கள் அத்தனை பேரும்
என்னால் கைவிடப்பட்டு வாடும்
என் மனைவியர்தாம் என்பதுபோல்

மறுநாள் துக்கச் சிலுவையுடன்
அவர்கள் மத்தியிலே நான் நடந்துசெல்ல
அவர்களில் ஒருத்தி என்னை அறிந்தவளாய்
கோபத்துடன் என்னைப் பிடித்துத்
தன் வீட்டுக்குள் இழுத்துச்சென்றான்:
என் பாக்கெட்டைத் துழாவி
இருந்த காசுகளைக் கைப்பற்றினாள்
அன்று நான் பெற்றுக்கொண்டேன் ஐயா,
அவளிடமிருந்து அந்த அனுபவத்தை

இன்று என் மனைவியின் பெயரைப் போலவே
அவள் பெயரையும் நன்கு அறிவேன்
ஒரு சாதாரண வாழ்வின்
சாதாரண மனிதனய்யா நான்

Read more...

Friday, April 19, 2013

இந்திய சென்சஸ் – 1991

தாழ்ப்பாளிட்ட கதவு முன்
அழைப்பு மணியை அழுத்து முன்னே
எகிறிக் குதிக்கும் நாய்க்குரைப்பு
அதிரப் பின்தொடரும்
யாரது என்ற அதட்டல்

நான் -
யாசகனல்ல;
ஆயுதம் காட்டி
உம் பொருளை அபகரித்துப்போக வரும்
கொள்ளைக்காரனுமல்ல;
நான் ஒரு கணக்கெடுப்பாளன்
அரசாங்க ஊழியன்
தயவுசெய்து கதவைத் திறவுங்கள்

கணக்கெடுத்து என்ன செய்யப்போகிறீர்கள்?

எவ்வளவு மக்கள்
எப்படி வாழ்கிறார்கள்
என்று தெரிந்துகொள்வோம்

தெரிந்து என்ன செய்யப் போகிறீர்கள்
என்றுதான் கேட்கிறேன்

நான் வெறும் கணக்கெடுப்பாளன் மட்டுமே
என்றபடி கவனமாய்
அவர் கேட்டை நான் தாழிட்டுச் சென்றேன்
கணக்கை முடித்துச் செல்லும்போது

2
அம்மா,
நான் உங்கள் நலங்களையெல்லாம்
விசாரிக்க வந்தவனல்ல;
அரசாங்கப் படிவங்களை
பூர்த்தி செய்யமட்டுமே பணிக்கப்பட்ட
ஒரு எண்; கணக்கெடுப்பாளர் என்பது பெயர்

உங்களிடம் காணும் அறியாமையும்
நம்பிக்கையும் நப்பாசையுமல்லவா
என்னை ஒரு ரட்சகனைப் போல்
உங்கள் முன் நிறுத்துகிறது?
உங்கள் சிறுசிறு தேவைகளை நிறைவேற்ற
நான் இந்த வார்டு கவுன்சிலர் கூட இல்லை
நீங்களாய்ச் சுயம்வரித்துக் கொண்டதுதானே
இந்த வாழ்க்கை, இந்த அரசு?
பின் என்ன?
எது இருந்தாலும் இருக்காவிட்டாலும்
உங்களிடம் இருக்க வேண்டியது;
அறியாமை அல்ல; சுயபோதம்.
நம்பிக்கையல்ல; செயல்பாடு.
நப்பாசையல்ல; உறுதி.

இவையே உங்களை ரட்சிக்க
உங்கையே
உங்கள் ரட்சகனாக மாற்றவல்லது

இவ்வளவையும் நான் சொல்வது
உங்களிடமிருந்து நான் தப்பித்துக் கொள்வதற்கல்ல
இப்போது எனக்கு என் முன்னுள்ள நிதர்சனம்:
உங்கள் அறியாமையும் நம்பிக்கையும் நப்பாசையுமே.
நான் தப்ப விரும்பாதவன்.
ரட்சகன் இல்லை எனினும்
ரட்சிப்பின் மின்னலைத் தொட்டுணர்ந்தவன்.
உங்கள் ஒவ்வொருவர் வாசல் விட்டிறங்கும்போதும்
இக்கணக்கெடுப்போடு என் வேலை
முடிவுறாத ஏக்கத்தோடே செல்கிறேன்

3
பொறுப்பின் சுமை முழுவதையும் அயராது ஏற்றபடி
ஒவ்வொரு வாயிலாய் ஏறி இறங்குகிறேன்
நீயா? இங்கேயா? எனத் திடுக்கிடும்படி உன் பிரசன்னம்
நம் காதல்; அது ஒரு காலம்

இன்று பிரிவற்ற நேசத்துள் நான் ததும்பி நிற்கிறேன்

சொல்;
உன் குடும்பத் தலைவரின் பெயர் என்ன?
எவற்றால் கட்டப்பட்டுள்ளது உன் வீடு?
அதன் சுவர், கூரை, தரை – விபரமாக.
வாடகையா? சொந்தமா?
தண்ணீர் வசதி எப்படி?
குழாய் நீரா? கிணறா?
எரிபொருளாய் எதை உபயோகிக்கிறாய்?
எத்தனை அறைகள்?
மொத்தம் எத்தனைபேர் கொண்டது உன் குடும்பம்?

என் பணி முடித்து நான் நகரும் போதெல்லாம்
என்னுள் கனலும் துக்கம்;
கேள்விகளற்று
என் கண்களாலே குறித்துக் கொள்ளமுடியும்
உன் வீட்டின் சுவர், கூரை, தரை இவற்றின்
தரவிபரம் போல்
என் பார்வை கிரகித்த எல்லா விபரங்களுக்கும்
என்னிடம் படிவம் இல்லையே என்று

Read more...

Thursday, April 18, 2013

ஓய்வுபெறும் ஆசிரியைக்கு விடைகூறல்

கோடைக் கொடுமைக்கு ஆறுதலளிக்கவோ
ஓய்வுபெறும் இந்த ஆசிரியைக்கு வாழ்த்துக் கூறவோ
வேம்பும் சரக்கொன்றையும் குல்மோஹரும்
பூச்சொரியும் இந்தக் காட்சி!

இக்கோடை விடுமுறையோடு
தன் பணியினின்றே ஓய்வுபெறுகிறாள் இவள்
58 வயதாயிற்றல்லவோ என்கிறது அரசாணை
ஐயையோ இவள் சின்னஞ்சிறுமி
எனக்கு இது நன்றாகத் தெரியும்

’கற்றுக்கொடு இவர்களுக்’கென
காலம்இவளைக் குழந்தைகள் முன் தள்ளியதால்
இவள் தன்னை ஓர் ஆசிரியராகவும்
குழந்தைகளைவிடப் பெரியவள் ஆகவும் எண்ணி
அப்பாதையில் நெடுந்தூரம் சென்று
ஓர் ஏமாற்றத்துடன் இன்று
உணர்கிறாள் தன்னை ஒரு குழந்தையாக
முதன்முதலாய் பள்ளிக்குள் நுழையும்
சின்னஞ்சிறு குழந்தையாக

Read more...

Wednesday, April 17, 2013

படுகொலை மாநகர்

உயிரின் வெதுவெதுப்பை அணைத்துக்
குளிரச் செய்து விடுகிறது புறவெளி
அரிவாள் வெட்டு விழுந்த உடம்பாய்
குருதி வீசிச் சிலிர்க்கின்றன அனுபவங்கள்

கொலைப்பட்டுக் கிடந்த கோரத்தை வந்து
சுவாரஸ்யத்துடன் மொய்க்கும் ஈக்கள்தாமோ
நம் மக்கள்?
வெறும் ஈ விரட்டிகள்தாமோ இந்தக் காவல் துறையினர்

கால்கள் மட்டுமே உள்ளவன்போல்
நகரமெங்கும் அலைந்துகொண்டிருந்தான் ரங்கன்
கைகள் மட்டுமே உள்ளவன் போல்
அடிக்கடி கைவிலங்கோடு
வந்து போய்க்கொண்டிருந்தான் ஆண்டி
தலை மட்டுமே உள்ளவன் போல் விழி உருட்டி
ஆண்டிகளையும் ரங்கன்களையும் கொண்டு
ஆட்களை ஒழித்துக் கொண்டிருந்தான் அரசியல்வாதி

நாற்சந்தியில் பட்டப்பகலில்
கைவேறு கால்வேறு தலைவேறாய்க்
கொலைப்பட்டுக் கிடக்கும் மனிதனைக் கண்டு
அதிர்ச்சியடைவதே இல்லை இந்நகர மக்கள்

ஒவ்வொரு கொலையும் ஒரு வெட்டுக்காயம்
எந்த வெட்டுக் காயமும்
’படக்’கென ஆறிவிடும் சில மணி நேரத்திற்குள்
எத்தனை வெட்டுக்களாலும்
கொல்லவே முடியாத உயிர் இந்த நகர்

பாவத்திலும் மன்னிப்பிலும் காலமில்லை
பாவங்கள் உணர்ச்சிவேகத்தாலும்
மன்னிப்பு ஆழ்ந்த உணர்ச்சி அமைதியாலும்
நிகழ்கின்றன
பாவத்திற்கும் மன்னிப்பிற்கும் இடையே
காலமேயில்லையே,
பின் எப்படி, எங்கிருந்து வந்தது
பிணியும் அவலமுமிக்க இந்தக் காலம்?

ஓங்கி உயர்ந்து தழைத்து ஒலிக்கிறது
பாவமன்னிப்பு நல்க நிற்கும் கோவில் மணி,
ஆண்டிகளையும் ரங்கன்களையும்
சாணக்யர்களையும் ரட்சிக்க.
ஆண்டிகளும் ரங்கன்களும்
அரசியல் சாணக்யர்களும் இருக்கிறார்கள் அப்படியே,
பாவமன்னிப்பு வழங்கும்
அந்தக் கோவில்களை ரட்சிக்க

Read more...

Tuesday, April 16, 2013

அரிச்சுவடி

அழுவோம், சிரிப்போம், ஆச்சரியப்படுவோம்;
உணர்ச்சியற்று மரத்துப்போதல் மட்டும் வேண்டாம் நமக்கு!

மோசமான நிர்வாகம்
கவனிப்பாரற்ற குடும்பச் சூழல்
காசுக்காய் காலங்கழிக்கும் ஆசிரியர்கள் என்று
ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கூடம்
இந்த உலகம்; சரிதானா?

வாங்குகிற சம்பளத்திற்கு உழைக்காத
குற்றவுணர்ச்சியால் துவண்டுகொண்டிருக்கிறது
நமது காலம்; சரிதானா?
சரியில்லையென்றால் மன்னியுங்கள் என்னை
அத்தகையோர் சற்று விலகிக் கொள்ளுங்கள்

இடம் மாறி நான் உங்களோடு சேர முடியுமா?
முடியாது, கூடாது

பாருங்கள் இங்கே 1 லிருந்து 8 வரை
எந்தப் படியில் நிற்பவர் ஆனாலும்
அவர்களுக்குத் தேவைப்படுகிறது அரிச்சுவடி

பல்துறை அறிவின்
வண்ணங்களும் விஸ்தீரணமுமான
உபயோகமற்ற எனது நீண்ட மேலங்கியைத்
தூர எறிந்ததுதான் தாமதம்
ஒடிவந்தன குழந்தைகள் என்னோடு உறவாட

அப்போது பார்த்திருக்கிறீர்களா
அவர்கள் முகத்தில் வீசும் ஒளியை?
அந்த ஒளியைப் பிடித்து எடுத்துச் செல்லுங்கள்
ஆசிரியர்களே, உங்கள் ஆய்வுக்கூடத்திற்கு

பாடத்திட்டத்தைப் பின்பற்றுவதிலும்
படிவங்களை நிரப்பி ஒழுங்காக வைத்திருப்பதிலும்
இப்போது இவன் ரொம்ப மோசம்.
என்றாலும் அந்தக் குற்ற உணர்ச்சியை
யாரோ என்னிலிருந்து தூக்கி எறிந்து விட்டார்கள்

நான் இப்போது செய்வதெல்லாம் என்ன?
சொல்லத் தெரியவில்லை ஆதலால்
’அன்பு’ எனும் சொல்லால் குறிக்கிறேன் அதை இப்போதைக்கு
அதற்குப் பெறுகிறேன் சம்பளமாய் இவ்வுலகனைத்தையும்!
என்னிலிருந்து யாரோ அதைக் கற்பிக்கிறார்கள்
என் மாணவர்களுக்குள்ளிருக்கும்
ஒவ்வொரு ’யாரோ’க்களுக்கும்!

உலகின் எந்தப் படியில் நீவிர் நிற்பவர் ஆயினும் சரி
உங்களுக்குத் தேவைப்படுவதும்
இந்த அரிச்சுவடிதான் இல்லையா?

Read more...

Monday, April 15, 2013

கருப்புப் பறவைகளும் வெண்முட்டைகளும்

சென்றமுறை இந்தக் குல்மோஹர் மரம்
பாதுகாப்பான அடர்த்தியற்றிருந்ததால்
கட்டிய கூட்டைப் பாதியிலேயே விட்டுவிட்டுச்
சென்றுவிட்டன அந்தக் காகங்கள்

அது எங்களின் துக்கமாக இருந்தது

இப்போது வந்து கூடுகட்டியுள்ளது
அதே கறுப்புப் பறவைகள்தாம்!

அவை வந்து வந்து தங்கிப்போவது
தந்த ஆனந்தத்தோடு, அது இடப்போகிற
முட்டைகளை, குஞ்சுகளைக் காணப்போகிற
ஆனந்தத்தோடு, உயர்ந்து அடர்ந்த கிளையில்
செம்மையாய் அமர்ந்திருந்த அதன் கூடுநோக்கி
என் சின்ன மகளும் நானும் அண்ணாந்தோம்

கூட்டுச் சுள்ளிகளின் இடைவெளியூடே
காட்சி தந்தது முட்டை!
”இல்லை, அது ஒட்டை” என்றாள் என் மகள்;
புதிதாக அணிந்திருந்த என் கண்ணாடிக் கண்களைப் பார்த்து
”அடக் குருட்டு அப்பாவே” என்றாள்

கூர்ந்து நோக்கியவாறு நிற்கவே
சபிக்கப்பட்டவனாயிற்றே நான்!

அது ஒரு ஒளி போலல்லவா தெரிகிறது?
இல்லை,
கூட்டை ஊடுருவித் தெரியும் வெறும் வெளிதானோ?

”முட்டை, ஓட்டை, ஒளி, வெளி
யாவற்றையும் இடும், இட்டு
அடைகாக்கவும் செய்யும்.
கவிஞர் வீட்டுக் காகங்களில்லையா” என்றபடி
ஈரக்கைகளைத் துடைத்துக் கொண்டே வந்த
என் மனைவியும் எங்களோடு நின்று அண்ணாந்தார்

அது, எங்களது துக்கத்தின்
விடிவெள்ளியாக ஒளிர்ந்தது அப்போது


’பூக்கள் கண்காட்சி’ என்றொரு ஓவியம்

வெற்றுத்திரைச் சீலைமீது பொழிந்தது
வீறுகொண்ட காமம்.
முடிவற்ற வண்ணங்களில் எண்ணற்ற பூக்கள்
அவை மலர்ந்தவைபோல் தோன்றினாலும் –
என்ன சாபமோ அது –
மலர்தலறியாத விபரீத மொக்குகள் அவை.
மலர்தலற்று உள் அழுகி நாறும் மொக்குகள் –
வியர்வை நாற்றம், இரத்தவாடை, பிணவாடை,
புழுங்கல் வாடை, மல நாற்றம், மருந்து வாடைகள்
போதை நெடிகள் இன்னபிற, இன்னபிற

ஆனால் அந்த வண்டுகள்!
நறுமணத்தால் ஈர்க்கப்படும் வண்டுகள்
துர்நாற்றத்தால் விரட்டியடிக்கப்படாததென்ன!
மிக ஆழமானதுதான்
மலர்களுக்கும் வண்டுகளுக்கும் இடையேயுள்ள பிணைப்பு!

கூம்பி உள் அழுகி நாறும் மொக்குகளைச் சுற்றிச் சுற்றித்
தாளாத வேதனையுடன் அரற்றும் ஒரு கருவண்டு.
என் சின்னஞ்சிறு கேன்வாஸில்
அது எழுந்து தன் சிறகு விரித்துப் பறப்பதற்கும்
இருக்கிறதே வானம் என்று அதிசயித்து நின்றேன்
அவ்வேளை
மலர்ந்தது
ஒளிவெள்ளம் போலொரு வெள்ளைப்பூ
வானமும் பூமியும் சந்திக்குமொரு
கற்பனைக் கோட்டிலிருந்து எழுந்தது அது

சாபவிமோசனமுற்றன மலர்கள்!

Read more...

Sunday, April 14, 2013

எனது சைக்கிள் திருடனுக்கு ஒரு கவிதை

நண்பா,
பூமியில் நான் கால் பாவாதபடிக்கு
என்னைச் சுமந்து செல்லும்
மறைக்கப்படாத ஒரு ரகசியம் அது.
தவறுதான்; அதை நான் பூட்டி வைத்துப் பழகியது

என்னை மீறிய ஓர் அபூர்வப்பொழுதில்
அது தனது அனாதி கோலத்தில் நின்றிருந்தபோது –
அதை நீ கவர்ந்து சென்றுவிட்டாய்
நான் அதைப் பூட்டி வைத்தது போலவே.
எனது துக்கம்; நாம் இருவருமே குற்றவாளிகளானதில்

அந்தச் சிலுவையுடன்
கெண்டைக்கால் சதைகள் நோக
பூமியில் எனது தூரம் கடக்கப்படவும்;
உனது தூரம் நெடுந்தொலைவு ஆகிவிடும்போது –
வாகனம்தான் எனினும் –
உன் கால்களும்தான் நோகும்.
நண்பா,
பூமியில் நம் சுக – துக்கத்தின் கதை இவ்வளவுதானே!

பள்ளத்தை நோக்கிப் பாயும் வெள்ளம்;
வெற்றிடத்தை நோக்கி ஓடி வரும் வாயு;
துயர் நோக்கிப் பாய்ந்து வந்தது கருணை;
”இதை வைத்துக் கொள்ளுங்கள்,
நீங்களாய் இன்னொன்று பெறும் வரை
அல்லது உங்களுடையது மீட்கப்படும்வரை.
நன்றியுணர்வாலோ திருப்பிக் கொடுக்கப்பட
வேண்டுமென்ற கடப்பாட்டுணர்வாலோ
உங்களைத் தொந்தரவு செய்து கொள்ள வேண்டாம்
அவசரமின்றி சிரம்மின்றி இயல்பாய்
நீங்கள் ஒன்று பெற்றுக் கொள்ளும் வரை
இதை வைத்துக்கொள்ளுங்கள்.”

அது வெறும் வாகனம் அல்ல;
இரு நண்பர்களுக்கிடையேயுள்ள உறவு;
துயர் நோக்கிப் பாய்ந்து வந்த கருணை;
அவ்வளவு அழகாய் அற்புதமாய் புத்தம்புதியதாய்
ஆனந்தமாய் இருந்தது அது

எனது நண்பனே,
மதிப்பிற்குரிய எனது சைக்கிள் திருடனே,
இப்போது முன்னெப்போதையும்விட
அதிக அளவில் அச்சத்தின் விலங்கால்
நான் பூட்டப்பட்டதை உணர்கிறேன்.
இப்போது என் சுற்றுமதிலுக்குள்ளும் கூட
அதைப் பூட்டி வைக்கிறேன்.
அந்த வாகனத்தை விட்டு நான் இறங்கும்போதெல்லாம்
நட்பு காட்டும் உன் புன்னகையில் நான் வெட்குகிறேன்
எனது துக்கம்; நாமிருவருமே குற்றவாளிகளானதில்

மதிப்பிற்குரிய நண்பனே!
’மதிப்பிற்குரிய’ என்று ஏன் அழைக்கிறேன் என்றால்
உன் மீது எனக்குப் பகைமையோ அன்போ இல்லை.
என் வாகனத்தை நான் பெற வேண்டும் என்ற
நியாயமான உந்தலால் போலீஸில் புகார் செய்கிறேன்.
அவர்கள் கடமை வீரர்கள். அவர்கள் உன் மீது
என்னைவிட மேலும் ஒரு மடங்கு மதிப்புடையவர்கள்.
என் வாகனத்தை மீண்டும் புதியதாய்
எனக்குப் பெற்றுத்தருவதற்குக் காரணன் நீயல்லவா?

என் வாகனத்தைப் பெற்றுக்கொள்ள
காவல் நிலையம் வந்தபோது, அப்படியே
உன்னையும் பார்த்துப்போக நின்றேன்
கண்ணாடியில் தெரியும்
பிம்பம் தன் உருவை உற்றுப் பார்ப்பது போல்,
சிறைக் கம்பிகளுக்கு அப்பால் நீ இப்பால் நான்

அந்த இரும்புத் திரையைத் தொட்டேன்.
எத்தனையோ மெல்லிய திரைகளைத் தொட்டிருக்கிறேன்
அப்படி ஒரு மெல்லிய திரைதான்
இப்படி இரும்பாகி விட்டிருக்கிறது
எனினும் தர்சனத்தை மறைக்காத இரும்புத்திரை அது
என்னுள் ஒரு கொந்தளிப்பு, அதை உடைத்துக் கிழிக்க

Read more...

Saturday, April 13, 2013

பந்தல்காரர்கள் விளக்குக்காரர்கள் பூக்காரர்கள்

வெற்றுக் காகிதமும் திறந்த பேனாவுமாய்
ஜன்னலருகே நான் இருந்தேன்
வாட்டசாட்டமான மனிதர் சிலர் வந்தார்கள்
மூலைக்கு மூலை குழி தோண்டி
நட்டார்கள் கம்பங்களை
கையெட்டுந் தூரத்தில் விதானத்தை அமைத்துவிட்டு
கம்பத்தில் ஏறிநின்று உயர்த்தினார்கள் விதானத்தை
இன்னும் சிலர் வந்தார்கள்
சுற்றி வயரிங் செய்து விளக்குகளைப் பொருத்திவிட்டு
பிரதான மின்சாரத்துடன் சுவிட்சுகளை இணைத்துச்
சரிபார்த்து திருப்தியுடன் சென்றுவிட்டார்கள் அவர்களும்
பூக்காரர்கள் வாந்தார்கள்
பூச்சரங்களைத் தொங்கவிட்டுவிட்டுப் போய்விட்டார்கள்
இன்னும் சிலர் வந்தார்கள்
விளக்குகளைப் போட்டார்கள்; தூண்டினார்கள் இசைத் தட்டை
இரும்பு நாற்காலிகளில் அமர்ந்தார்கள்
ரொம்பப் பெரிய எதிர்பார்ப்பு அவர்கள் முகத்தில்
ஒலிபெருக்கியில் ஓர் உயர்தரக் கலைஞனின் பாடல்
அந்த இடத்திற்கு வந்து அவன் பாடவே மாட்டான் என்று
இசைத்தட்டில் அவனைச் சிறைப்பிடித்திருந்தார்கள்
படோடபமான ஆடைகளுடனும் மலர்மாலைகளுடனும்
மணமக்கள் வந்தார்கள்
சந்தோஷமோ சந்தோஷம் அவர்கள் முகத்தில்
அவர்களைச் சுற்றி உற்றார் உறவினர்கள்
அவர்களும் அவ்வாறே
பரபரப்படைந்து எழுந்தனர் இரும்பு நாற்காலிக்காரர்களும்

ஒருவரை ஒருவர் பார்த்து முகம் மலர்ந்தனர்
மணமகன் மணமகளுக்குத் தன் நண்பர்களை
அறிமுகம் செய்தான்; மணமகளும் அப்படியே
அதெல்லாம் வியர்த்தம், வியர்த்தம்.
மகிழ்ச்சியையும் நன்றியறிதலையும் தவிர
வேறு எந்த உணர்ச்சியுமே நடமாடவில்லை அங்கு
”மறக்காமல் எல்லோரும் சாப்பிட்டுவிட்டே செல்ல வேண்டும்”
என்றார்கள், துக்கமும் அதிருப்தியும் நிலவாத
அவ்விடம் தங்களுக்கானதில்லை என்பதுபோல்
அங்கில்லாதிருந்தார்கள்
பந்தல்காரர்கள் விளக்குக்காரர்கள் பூக்காரர்கள்

நான் எனது கவிதையை எழுதி முடிக்கும்போது
எல்லோரும் கலைந்துவிட்டிருந்தார்கள்
வாட்டசாட்டமான அந்த மனிதர்கள் வந்தார்கள்
பந்தலைப் பிரித்துக்கொண்டு சென்றார்கள்
விளக்குக்காரர்கள் வந்தார்கள்
பிரித்துக்கொண்டு போனார்கள்,
பூக்காரர்கள்தான் வரவில்லை யெனினும்
பூச்சரங்களும் கழட்டி எறியப்பட்டுவிட்டன

கம்பங்கள், விளங்குகள், பூக்களற்று
ஒளிர்ந்தது அவ்விடம் ஒரு பேரொளி

Read more...

Friday, April 12, 2013

கைவல்ய நவநீதம்

1.
பாலைமணல் மழைத்துளியை ஈர்ப்பதுபோல்
அவன் தன் நண்பனைக் கண்டதும் மலர்ந்தான்
பேசிக்கொண்டேயிருந்தான்
தன்னைப் பற்றிப் பேசினால் போதும்
அதுவே அவனைப் பற்றியும் அறியும் வழியாகும் என்பதுபோல்
விடைகொடுத்த பிறகும் பிரிய மனமின்றி
தன் வாசல்வரை வந்தவன்
அவன் வாசல்வரை சென்றுவிட்டான் என்பதைக் காண்க.
தன்னந்தனியாய்த் தன் இருப்பிடம் திரும்பி வரும்போது
தனிமையே இல்லை அவனுக்கு
எங்கும் விரிந்திருந்தது பசுமைமிக்க ஏகாந்தம்

2.
நதி வறண்டு மணல் ஆவதும்
ஏகாந்தம் தேய்ந்து தனிமை ஆவதும்
நாம் அறிந்தவை
மணல் பொங்கி நதியாவதும்
தனிமை மலர்ந்து ஏகாந்தமாவதும்
நம்மால் அறியமுடியாதவை
நாம் செய்ய வேண்டியதெல்லாம் என்ன?
அந்த அறியமுடியாதவற்றின் கொடையை ஏற்க
எப்போதும் நம்மைத் திறந்தே வைத்திருப்பதைத் தவிர

3.
திறந்த வாயிலில் நுழைந்த ஒளியாய்
விரிந்த பாயில் படுத்தேன்
நுழைந்த காற்றில் உலர்ந்த வியர்வையாய்
என் கண்ணீரைக் களைந்தேன்

4.
டீ தாகமுமல்ல, அமைதியின்மையுமல்ல;
ஒரு சந்திப்பைக் கண்ட
அந்த நிமிஷத்தின் கொண்டாட்டம் அது
ஒரு டீ சாப்பிட்டு வருவோமா என்றபடி நாங்கள்
நடந்தது டீக்கடை நோக்கிதான் என்றாலும்
டீக்கடை மற்றும் எது நோக்கியுமல்ல என்றே
நிச்சயமான ஒரு பேரொளி சூழ்ந்திருந்தது வழியெங்கும்
என்றாலும் டீக்கடைக்கே வந்து சேர்ந்தோம்
டீ குடித்தோம்; அவர் புகைக்கத் தொடங்கினார்
எதிரே தொங்கிக்கொண்டிருந்தது ஒரு பழக்குலை
பழம் சாப்பிடுகிறீர்களா என்று அவர் கேட்டது
கேள்வியா? விசாரணையா?
நன்றாய்க் கனிந்திருந்தது
அநத நேரம், அந்தக் குலை மற்றும் யாவுமே
ஆகவே சாப்பிட்டோம்.
பசியினாலல்ல; பதற்றத்தினாலுமல்ல

5.
சதா குறுக்கிடும் இந்நதியின் குரலைக் கேளாமல்
சதா அதனைத் தாண்டிச் செல்லவே நாம் முயல்வதால்
விளைந்தது என்ன?
இக்கரை, அக்கரை, பரிசில், பயணம் என
ஒன்றுக்கும் உதவாத கச்சடாக்கள்

Read more...

Thursday, April 11, 2013

தேவாலயம்

பச்சை மலைகளும் பள்ளத்தாக்குகளும்
நீரும் மலர்களும் பறவைகளுமுடைய
ஒரு கிராமத்தில்
ஒரு தேவாலயத்தைப் பார்த்தேன்

ஒரு பறவையின் எச்சம்
கட்டிடக் கலையாய் எழுந்து
குழந்தைகளின் தேவதைக் கதைகளில் வரும்
சூன்யக்காரியாய் நின்றது

டிராகன் விடும் விஷமூச்சாய்
ஆலயத்தின் கோபுரத்திலிருந்து சீறிவரும்
வெண்கல மணியோசை கேட்டு
ஒவ்வொரு முறையும் அஞ்சி நடுங்குகின்றன –
சூன்யக்காரியின் மந்திரவலையில்
சிக்குண்ட மனிதர்களைத் தவிர –
நீரும் பூக்களும் பறவைகளும்
மற்றுமுள்ள எல்லா ஜீவராசிகளோடு
மலைகளும் விடிவெள்ளியும் கூட

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஒலித்த
அந்த வெண்கல மணியோசையின் அதிர்வலைகளால்
அக்கட்டிடத்தில் கீறல்
அதனுள்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் பறவையின் எச்சத்தில்
பாதுகாக்கப்பட்டு வந்த விதை ஒன்று
வெடித்து முளைத்தது

அன்று இரவு அந்த ஊரின் நிலா ஒளியில்
ஒரு பாம்பைக் கண்டேன்
அது தன்னைத்தானே விழுங்க யத்தனித்துத்
தன் வாலைத் தன் வாயால் கவ்வியபடி
வெறியுடன் சுழன்றுகொண்டிருந்தது

Read more...

Wednesday, April 10, 2013

கவிதைக்குள்ளிருந்து ஒரு கை

தேவதைக் கதை ஒன்றில் மந்திர வாளை ஏந்தியபடி
ஏரிக்குள்ளிருந்து நீண்ட ஒரு கை போல
கவிதைக்குள்ளிருந்து நீள்கிறது ஒரு கை.
பளாரென்று தன் கன்னத்திலறைந்தவனைத்
திருப்பி அறைகிறது.
வருந்த நேரமில்லை.
நேரமில்லை என்பதைவிட நேரம் என்பதே
அதற்குத் தெரியாது என்பதே சரியானது

உயிருக்குத் தவிப்பவன்ஆதரவுக்கு நீட்டிய
கை அல்ல அது; உயிரின் கை.
தனது உன்னத நோக்கைச் சுட்டிக் காட்ட
மேலெழுந்ததாக அது இருக்கிறது;
ஆனால் அந்த உன்னத நோக்கு இன்னதுதான் என்று
ஒருபோதும் நம்மால் சொல்லமுடிந்ததில்லை
மனிதனை நோக்கி நீண்ட
நேசக்கரமாக அது இருக்கிறது
ஆனால் அதை நான் பார்த்த பொழுதுகளில் எப்போதும்
அநாதியாகவே நிற்கிறது அது
நீருக்குள் சலிப்புற்றவன் சும்மா
வெளியே நோக்கி நீட்டிய
வெற்றுக்கரமாக இருக்கிறது
ஆனால் கோவர்த்தன கிரியைத் தன் விரல்களால்
தாங்கிய கிருஷ்ணனைப் போல
பூமியின் சாரத்தில் முளைத்தெழுந்து
இப்பிரபஞ்சத்தையே தாங்கி நிற்கிறது அது

இத்துணை அற்புத அழகில்
ஜ்வலிக்கிறது எப்படி, அந்தக் கை?
தீர்மானமற்ற அனிச்சைச் செயல்களாய் உமிழும்
அதன் நாடி நரம்புகள், ஏதோ ஓர்
இயற்கை ஒழுங்கோடு பிணக்கப்பட்டுள்ளதேதான்!

Read more...

Tuesday, April 9, 2013

கட்டித்தழுவல்

பிரிவதற்கு முன்
ஆரத் தழுவிக்கொண்டனர் இருவரும்

இரண்டாய் ஒலித்துக்கொண்டிருக்கும்
இவ்விதயத் துடிப்புக்கள் ஒன்றாய் ஒலிக்கும் வரை
இப்படியே இருக்க முடியும்?

அவனுக்கு எதிர்த்திசையில் அவளுடையதும்
அவளுக்கு எதிர்த்திசையில் அவனுடையதுமான விழிகள்
நீளக் கடந்து தொடுவான்வரை சென்று
கண்ட பலன் ஏதுமில்லையென
உள்நோக்கித் திரும்பியிருக்கின்றன.
நன்று.
அவளுக்கு எதிரே காத்திருக்கிறது அவள் பாதை
அவனுக்கு எதிரே காத்திருக்கிறது அவன் பாதை
நீளக் கடந்து தொடுவான்வரை சென்று
கண்ட பலன் ஏதுமில்லையென்று எண்ணாமல்
இடையறாது தொடர்ந்தால்
ஒருநாளல்ல – அடிக்கடியும் –
அந்த மேலான சந்திப்பை அடைவார்கள் அல்லவா?

அப்போது
ஆரத் தழுவிக்கொள்ளும்
இரு இதயத் துடிப்புக்களும் ஒன்றாய் ஒலிக்கும்
எனினும்
அப்போதும்
இப்படியே இருக்க முடியுமா?
ஏனோ நினைவுக்கு வந்தது
யூதாஸ் காரியத் இயேசுவைத்
தழுவி முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்தது

அப்போது கேட்டது
அந்தக் கட்டித்தழுவலுக்குள்ளிருந்து யாரோ-
ஒரு மூன்று தலைகளுடைய ஒருவன்-
சிரித்த குரல்:
பரஸ்பர உடைமை வெறியின் சாத்தான்.
பரஸ்பர ஆறுதலை வழங்கும் கருணாமூர்த்தி,
தான் ஆளுதற்கு வேண்டியே
ஓர் பாவ உலகைப் படைத்த கடவுள்

Read more...

Monday, April 8, 2013

தேவதைகள்

சூர்யன் மேலெழுந்து
போதிப்பதற்கு நான்
என் பள்ளிக்குப் போவதற்குமுன்னே
கற்றுக் கொள்வதற்கு
என் பெண் குழந்தையை
அவள் பள்ளிக்குக் கொண்டு செல்லத் தொடங்கினேன்
மிதிவண்டியில்

எனது நரம்புவலையினை இழுக்கும்
ஒரு மீனவனின் முஷ்டியாய்
மேலேறிக் கொண்டிருந்தது சூர்யன்
கதிர்வலைகளினுள் சூன்யம் மிஞ்ச
எங்கும்
என்போல் ஒழுகி நடமாடும் மனிதர்கள்

சூன்யவெளியிலிருந்து சிறகுகள் மிதந்துவந்து
மனிதர்களின் விலாக்களில் பொருந்தியதைப் பார்த்தேன்
விவரிக்க விடுங்கள் என்னை
நான் கண்ட அந்த இனிமையை:
குழந்தைமை + கன்னிமை (பெண்மை) = தேவதை...

என்னவென்று சொல்வேன் என் உணர்வுகளை!
விரல் தொடுதலில் கலைந்துவிடக் கூடிய
மிகமிக மென்மையான ஒரு வஸ்து
திரும்பத் திரும்பப் பிறந்து உலகை ஜெயிக்கிறது எனவா?
திரும்பத் திரும்பப் பிறந்து உலகில் தோற்கிறது எனவா?

விஷயம்,
நம் மகிழ்ச்சிக்கும் அழுகைக்கும் அப்பால் உள்ளது

Read more...

Sunday, April 7, 2013

உறவு

எந்த ஒரு உறவு சொல்லியும்
அழைக்கப்பட விரும்பவில்லை நீ

உன் வாகனம் என் வாசலிலும்
நீ என் வீட்டுள்ளும்
நிரந்தரம் தங்கிவிட்டது எப்படி?

காலத்தின் இரத்தக்கறை படிந்த
உன் சிவப்பு வாகனத்தில் ஏறி
நீ இங்கிருந்தும் நீங்கிச் செல்வதை
நான் பாரத்துக்கொண்டிருக்கையிலேயே
நீ மீண்டும் அவ்வாகனத்தை
என் வாசலில் நிறுத்திக்கொண்டிருக்கிறாய்

”எவ்வளவ கால காலங்களாய்த்
தொடர்கிறது நம் உறவு”
என்னும் ஆச்சரியத்தை எழுப்பியது
காலமற்ற வெற்றுக் கணங்களுள்
நிகழும் சந்திப்புக்களே
என்னும் ஆச்சரியத்தைத்
தரும் ஆச்சரியமேதான் நீயோ?

நீ எங்கள் சொத்து என நான் எண்ணினால்
என்னை ஓட்டாண்டியாக்கச் சிரிப்பவன் நீ
என்பதை நான் அறிவேன்.
சிகரத்தில் ஏறிநின்று
சமவெளியையும்
சமவெளியில் நின்றுகொண்டு சிகரத்தையும்
பார்த்துக்கொண்டு நிற்பவர்கள்தாமே நாம்

நீ எனது கவிதை எனவும் மாட்டேன்
ஏனெனில் நம் உறவில்
நீ எனக்கு எஜமானனாவதை
நான் விரும்புவதில்லை

நீ ஏதாவதொரு உறவு சொல்லி அழைக்கப்பட
விரும்பாததைப் போலவே
நானும் உனக்கு ஒரு பெயர் சூட்டப்போவதில்லை
(வெளியிலுள்ளவர்களை விளிப்பதற்கல்லவா பெயர்)

Read more...

Saturday, April 6, 2013

குல்லாய் வியாபாரி

உதறவே உதற முடியாத சுமை மூட்டை அவன் தலையில்
குல்லாய் வேணுமா குல்லாய் என்று கூவித்திரிகிறான்
’இந்தக் குல்லாயை எல்லார் தலையிலும்
சூட்டிவிட்டால் போதும்’ என நினைக்க நினைக்க
உதறவே உதறமுடியாத நித்யபெருஞ்சுமையாகிவிட்டது
அவன் தலை மூட்டை

ஓர் ஊருக்கும் இன்னொரு ஊருக்குமிடையே
ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்குமிடையே
அவன் கடக்கவேண்டிய பாலைவனத்திலும் கானகத்திலும்
கூவலின்றி சுமை மட்டுமே அழுத்தும் பாதயாத்திரை

ஒரு மரத்தடியில் சற்று இளைப்பாற எண்ணயவன்
அயர்ந்து தூங்கிவிட்டான மூட்டையை மறந்து.
குரங்குகள் குதித்தன அவன் தூக்கத்தின் மரத்திலிருந்து.
அவை பிரித்த மூட்டையிலிருந்து வெளிப்பட்டன
வெறுமையின் கனிவு; கனிவின் வெறுமை,
இன்மையின் பெருஞ்சுமை; பெருஞ்சுமையின் இன்மை,
கண்ணீரின் ஆனந்தம்; ஆனந்தத்தின் கண்ணீர்,
அர்த்தமின்மையின் அர்த்தம்; அர்த்தங்களின் அர்த்தமின்மை
என்று ஒவ்வொரு தொடுதலுக்கும் தலைகீழாய்
மாறிக்கொள்ளும் வண்ணக் குல்லாய்கள்

தலைக்கொன்றாய்ச் சூடிக்கொண்டிருந்த குரங்க்கள்
விழித்த அவனைக் கண்டதும் விருட்டென்று மரத்தின் மேல்,
அவன் விரும்பிய காட்சியை அவனுக்களிக்கவே விரும்பியது போல்,
என்ன அற்புதமான காட்சி அது!

அழகியதோர் தந்திரத்தால்
(’தனது’ என்று ஒன்றை அணிந்துகொண்டு
அப்புறம் அதைத் தூர எறிந்தான்)
அக் குல்லாய்களைச் சேகரித்துக்கொண்டு நடந்தான் அவன்
மனிதர்கள் தென்படும்போதெல்லாம் கூவினான்

Read more...

Friday, April 5, 2013

விழிகள் கனலும் விரல்நுனிகள்

கண்கள் போய்விட்டதன் காரணமோ – அன்றி
இருள்தான் சூழ்ந்துவிட்டதோ புறமெங்கும்?
எவ்வாறாயினும்
துழாவ முன்நீளும் என் விரல்களில்
எரிகிறது என் ஜீவன்

தம் விழிகளை இல்லாமல்
என் விரல்நுனிகள் தேடுவது எதை?
தம் பாதங்களுக்கான பாதை தேடும் முயற்சியில்தான்
எத்தனை தடங்கல்கள்!
எத்தனை தடுமாறல்கள்!
எத்தனை அலைச்சல்கள்!
இடறி விழல்கள் எத்தனை!
இடித்துக்கொள்ளல்கள் எத்தனை!

என் கால்பட்டு உருண்டு ஓடுகிறது ஏதோ ஒன்று
கொட்டிக் கவிழ்கிறது ஏதோ ஒன்று
உடைந்து சிதறுகிறது ஒன்று
வீறிட்டலறுகிறது ஒன்று

வருந்துகிறேன், வருந்துகிறேன்
மன்னியுங்கள், மன்னியுங்கள் என்னை

இன்று, தம் விழிகளைத் தேடித்தேடித் தவித்த
என் விரல் நுனிகளிலேயே விழிகள்

Read more...

Thursday, April 4, 2013

மந்திரக்கயிறு

எத்தனை வெட்டுக்கள் குத்துக்கள் பட்டும்
உடைந்து போகாதிருந்தது பம்பரம்
குழந்தையின் உள்ளங்கையில் பம்பரம் சுழலும்போது
தழும்புகள் எல்லாம் மறைந்துவிடுகின்றன

’பார்’ எனத் தனது மூஞ்சிக்கு எதிரே நீண்ட
குழந்தையின் உள்ளங்கையில் பம்பரம் சுழலும்போது
காலம் வெட்கித் தற்கொலைத்து மறைந்து விடுகிறது
எதிர்த்திசையில் பூமி சுழன்று சுழன்றோடிவிடுகிறது
கடவுளும் சாத்தானும் வீசியெறியப்படுகின்றனர் ஒன்றாய்
சிதறிக்கிடந்த நட்சத்ரங்களின் தனிமை கலைக்கப்பட்டு
எல்லாம் ஏகாந்தத்தின் இதயத்தில் முகம் அலம்பி
நின்கின்றன மீண்டும்.
சக்கரங்கள் கழன்று திக்குகளில் ஓடிவிட
’பொம்’மென்று அமர்ந்த வாகனம்போல்
தன் இருப்பை உணர்த்துகிறது காலாதீதம்
இதயத்தின் பாற்கடலைக் கடைகிறது அதன் கூர்முனை
அதனை இடையறாது இயக்கிக்கொண்டிருக்கிறது
குழந்தையின் கையிலுள்ள மந்திரக் கயிறு

குழந்தையின் உள்ளங்கைகளில் பம்பரம் சுழலும்போது
சூரியன் இன்னும் வேகமாய்ச் சுழலுகிறது
கற்கள் உருகி நதியோடத் தொடங்குகிறது
கடல் நோக்கி ஓடுகின்றன விருட்சத்தின் இலைப்படகுகள்
கடல் நோக்கி ஓடுகின்றன வெள்ளம் தீண்டிய தண்டவாளங்கள்
வசந்தப் புல்வெளியில் மான் துள்ளி ஓடிவிட
வசந்தப் புல்வெளியின் வண்ணங்கள்...
எல்லாமே தழும்புகளாய் மறைந்துவிட...

ஓடாது மறையாது
நிலைத்து நிற்கும் இவை என்ன?

கண்காணாத ஒரு சுழற்சியும்
குழந்தையின் வெற்றுப்பார்வையும்
பீரிடும் ஆனந்தத்தின் ஊற்றும்

Read more...

Wednesday, April 3, 2013

மௌனங்கள்

”துரத்தும் ஓநாய்கள்
எப்போது, எவ்விடம் வைத்து, எவ்வாறு
தேவதைகளாய் உருமாறி
என்னை வாழ்த்தி மறைகின்றன...
எப்பொழுது எவ்விடத்தில் எவ்வாறு
மீண்டும் ஓநாய்கள்
என்னைத் துரத்தத் தொடங்குகின்றன...”

இச்சிந்தனைகளே சமயங்களில்
துக்கமற்ற மகிழ்ச்சியற்ற
எனது மௌனங்களாகின்றன

எனது மனைவி குழந்தைகளிடம் நான் காட்டும்
குழந்தைத்தனமான வேடிக்கை விளையாட்டுக்கும்
அந்நியர்களிடம் நான் காட்டும்
சீரியஸான அன்பிற்கும் நாகரிகத்திற்கும்
இடையேயுள்ள தூரம், அத்தூரத்திற்கேற்ற அளவிளான
துக்ககரமான எனது மௌனங்களாயிருக்கின்றன

உச்சிவானில் முழுநிலா எரிந்துகொண்டிருக்க,
விழா மேடை போல் ஒரு பாறை தோன்ற,
’உயிர் ராசிகளின் வாழ்வே ஒரு கொண்டாட்டம்’
என்று எனது இரத்தம் நிலவு நோக்கிக் குதிக்கையில்
எனது துக்கங்களின் காரணத்தை நான் அறிந்தேன்

நம் தனித்தனிக் கொண்டாட்டங்களின் போதெல்லாம்
திடுக்கிடும் நான் அடைந்த துக்கங்களே
என் மௌனங்களாகியிருந்திருக்கின்றன
கொண்டாட்டத்துள் கொண்டாட்டம் என்பது
ஒரு மாபெரும் அறியாமை;
அகங்காரம், பகட்டு. பாவமும் கூட
கொண்டாட்டத்துள் கொண்டாட்டம் என்பது
கவிதை அல்ல; விதை அல்ல;
சகிக்க முடியாத ’போன்சாய்’ மரம்

”யாவரும், எல்லாமும் ஒன்று கூடினாலல்லவா
திருவிழா, வேடிக்கை, ஆனந்தம்!
எங்கே அந்த விழா, பெருவிழா
நான் பாடமுடியும் விழா?” என்னும்
வேட்கையும் ஏமாற்றமும் பின்னிய
எனது தனி நடமாட்டமும்
எனது மௌனங்களாக இருந்திருக்கின்றன

Read more...

Tuesday, April 2, 2013

வேண்டாம்

இதயங்கொள்ளாது
என்னுள் பெருக்கெடுக்கும்
இந்த அன்பையும் அழகையும் கொண்டு
நான் யாதொரு பிரும்மாண்டமான சிலையையும்
வடிக்க வேண்டாம்
வெளிப்படும் தூசு மாசு உண்டாக்க வேண்டாம்
வெளிப்படும் சிதறல்கள் பூமியைப் போர்த்தி
அதன் மூச்சை நெரிக்கவும் வேண்டாம்

அந்தச் சிலையின் கண்களிலிருந்து
நீர் வடிய வேண்டாம்
தற்கொலைக்கு வேண்டிய தனிமையற்று
அந்தச் சிலை தவிக்கவும் வேண்டாம்
அந்தச் சிலையை நான் எவ்வாறு அழிப்பது
எனத் திணறவும் வேண்டாம்
கொண்டாட்டத்தின் பறைமுழக்கத்தில்
விழியிருண்ட செவியிருண்ட
பக்திப்பரவசனை நினைத்து
நான் அழவும் வேண்டாம்

”இனி அந்தச் சிலையை உடைக்கவும் முடியாது.
உடைத்தாலும், அதைச் செதுக்கிய போதேற்பட்ட
மாசுக்கேட்டிற்குக் கொஞ்சமும் குறையாத
மாசுக்கேட்டைத்தானே அது உண்டாக்கும்” என
நான் வேதனைப்படவும் வேண்டாம்

இதயம் கொள்ளாது
என்னுள் பெருக்கெடுக்கும்
இந்த அன்பையும் அழகையும் கொண்டு
இப்பேரண்டத்தை நேசிக்கப் போகிறேன்
ஒரு சிறு களிமண்ணையும் உருட்டாது

Read more...

Monday, April 1, 2013

அங்கே

எங்கும் மாறுதலின் அவசரத்திற்கான
வேகம்போல் ஒரு வீரியம் அல்லது கலவரம்
அல்லது சூறாவளி

மரங்களும் தெருக்களும் மட்டுமல்ல.
விசிறலில் ஏறும் கனல்பொலொரு உக்ரம் பெற்று
எரியும் ஜூவாலைகளாயின என் தலைமயிர்களும்

காலம் கனிந்துவிட்டதென்றெண்ணிக்
கண்ணீர் மல்க நின்றேன்

அதிகாரக் கூச்சலோடு வழி கிழித்து
வந்துநின்றது தீயணைக்கும் வண்டி
ஆனாலும் அதற்குள்ளே
அங்கே தன் கொடியை ஏற்றிவிட்டது
தீ

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP