Sunday, March 31, 2013

தீயும் திரைச்சீலைகளும்

தீ எப்படிப் பற்றும்?
தீ எப்படியம் பற்றிக்கொள்ளும்
நீ உன் பயங்கள் பாதுகாப்புகளை மட்டும்
துறந்துவிட்டால் போதும்

தீப் பந்தத்தைப் பிடித்துக்கொண்டு
அலைகிறது காற்று
நாசியின் ஒரு துளைவழி புகுந்து
மறு துளைவழி வெளியேறுகிற காற்று
தான் ஏற்றிவைத்த விளக்கைத்
தானே ஏற்றி விளையாடுகிறது!

திரைச்சீலைகளின் வேட்கை
தாவிப் பிடித்ததும்
கொடியில் தூங்கும் ஆடைகள்
அலமாரிப் புத்தகங்கள் மற்றும்
என் அழகுப் பொருட்களை
வாசித்துத் தீர்க்கிறது
குழந்தைகளின் கும்மாளங்கள்போல்
அது கொண்டாடுகிறது
வீடெங்கும் குதித்து
வீட்டினை அழித்து

ரயில் பெட்டிகளின் ஜன்னல்கள் வழியாய்
நீளும் தலைகளும் கைகளும் போலும்
ஒளிநோக்கி உன்னும் தாவரங்கள் போலும்
உறவு நோக்கியும்
வெளிநோக்கியும் விரித்த முகம்தான்
பட்டென்று
திரும்பி வளைந்து
கூரையைப் பார்த்தபடி
தன் படைகளை நோக்கிக்
கட்டளைக் கூச்சல்...

Read more...

Saturday, March 30, 2013

கூந்தல் தைலம்

மனிதக் கொலைகள் சர்வசாதாரணம்
இல்லையெனில் தொழில் வளம் உண்டோ நாட்டில்?
லாரி லாரியாய்த் தலைகள் வந்து குவிகின்றன
மயிர்கள் சிரைக்கப்பட்ட தலைகள்
(மயிர் வேறொரு தொழிற்சாலைக்குப் போய்விட்டது)
சூரியனுக்குக் கீழே
மரநிழல் ஒதுக்கிய பாழுங் களங்களில்
காய வைக்கின்றனர் தொழில்நுட்பக் கலைஞர்கள்.
அவ்வாறு பக்குவப்படுத்தப்பட்ட மூளையெல்லாம்
பிழிந்தெடுக்கப்படுகின்றன ஓர் ஆலையில்.
தவறாமல் அன்றாடச் சமையலுக்கு மட்டும்தான்
பயன்பட வேண்டுமா மனித மூளை?
பெருமையுடன்
மனித மூளையின் சாரமெல்லாம் தொகுக்கப்படுகிறது
(மண்டையோடுகளெல்லாம் வேறொரு தொழிற்சாலைக்கு.
வெடிமருந்துக்கான தாதுப்பொருள் இருக்கிறதாம் அதில்)

கொடுமையிலும் கொடுமையெல்லாம் செய்து
பெரும்பாடு பட்டதெல்லாம் –
அட காலமே!
உங்கள் மயிரழகுக்குத்தானா?

Read more...

Friday, March 29, 2013

எழுந்து நடந்து கொண்டிருந்தேன்...

மரங்களெனும் ஆன்டெனாவின் கீழ்
ஒரு குடிசை எனது வீடு
பார்வையாளனும் பங்கேற்பாளனுமான
ஒரு விசித்திரம் நான்

காட்சிக்குள்ளிருந்து திமிறிய பங்கேற்பாளன்
தன் வாளினை வீசினான்
பார்வையாளனை நோக்கி
போரின் முடிவில் –
முடிவு என எப்படிச் சொல்வேன்?
பார்வையாளன்
பங்கேற்பாளனைப் பிடித்துக் கட்டித்
தள்ளிவிட்டான் ஒரு மூலையை நோக்கி –
எனச் சொல்வேனா?

குடிசையின் கதவு தகர்ந்து
கூரை சரித்து
ஹோ ஹோ என ஆர்ப்பரித்தன
கடலலைகள்
பூக்களை வியந்து முகர்வது போலவும்
பவளங்களை அள்ளி அழகு பார்ப்பதுபோலும்
எங்கள் இரத்தச் சிந்தல்களைத் தீண்டின
கடலலைகள்

எழுந்து நடந்துகொண்டிருந்தேன்
அங்கிருந்தும் நான்,
என் தோளில் ஏறிக்கொண்டிருக்கும்
பார்வையாளன் சுமையாக,
எனது குடிசையைத் தூக்கி நிமிர்த்தி வைக்க,
எழுந்து நடந்துகொண்டிருந்தேன்

Read more...

Thursday, March 28, 2013

பாடல்

உறைய நினைக்கும் குருதியின் உள்
அணுக்களெல்லாம் கிளர்ச்சி செய்ய
நாடி நரம்புகளெல்லாம் பறை முழக்கத்
தசைவெளியினிலோர் நடனம் பிறக்கக்
கழுத்துவரை உடம்பு தன்னை நதிக்குள் நட்டுப்

பதம் பெற்ற கூட்டினின்று
சிறகடித்துப் பறந்த குரல்;

மலை மடு கடல் எங்கும் நிரம்பி
எல்லையின்மையெங்கும் வியாபித்தபோது
மறந்துவிட்டிருந்தது பாடலுக்கு தான் பிறந்த இடம்

தேடலாய்த் திரண்ட அதன் வியாபகம்
தன்னிகரில்லாததோர் கூர் ஆயுதம்,
முனிப்பாய்ச்சல், தர்மவேசக் கர்ஜனை
முரண்களையெல்லாம் உலுக்கி உதிர்த்து
துக்கத்தை அறுத்து
ஆரவாரங்களையெல்லாம் அடக்கி

எங்கும் மவுனத்தை விதைத்தபடி பயணித்தது பாடல்

கோடி ஆண்டுகளாய் இளமை குன்றா
இயற்கையின் நிழலில்
தன் தாகவிடாய் தீர்த்துச்
சற்றே அது இளைப்பாறிய பின்,

கர்ஜித்தபடி பாய்ந்தது சமவெளியெங்கும்
நெருப்பை விசிறும் புயலாய்

பசித்த ஒரு மிருகமாய்
தன் ஊற்றுவாய் தேடி அலைந்தது பாடல்

Read more...

Wednesday, March 27, 2013

மஞ்சு

மலையின் சிகரத்தை நோக்கி
மலை தழுவிச் செல்கிறது
ஒரு குழு
அவ்வளவு வெண்மையும்
வினோதமுமான உடலுடன்

Read more...

மலையேற்றம்

மலையின் சிகரத்தை நோக்கி
மலை தழுவிச் செல்கிறது
மலைப் பாதைப் பாம்பு

செங்குத்தாய் நீ ஏறுகையில்
மலை தன் ஆடை துறந்த உன் காதலி
சிகரத்தை நீ அடையும்போது
அவள் கருவினில் உள்ள ஓர் அணு நீ

Read more...

Tuesday, March 26, 2013

தொட்டபெட்டா

வந்துவிட்டோமா
வந்துவிட்டோமா நாம் அந்த இடத்திற்கு
எந்த உன்னதத்தை மறைத்து மறைத்து
நாம் இதுகாறும் பேசிக்கொண்டிருந்தோமோ
அந்த உன்னதம்
நம்மைத் தொட்டுத் தழுவிக்கொள்ளும் இடத்திற்கு
மூச்சிறைக்கும் நுரையீரல்
முழங்கைகால் நெஞ்சுக் காயங்கள்
மிகத் துடிக்கும் இதயமுமாய்
ஆவலின் உச்சிப் படிகளில் ஏறி
வந்துவிட்டோமா
அன்பின் ஆலிங்கனம் மட்டுமே கொண்டாடப்படும்
அந்தச் சபாமண்டபத்திற்கு

இதோ,
பறக்கும் திசைவெளியின் சிறகுகளென மஞ்ச
அன்பின் முத்தமும் ஆலிங்கனமுமேயான
ஆகாசம்.
தேவதைகளின் பிரத்யேகச் சயனவெளி...
இவ்விடம் எங்களுக்கேயானதெனக்
களிப்பும் சுயாதீனமும் கொள்ளும் குழந்தைகள்
இல்லை, எங்களுக்கேயானதென வெட்கம் மீதூர
இட்டி இணைந்து மிதந்து செல்லும்தேனிலவு ஜோடிகள்
இல்லை, இல்லை, தனிமைமிக்கு
தம் இதயத்தில் ஆழம் கொண்டோர்க்கே
என்பதுபோல் நடமாடும் நான், நீ, அவன்

எங்கே தொலைந்தனவோ மனிதா
உன்னை அலைக்கழித்த உன் பேராசைகள்,
உன் இலட்சியங்கள், கனவுகள்?
இல்லை,
அதைத்தான் இங்கு அடைந்தனையோ?

சூடான தேநீரின் சுவைத் தீண்டலிலும்
தேனிலவுத் தம்பதியரின் இதழ் முத்தத்திலும்கூட
காணமுடியவில்லை காண முடியவில்லை
ஒரு துளித் தசைமணம்

கருணையின் மஞ்சுப் பரவல்களூடே
உள்ளங்கால்கள் உணரும் சிகரம்
பார்வையின் கீழ்
ஒரு பள்ளத்தாக்குக் கிரகம்
நெஞ்சின் கீழ் ஒரு பேரமைதி
நினைவு என ஏதுமில்லா
ஆனந்தத்தின் நிர்விசாரம்
வந்துவிட்டோம் வநதுவிட்டோம் எனக்
குதூகலிக்கும் நெஞ்சம்
ஆசீர்வதிக்கிறது
ஒவ்வொருவர் விழிகளினுள்ளும் நிறைந்து
காணும் ஒவ்வொருவரையும்

Read more...

Monday, March 25, 2013

நீலகிரி

மலைமீது ஒரு புல்வெளியாய் விடிந்திருக்கிறது
மஞ்சுவைத் தன் மடியில் வந்து அமரச் செய்யும் அன்பு.
மலைமடிப்புகளெங்கும் ஏறி இறங்கி விளையாடும்
உன் உயிர்மூச்சின் தாளலயம்.
பள்ளத்தாக்குகளெங்கும் வற்றாத ஊற்றுக்களாய்க்
கோர்த்துக் கிடக்கிறது
உன் அன்பின் உள்ளீரம்

வங்கொலையாய்ப் பிடுங்கப்படும்
புல்லின் வேர்களில்
அலறுகிறது
லட்சோப லட்ச வயதான தொந்தம்.
இயற்கையின் மவுனமொழி கேட்டறியாச்
செவிடனின் விழிகளைக் குத்துகின்றன
நசிவுக் காட்சிகளின் தீப்பந்தங்கள்

அருகிவரும் சோலைவனக் காடுகளின் அருகே
விழிகளில் நீரும் வெற்றுக் குடமுமாய் ஒரு வன தேவதை.
கலைந்த கூந்தலும் கிழிந்த ஆடையும்
கதிகலங்கித் தப்பித்தோடும் கால்களுமாய்
யூகலிப்டஸ் வனத்தினூடே ஒரு தேவதை.
நட்சத்ர விடுதி ஒன்றில்
தன் மலர்ப்புன்னகைக்கும் சேர்த்துச்
சம்பளம் பெறும் பணிப்பெண்ணாய் ஒருத்தி.
மோகித்து காதலித்து ஓடிப்போய்
தன்னைவிட்டும் ஓடிப்போனவனால்
ஏமாந்து தனித்து
தாய்வீடு திரும்ப இயலாக் கவுரவம் கொண்டு
தேயிலைத் தோட்டங்களிலும் கட்டிடக் காடுகளிலும்
வாடும் வனதேவதைகள்

மேயும் கால்நடைகளாய்
அமர்ந்திருக்கும் ஆதிவாசிகளின் குடியிருப்புகள்;
இரவின் அந்தகாரத்திலிருந்தும்
இயற்கையின் மவுனவெளியிலிருந்தும்
எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் ஓர் அழுகைக்குரல்
மலைச்சரிவின் சரிவில்
தேய்ந்துகொண்டிருக்கும் ஆதிமொழி,
எழுத்தில்லாது அலையும் வனதேவதைகள்
ஆளரவமற்ற பள்ளத்தாக்கு ஒன்றில்
தான் விளிக்கப்படாத தனிமையினால்
தன் பெயரைத் தானே மறந்து
பிரக்ஞையற்றுக் கொண்டிருந்தவனின் சீரழிந்த உடல்.
அங்கிருந்தும் அவனைத் தோள் கொடுத்துத்
தூக்கிக்கொண்டு வந்தேன் நான்;
வரும் வழியிலேயே அவன் காணாமல் போகவே
அன்பின் கடவுள் அவன் என அறிந்தேன்

Read more...

Sunday, March 24, 2013

மிதி வண்டி

என்னிடம் ஒரு மிதி வண்டி உண்டு
அதற்கு இரு சக்கரங்கள் உண்டு
ஒன்று முன் சக்கரம்
மற்றொன்று பின் சக்கரம்
நீ நினைப்பாயா,
முன்னோக்கிச் செல்வது முன்சக்கரம்
பின்னோக்கிச் செல்வது பின்சக்கரம் என்று?

நாம் உந்த வேண்டும் ஒரு சிறு சக்கரத்தை.
ஓய்வற்ற ஒரு பெரும் சக்கரத்தின் மையத்தில்
ஓய்ந்திருப்பதாய்த் தோன்றும் ஒரு சிறு சக்கரம் அது

பின்சக்கரத்தை முன்னோக்கிச் செலுத்துவது அது.
தனித்தும் தனியாமல்
’சும்மா’விருக்கும் முன் சக்கரத்தை
முன்னோக்கிச் செலுத்துவதும் அதுவே

பின்சக்கரத்தைப் பின்னோக்கியும் செலுத்தலாம்
அப்போது முன் சக்கரமும் பின்னோக்கிச் செல்லும்!

Read more...

அந்தரத்திலே ஒர் இருக்கை

சுப்பு ஒரு ஸ்டூலிலே
சும்மா உட்கார்ந்திருந்தான்.

குப்பு வந்தான் வேகமாய்
ஸ்டூலு வேணும் வேணும்’னான்

சுப்பு காதிலே வாங்கலே
சும்மா உட்கார்ந் திருந்தான்

குப்பு திரும்ப திரும்பவே
ஸ்டூலு வேணும் வேணும்’னான்

சுப்பு காதிலே வாங்கலே
சும்மா உட்கார்ந் திருந்தான்

குப்பு வெடுக்கினு உருவினான்
ஸ்டூலைக் கையோட கொண்டு போனான்

சுப்பு அப்படியே உட்கார்ந்திருந்தான்
அவனுக்குக் கீழே ஸ்டூலில்லே

Read more...

Saturday, March 23, 2013

நத்தையின் பாடல்

யாத்ரீகனுக்கு எதற்குக் காணிநிலம்?
என்றாலும் எனக்கும் ஒரு வீடுண்டு
பூமியில் அஸ்திவாரம் கொள்ளாமல்
தானே எழும்பியுள்ளது அந்த வீடு
எங்கும் இறக்கிவைக்காது
என் முதுகின்மேலே சுமந்து செல்வேன்
அந்த வீட்டை

சொர்க்கம் எனும் வீட்டின் சொந்தக்காரராமே
அந்தக் கடவுளை நான் பார்த்துவிட்டேன்
அவரது ஏதேன் தோட்டத்தில் வைத்து
நெடுநேரம் அவரோடு உரையாடியும் உள்ளேன்
நல்லதொரு நண்பர்தாம், பாவம்
சாத்தான் மட்டும் இல்லையெனில்
இனிதாகவே இருந்திருக்கும் அவர் உலகம்

சாத்தானை அறியாதார் யார்?
கடவுளை நான் கண்டுகொள்ளாதது குறித்துக்
கடுங்கோபம் அவனுக்கு என் மீது
”நீ பெரிய புடுங்கியோ?” என்கிறான்

எளியவன் நான்
என்றாலும்
வானம் என் தலைமீது
ஒரு பதாகை போல்
காற்று அப்பதாகை மீது
ஒரு மரக்கிளைபோல்
காலம் அம்மரக்கிளை மீது
ஒரு பறவைபோல்
வாழ்வு அப்பறவை மீது
ஒரு பாடல்போல்
மரணம் அப்பாடல் மீது
ஒரு வீடுபோல்

அப்பாடலும்
பூமியில் அஸ்திவாரம் கொள்ளாத தன் வீட்டை
எங்கும் இறக்கிவைப்பதில்லை
வெளியெங்கும் வியாபிக்கும் அப்பாடல்
பூமியின் சகலத்திலும் படியத் துடிக்கும்
பூமியில் அஸ்திவாரம்கொண்ட
சாத்தான் மற்றும் கடவுளின் வீடுகள் மீதும்!

Read more...

Friday, March 22, 2013

கண்ணாடி

நலுங்காத நீரில்
நான் உம்மைக் காட்டினேன்
காலைப் பனித்துளியில்
நான் உம்மைக் காட்டினேன்
எப்போதும் நான் உம்மைப் பிரதிபலித்தேன்
நீரோ உம்மை ஒப்பனை செய்து கொள்வதற்கே
என்னை அணுகினீர்
எல்லாம் அறிந்தவர்போல்
எப்போதும் உமக்கு எண்ணம்
நீர் கண்டதெல்லாம் உம் மூஞ்சியைத்தானே.
கண்டதின் அடிப்படையில் நீர் கதைத்ததுவும்
உம் மூஞ்சியைத் தவிர வேறென்ன?
என்னை அறிந்தீரா?
கனத்த ஒரு மௌனம்தான் நான் என
உதறினீர்
உலகை ஒரு கேளிக்கைக்கூடமாகவும்
அஞ்சி ஒளிபவர்களின் புகலிடமாகவும்
மாற்றினீர்
சாதனைகள் செய்யத் துடித்து எழுந்து
அப்புறம் சலிக்கிறீர்:
செத்துத் தொலைக்கலாம், இல்லை,
வாழ்ந்தே தொலைக்கலாம் என்று.
இன்று உம் முன்னால் நான் ஒரு
நட்சத்திரம் நிறைந்த ஆகாயம்.
அசக்தனான நீர்தான் இப்போது
உமது அனுபவங்களின் சவ ஊர்வலத்தை
என்மீது நடத்துகிறீர்; நானல்ல.
இன்று உம் உயிராசையும் உம்மைக் கைவிட்டிருக்க
அவநம்பிக்கையின் தளர்ச்சியிலிருந்து
உம்மைப் பற்றி இழுக்கிறது
கருணை, அழகு எனும் பிதற்றல்களுக்கெல்லாம்
அகப்படாத ஓர் அற்புதம்!
அதை நிகழ்த்துவதும் நீர் தான் என்று
முடிவு செய்ய முடியாதபடிக்கு இருக்கிறதா அது?
உடனே நான்தான் அது என்ற
முடிவுக்கு வருகிறீரா?
வேண்டாம்
எந்த ஒரு முடிவுக்கும் நீர் வரவேண்டாம்
உம் நினைவிலும் கூட எனக்குச் சிலை வைத்துவிடாது
போம் அதைப் பின்தொடர்ந்து.
உமது முடிவுகளிலும் உமது சிலைகளிலும்
தெரியப்போவது உம் மூஞ்சிதான்; நானல்ல

Read more...

Thursday, March 21, 2013

சர்வமும் பூர்வமும் சட்டையுரிக்கும் பாம்பும்

’பிராமணன்’ ஆக முடியவில்லை,
அது இங்கே இன்னும்
பிறப்பால் தீர்மானிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாலும்;
ஆகவே ’முற்போக்கு’

’முற்போக்கு’ அறைக்குள்ளும் அதே கூத்தா?
வாங்கடா வெளியே என்று
வந்தாயிற்று ’தலித்’ கொட்டாய்க்கு

கொட்டாய்க்குள்ளும் அது வந்துண்டா?
அட, அப்போ பார்த்துக்கிடலாமண்ணே
கொஞ்ச நேரம் நிம்மதியா
இருக்கவிடமாட்டேங்கிறியே என்றவர்
வாடைக்காற்று உடம்புக்கு ஆகாதென்று
தன் கொட்டாய்க்குள் புகுந்துகொண்டார்

உஸ் உஸ்ஸென்று உறுமி அலைகிறது
காற்றினிலே ஒரு சர்ப்பம்
வேலியிலே தொங்கிக்கொண்டிருக்கிறது
அதன் பிராமணச்சட்டை
அதன் அசைவிலும் சிமிட்டலிலும் அதிர்கிறது
யாராலும் எடுத்து அணியமுடியாத அதன் மகத்துவம்

குளித்து முடித்து
தன் முற்போக்குச் சட்டையை எடுக்கத் திரும்பிய
சண்முகனைத் துரத்திற்று, படம் விரித்து
ஜன்னல் கம்பியில் மின்னல்போல் நின்றிருந்த சர்ப்பம்

கொட்டாய்க்குள் புகுந்து
அங்குள்ளோரையும் அலறியடிக்கச் செய்துவிட்டு
ஒளிரும் கண்களிலும்
நிமிர்ந்து நின்று
தன் இரட்டை நாக்கை நீட்டி இழுத்த
சப்புக்கொட்டலிலும்
வெற்றிகொண்ட கடமைவீரனின்
பெருமிதத்தைக் காட்டிவிட்டு,
வெடுக்கென்று மடங்கி,
விடுவிடுவென்று தப்பித்து
சுதர்ம வேகத்துடன்
விரைகிறது அது
தன்னை வழிபடுவோரையும்
தடி எடுத்துக் கொல்ல வருவோரையும்
விட்டு விடு விடுவென்று...

கண்ணுக்கு மறைந்து
காற்றில் கலந்து
என் உயிர்மெய்யைத் தொட்டு
உலுக்குகிறது அதன் தீண்டல்

Read more...

Wednesday, March 20, 2013

குடி (பூமியெனும் பூதத்தின் இரத்தத்தினால் தயாரிக்கப்பட்டது)

காமத்தின் வெக்கையும் அதன் ஸ்வப்ன ஸ்கலிதமும்.
காதலின் ஆலிங்கனம் பற்றிய கனவு.
கடிகார முள்ளில் தொங்கியபடி
காலம் கெட்டுவிட்டதென அரற்றும் கோமாளியும்
அவன் வாசலில் வந்து நிற்கும் சவ்வண்டியும்.
பாரவண்டி ஏறிப் பிதுங்கிய அகாலப் பிரசவம்.
ஹைபிரிட் காய்கனிகள், ஹைபிரிட் முலைகள்,
மற்றும் ஹைபிரிட் ஆண்குறிகளின் அமோக விளைச்சல்
விபசாரத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒழுக்கம்.
கொல்லும் விஷங்களினால் நிறுவப்படும் அரண்கள்.
வன்முறைக்காளான பெண்ணின்
உடல் பொசுங்கும் நெடி.
கருவிலேயே கொலையுறும் பெண்சிசுக்கள்.
கழிவு நீர் பீச்சும் முலைகள்.

சித்தம் கலங்குவது போலிருக்கிறது நண்பனே
இன்னும் கொஞ்சம் ஊற்று

உரித்த பழம்! உருவின கீரை! துருவின தேங்காய்! என
பாலிதீன் பைகளில் அடைக்கும் இயந்திரங்களின் வேகம்.
அகந்தையின் ஊளைகளிலிருந்து அதிரும் மேடை முழக்கங்கள்.
ரணகளத்தின் மீது மிதக்கும் சிம்மாசனங்கள்.
சிறகு முளைக்குமுன் கொல்லப்பட்ட ஜீவன்களின்
மரணவாடை வீசும் பட்டாடை.
புண்ணின் சீழ்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஷாம்பூ
அழியும் காடுகளின் பச்சை இரத்தம்.
மயானத்தின் மௌனத்தில் ஒலிக்கும்
மரித்தோர்களின் கூட்டுக்கீதம்.
ஏழைகளின் தனிமை.
அறிவாளியின் திமிர்.
மூடனின் சாமர்த்தியம்.
மிதிக்கப்பட்டுக் கிடக்கும் மனிதனின் பொறுமல்.
இன்னும் ஒதுக்கப்படும் மனிதனின் ஆறாத சினம்.
ஞானியின் வேதனை.
சொல்லில் முடிந்தவைகளில் நம்பிக்கை வைக்கும்
கலைஞனின் நாறும் வியர்வை.

நிதர்சன நெருப்பும் அதனுள்ளிருந்து
எழும் தரிசன நிலவும்.
பதறும் நோயாளி முன்
தீர்க்கமான அமைதியுடன் இயங்கும்
மருத்துவனின் முகத்தில் ஒளிரும் பிரகிருதியின் அழகு.
கருப்பொறி இயல் வல்லுநனின்
கருவுக்குள் நுழைய முன்னேறும் கவிதை...
எல்லாம் எல்லாம் எல்லாம் ஆக்கிரமிப்புகளே இன்று!
ஆக்கிரமிப்புகளைச் சவட்டும்
புல்டோசர்களின் வடிவில்காலம்...

சித்தம் அழிவது போலிருக்கிறது, நண்பனே,
போதும்; இது எத்தனையாவது கிளாஸ்?

Read more...

Tuesday, March 19, 2013

கோபம் கொண்ட யானையும் ஊரைவிட்டு ஒதுங்கிநிற்கும் அவனும்

ஒதுங்கியும் ஒதுக்கப்பட்டும்
ஊருக்கு வெளியே இருந்தான் அவன்
ஆற்றில் வெள்ளம் பெருகியபோதெல்லாம்
அடித்துச்செல்லப்பட்டது அவன் குடிசை
(அப்போது அவன் ஒரு சுட்டெறும்பைப்போல்
ஒரு மரத்தில் தொற்றிக்கொண்டான்)
கோபம் கொண்ட யானை
காட்டுக்குள்ளிலிருந்து இறங்கியபோதெல்லாம்
அவன் தோட்டம் சூறையாடப்பட்டது
கவனமாய் விலகி நின்று
அவன் அதைப் பாரத்துக்கொண்டிருந்தான்

மறுபக்கம்,
எப்போதும் தூய காற்று
அவனுள் புகுந்து வெளியேறியது,
மன்னிக்கத்தக்க
ஆகக் குறைந்த சிறு அசுத்தத்துடன்.
மிகுந்த ஆரோக்கியத்துடனும்
அச்சமற்றும் இருந்தன
அவனது தோட்டத்து மலர்கள்.
அவனது வானம்
எல்லையின்மைவரை விரிந்திருந்த்து
அந்த வானத்தை மீட்டிக்கொண்டிந்தன
பறவைகளின் குரல் விரல்கள்.
கண்கண்ட ஜீவராசிகள் அனைத்தும்
அவனைத் தங்கள் உலகோடு ஏற்றுக்கொண்டன
ஒரு கணமும் அவனைத் தனிமைப் பேய் பிடித்துக்கொள்ளாதபடி
பார்த்துக்கொண்டன விண்மீன்கள்

என்றாலும்
ஒரு பெரிய துக்கம்
அவனைச் சவட்டிக்கொண்டிருந்தது
அடிக்கடி

அன்று அது தன் பணிமுடித்துத்
திரும்பிக் கொண்டிருந்த காட்சியை,
அதன் பின்புறத்தை, பின்புலத்தை
அவன் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான்
அதன் கோபம்
அதன் அழிமாட்டம்
அதன் பிறகு அது மேற்கொள்ளும்
நிதானம்
தீர்க்கம்
பார்வைவிட்டு மறையுமுன்
வாலசைவில் அது காட்டிய எச்சரிக்கை.

Read more...

Monday, March 18, 2013

(எனது) இருப்பு

நான் மரித்தவுடன் துவங்குகிறது
எனது இருப்பை மதிக்கும் உங்கள் சடங்காச்சாரங்கள்.
எனது இருப்பு –
உங்கள் ஆக்கினைக்கு எட்டாத புயல்.
இமாலயச் சிகரங்களையும்
குனித்த புருவத்துடன் நோக்கும் வெளி.
உனது அப்பனும் உனது கிரகத்தின் புருஷனுமான
சூர்யனுக்கே ஒளிகொடுக்கும் திமிர்.
மழையென்றும் வெள்ளமென்றும்
பூமியையே ஆட்கொண்டுவிடும் கடல்.
உனது சுகதுக்கங்களைக் கண்டுகொள்ளாத
ஆனந்தத் திருநடனம்.
உனது பாவபுண்ணியங்களைச் சட்டை செய்யாத
கொடூரம். உனது எல்லா அக்கிரமங்களையும்
மன்னித்துவிடும் காருண்யம்.
வித்துக்குள் விருட்சமாய் அடங்கியிருக்கும் ஆவேசம்.
உனது வெடிகுண்டுக்குள் நீ திணித்திருக்கும் மருந்து.
உனது இரும்பின் கூர்விளிம்பில் வழியும் குருதி.
நீ உன் பூமியெங்கும் தூவிவிட்ட முட்செடி.
(காற்றின் சதைகீறி குருதியை உறிஞ்சி கொண்டிருக்கிறது அது)
உனது அலட்சியத்தின் எரிதிரவத்தில் நின்றாடும் நெருப்பு.
(உனது அலட்சியம் தீரும்வரை தீராது அது)
உங்கள் சடங்காச்சாரங்களையும் கலாச்சாரங்களையும்
ஏளனம் செய்தபடி கிடக்கும் என் பிணம்.
உங்கள் போர்க்கருவிகள் எதுகொண்டும்
தீண்டக்கூட முடியாத மௌனம்.
உங்கள் எதிர்கொள்ளலை – உங்களிடமிருந்து எதையுமே –
இறைஞ்சி நிற்காத காம்பீர்யம்.
உன் பாடலுக்கு மட்டுமே புன்னகை அரும்பும் முகம்.

Read more...

Sunday, March 17, 2013

குடை

1.
மனிதனை இறுதியாய்க் காப்பதற்கும்
இந்தக் குடைகளைவிட்டால்
வேறுவழி கிடையாது

இந்தக் குடைகளுக்கும் ஆசைகளுண்டு.
மனிதர்களிடமிருந்து பிய்த்துக்கொண்டோடி
மழைவெளிகளில் நனைந்து திரிய
சாலைகளில் நடனமாட
ஸ்கேட்டிங் போக
கடலைப் பார்த்தபடி
மழையில் நனைந்துகொண்டேயிருக்கும்
பாறைகளைப் போய் பார்க்க
ஆறு, மழையை முழுசாய் எதிர்கொள்ளும்
அற்புதத்தைக் காண

இந்த ஆசைகளுக்கெல்லாம் உள்வழிச் சாலைகளுண்டு
அதுவே கடவுள் உலாப் போகும் பாதை
கவிதை அமைந்திருக்கும் சுரங்கக் குகை
உண்மைப் புரட்சிவாதிகளின் தலைமறைவுப்பிரதேசம்

2.
யுத்தமழையா? மழையுத்தமா?
மிரண்ட குதிரைமேல்
போர் உடைதரித்த வீரனின் உருவிய வாள்
ஒரு பாட்டன் குடையாய் விரிகிறது
காலடியில் இசைக்கத் துவங்குகிறது
மத்தள பூமி

3.
கையில் குடையுடன் நிற்கிறான் அவன்.
இதய நெருப்பிலிருந்து
பொங்கி எழுந்த மலராய்
தன்மீது தானே
கருணையைப் பொழிந்து நிற்கும் அதனைப்
பத்திரத்தோடும் பரவசத்தோடும்
பற்றி அணைத்துக்கொண்டிருக்கும் முஷ்டி
ஆயிரந்தலைச் சர்ப்பக்காற்று சீறுகிறது
முஷ்டியிலுள்ள குடை ஒரு வாளாய்க் குவிந்து
தன் சுழற்சியால் விரிகிறது மனிதனைச் சுற்றி

Read more...

Saturday, March 16, 2013

எருக்கம் விதை

வெளியில் பறந்து அலையும்
ஓர் எருக்கம் விதை
ராகமும் லயமும் கூடிய
அதன் கனவுகளே அதன் சிறகுகள்
அது தனது கதையை எழுதத் தேர்ந்த வெளி
அலகிலாததோடு பூமிக்கு அண்மையானதுமாகும்
பூமியின் மாசுகள் குறித்து
அது படும் வேதனை சொல்ல முடியாதது
தன் வேர்களையும் தன் பூமியையும்
தன் உள் வைத்துக்கொண்டே
அது வெளியில் பறக்கும்விதம்
அதை ஒரு தனிக்கிரகம் ஆக்குகிறது
அது தனது குருதியைப் பாலாகவும்
தனது இலைகளை அப்பங்களாகவும் வடித்திருக்கிறது
ஆனால் ஒரு பிரத்யேக அக்கறையுடன்
அவற்றைப் பாதுகாத்துக் கொண்டுமிருக்கிறது
எல்லா ஜீவன்களைப் போலவும்
அது தனது அன்பை
மலர்களாய் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது
அது நடுங்குகிறது: இரவெங்கும்
அதன் பூக்களை மாலையாய்ச் சூடிக்கொண்டு
பேய்கள் களிப்பதை

Read more...

அம்மணாண்டி

தூய உடை நாகரிக மாந்தர் கால்கள்
வோவோர் வருவோராய்ப்
பின்னும் வெளியிடையே
பிரதானமானதோர் பிம்பமாய் அவன்.
தீப்பிடித்த வீட்டுக்குள் புகுந்து
ஆட்களைக் காப்பாற்றுகையில் விளைந்த
காயங்கள் போல்
தன் உடம்பெங்கும்
எரிவதாய் உணர்ந்தவன்,
பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி
அடைப்புக்களைச் சரி செய்ததுபோல்
தன் உடம்பெங்கும்
நாறியதாய் உணர்ந்தவன்,
தன் உடல் எரிச்சல் தணியவும்
நாற்றம் களையவும்
வீதிக் குளத்துள்ளே
வெற்றுடலாய் இறங்கியவன்,
தன் அம்மண உடற்சிற்பத்தில்
ஒரு தூசு உட்காரச் சம்மதியான்;
ஒரு சிறு கைத்துண்டால் எப்போதும்
விரட்டி விரட்டித் தூசு
துடைத்தபடி இருக்கின்றான்

Read more...

Friday, March 15, 2013

மரணச் செய்தி

இரவோ பகலோ எவ்வேளையானாலும்
வானத்தைப் பார்த்துக் காலத்தை கவனித்த
அந்த மனிதன் இறந்துவிட்டான்
எரிஎண்ணெய் எரிவாயுச் சமையல்
உடலுக்கு ஒத்துக்கொள்ளாத
அந்த மனிதன் இறந்துவிட்டான்
காலுக்குத் தவறாது செருப்பணிவதையும்
காய்ச்சலுக்கு டாக்டரை அணுகுவதையும்
அந்நியமாய் உணர்ந்த
அந்த மனிதன் இறந்துவி்ட்டான்
மின்னல் மழைக் காடுகளில்
கருக்கலோடு போய் காளான் சேகரிப்பதற்கும்
நிலா நிறைந்த குளம் குட்டைகளில்
ராவெல்லாம் தூண்டில் போடுவதற்கும்
காடுகள் கொடிகள் படர்ந்து பச்சித்திருக்கையில்
கோவங்காய்கள் சேகரிக்கவுமாய் வாழ்ந்த
அந்த மனிதன் இறந்துவிட்டான்
சேமிப்பை அறியாதவனும்
எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனுமான
அந்த மனிதன் இறந்துவிட்டான்
பூட்டத் தேவையில்லா வீட்டை வைத்திருந்த
அந்த மனிதன் இறந்துவிட்டான்
பனிக்கும் மழைக்கும் மட்டுமே
முற்றத்தைவிட்டு வீட்டுக்குள் துயின்ற
அந்த மனிதன் இறந்துவிட்டான்
பருவம் தோறும் ஒரு படர்கொடியால்
முற்றத்தில் பந்தலிட்ட
அந்த மனிதன் இறந்துவிட்டான்
தான் குளிக்கும் நீர் கொண்டே
தன் முற்றம் குளிரும் ஓர் ஈரவிரிப்பை
நாள்தோறும் நெய்துவந்த
அந்த மனிதன் இறந்துவிட்டான்
ஆலைச் சங்கொலியையும்
ஆயிரமாய் விரையும் மனிதர்களையும்
ராட்சஸ இயந்திரங்களையும் கண்டு மிரண்ட
அந்த மனிதன் இறந்துவிட்டான்
தனது முதல் வணக்கத்தைச்
சூரியனுக்குச் செய்துவந்த
அந்த மனிதன் இறந்துவிட்டான்
தானே மண் குழைத்துத் தன் கையாலேயே
தன் வீட்டைக் கட்டிக்கொண்ட
அந்த மனிதன் இறந்துவிட்டான்
தன் பிள்ளைகளின் ’முன்னேற்ற’த்தைக் கண்டே
அஞ்சியவன் போல் ஒதுங்கி வாழ்ந்த
அந்த மனிதன் இறந்துவிட்டான்

Read more...

Thursday, March 14, 2013

பாம்பு பாம்பு

அஞ்சிச் சிதறி ஓடும் மனிதர்களை
மோதிக்கொள்ளாமல் விலக்கியபடி
அவர்களை விரட்டிய மையம் நோக்கி
என் பயணம் எதிர்நீச்சலாகியும் கூட
எவ்வளவு ஆர்வமாய்
நான் உன்னருகே வந்தேன்!

தன் உடம்பையே சிம்மாசனமாக்கித்
தலைநிமிர்ந்து நின்றிருந்தாய் நீ
அந்தக் கம்பீர அழகில்
காதலாகி வீழ்ந்தேன்
உன்னை நேர்கொண்டு நோக்குதற்காய்
மண்டியிட்டு அமர்ந்தேன்

ஒருவரையொருவர்
இமை கொட்டாது பார்த்துக்கொண்டு நிற்கிறோம்
நம்மிடையே போதிய இடைவெளி –
காலத்தின் சந்நிதியாய் அது விரிந்து கிடக்கிறது

இதற்கு முன்னும் நாம் சந்தித்திருக்கிறோம்
விறைப்பான வாள் ஒன்று
தன் குழந்தைகளிடம் விளையாட்டாய் வளைந்து
வேடிக்கை காட்டுவதுபோல்
எங்கள் நிர்வாணப் படுக்கையின்
ஜன்னல் கம்பியில் வந்து நின்றிருந்தாய்
அப்புறம் ஒரு நாள்
நண்பர் ஒருவரோடு தண்டவாளத்தைத் தாண்டும்போது
ஒரு வினாடி – என் பாதத்தின் கீழ் –
மிதிபடாமல் தப்பித்து என் முன்னே விரைந்தாய்,
உன் முதுகின்மேல் நிலாவொளிவாள்.

சரி, இப்போது?
இனி என்ன?
அஞ்சுவோர்க்காக வேண்டி
தன்னை ரகஸ்யத்துள் வைத்துக்கொள்வதற்காக
இப்போது பிரியவேண்டி
விடைபெறுவோமா?

நல்லது.

Read more...

Wednesday, March 13, 2013

கடலோரம்

ஆடையை நனைக்காமலேயே
இக் கடலோரம் நடந்து போய்
வந்துவிடலாமென எண்ணினேன்
கடல்தாயின் மணல்மடியில்
சகலரும் குழந்தைகளாமே
எவ்வாறு தொலைந்தேன் நான்?
கடலின் இரைச்சலில் தேடியபடி நடந்தேன்
உனது குரலை
கடலின் இரைச்சலில் கேட்காமல் போனது
உனது கூப்பிடு குரல்

பாறைகளின் மீது
இந்த அலைகளுக்கென்ன?
ஆத்திரமா? அமைதியின்மையா?
கொண்டாட்டமா? நோக்கமா?

ஒன்றுமில்லை

மனோவிகாரங்கள்
காற்றில் கரைந்து விடும்போது
தரிசனமாகிறது உயிரின் சிலிர்ப்பு.
பாறைகளின் மீது அலைகள்-
வாழ்வை நடித்துக்காட்டும்
உயிரின் சிலிர்ப்பு

இந்தப் பாறைகளுக்கப்பால்
பார்த்துக்கொண்டிருந்தேன்,
போகாதே என அசைந்துகொண்டிருந்த
ஒரு சிவப்புக்கொடியைத் தொடர்ந்து.
அப்போது உனது குரல்,
ஓங்கி எழுந்து வந்த ஒரு பிரும்மாண்டம்
நனைத்துவிட்டது என்னை

சிரித்துவிட்டேன் நான்

Read more...

Tuesday, March 12, 2013

உதகை

எங்கிருந்து வந்த்து இவ் வழைப்பென்று
அறியாதே நான் வந்து சேர்ந்தேன்.
உமது பாத இணைகள்மேல் குவியும் ஒரு சிரசுபோல்
உம் அடிவாரம் வந்துநின்றது என் வருகை.
உம் அணைப்பின் குளிர் தொடுகையை எனக்களித்தவாறே
குனிந்து என்னை அள்ளும் உம் கரங்கள்
என்னைத் தூக்கிச் சென்றன
உம் முகமண்டலத்திற்கு.
அங்கே நான் கண்டவை:
சிறகு விரித்த நயனங்களின்
வற்றாத நீரூற்று
பேசும் இதழ்களின்
அரிந்த கனி

அந்த இடம்
மண் ஈர்ப்புக்கு அப்பாலுளதென்பதாலோ
அல்லது மஞ்சுபோல
நான் அவ்வளவு கனமற்றவன் ஆனதாலோ
தைரியமாய்
நீரும் என்னைக் கைவிட்டீர்?

ஓ குருவே
இதோ நான் கைவிட்டவற்றின்
பட்டியல்கள்
அதன் முதல் வரியில் நீர்
(ஏதெனில் உமது பாதம் மண்ணில் பதிந்திருக்கிறது)

எனினும் நான் அறிவேன்
உமது பிராந்தியத்தில்
ஆடைகளின் தூய்மை கூடுதல் காலம் நீடிக்கிறது
செடிபிரிந்த மலர்கள் வெகுநேரம் வாடாதிருக்கின்றன
உண்ணும் பொருள்கள் கெடாதிருக்கின்றன
கனிகள் தம் மேல்தோலைக்
கடினப்படுத்திக் கொள்ளாதிருக்கின்றன
எல்லாம் இனிக்கிறது
இனிப்போ தித்திக்கிறது
என்றாலும் அவை
மரணத்தைத் தம்முள் வைத்திருக்கின்றன

Read more...

Monday, March 11, 2013

சாம்பல் கிண்ணம்

இருக்கக் கூடாதா
சாம்பல் கிண்ணமில்லா அறையும்
பூஜையறையில்லா வீடும்?

சற்றே வாசம் சேர்த்தால்
சிகரெட் சாம்பலும் திருநீறு ஆகிவிடும்.
சிக்மண்ட் ஃப்ராய்டை அழைத்தால்
சிகரெட் ஆண்குறி, சாம்பல் கிண்ணம் பெண்குறி
*(”ஓம், சிவசக்தி ஐக்ய ஸ்வரூபிணியே நமஹ!”)

அவன் சிகரெட் பிடிக்கும் அழகில்தானே
சித்ரா மயங்கியது; கல்யாணத்துக்கப்புறம்
ஏன் அவன் சிகரெட் பிடிப்பதையே வெறுக்கிறாள்?
(இங்கேதான்(டா) இருக்கிறது அந்த மிஸ்டிசிசம்!)

தனக்குப் பிறப்பளித்த கடவுளே
சிகரெட்தான் என்றாலும்
சிகரெட்டார்களை வெறுப்புடன் பார்ப்பவை
சாம்பல் கிண்ணங்கள்
வனங்களின் சாம்பலால் வயிறு எரிபவை.
அதன் விதவிதமான வடிவங்கள்
நுகர் கலாச்சாரச் சைத்தான்கள்.
வடிவமைத்தவர்கள் கலைஞர்களல்லர்
இயந்திரங்கள்.
கண்ணாடிக் கிண்ணமும்
காட்டவில்லையா உன் முகத்தை?

சாம்பல் கிண்ணம் தீண்டும்
உன் விரல்களின் பக்திப்பரவசத்தை
நான் அறிவேன்.
சற்றே வாசம் சேர்த்து
அதனைக் காலி பூஜையறைக்குள் இழுத்து வைத்துக்
கும்பிட முடியுமா?
தான் தூக்கி எறியப்படுவதற்காகவே
வெறுப்பும் நாற்றமும் அருவருப்புமாகி
நம் கோபத்தைத் தூண்டும் ஒரு புதிய கடவுள் அது.
உன் சுரணையின்மை முன்
ஏந்தியதோர் ஏளனப் புன்னகை.

......................
*லலிதா சகஸ்ர நாம இறுதி சுலோகம்.

Read more...

Sunday, March 10, 2013

மழை

மழையைக் கூர்ந்தபடி நான்
மரணத்தின் வாசனையும்
புணர்ச்சியின் வாசனையும் ஒன்றென
உணர்ந்தவனாய் நான்

”கால காலங்களாய்த்
தாகத்தால் சூடேறித்
தகித்துக் கொண்டிருக்கும் இம் மண்ணில்
பொலபொலவெனச் சிந்தி
உடன் மறைந்து போகும்
மழைத் துளிகளல்ல நான்
நான் பெருமழை”
என ஓங்கி அறைந்து கொண்டிருந்தது மழை

என் எண்ணங்களை
எற்றி எற்றித் தூர எறிந்தபடி
இரைந்து பெய்துகொண்டிருந்தது அது

அணைக்கட்டு நீர் விடுதலையாகிவிட்டது
ஒரு பெரிய வாயிற் கதவொன்றின் சிதிலம்
அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தது

ஒவ்வொன்றையும்
இரண்டாய்ப் பிரித்து நின்ற
ஒரு பெருஞ்சுவர்
இடிந்து விழுந்து கரைந்து கொண்டிருந்தது

அழுக்கு நீங்கலும் பரிசுத்தமும்
ஒன்றான ஒன்றாய்
சொல்லும் செயலும்
ஒன்றேயான கோலமாய்
இந்த மழை

*ஒரு குவளை நீர் கேட்டவன் முன்
பூமியையே நிறைக்க வந்ததுவாய்ப்
பெய்துகொண்டிருந்தது மழை

ஓரமாய் நிற்கும் (அதில்தான் அந்த
’செருப்புத் தைக்கும் தாகூர்’ இருக்கிறார்)
இந்த மனிதர்களின் சூடேறிய நெற்றிகளின் கீழ் மட்டும்
ஆறாத ரணப்புண் கண்களின்
கரியதோர் சந்தேகப் பார்வை


....................................................
*இவ்வரிகள் ஒரு உத்தியாக தாகூரின் கவிதையைத் தழுவியுள்ளன. செருப்புத் தைக்கும் தாகூர் என்ற குணச்சித்திரத்தையும் இணைத்துப் பார்த்தால் இது நன்கு புலனாகும். தாகூரின் Stray Birdsல் உள்ள அந்த முழுக்கவிதையும்:
I gave my whole water in joy "sings the waterfall, though little of it is enough for the thirsty."

Read more...

Saturday, March 9, 2013

மவுனமாய் ஒரு சம்பவம்

கால்களை இடறிற்று ஒரு பறவைப்பிணம்
சுற்றிச் சூழ்ந்த விஷப்புகையாய் வானம்
கலவரமுற்ற பறவைகளாய்
திசையெங்கும் குழம்பி அலையும் காற்று
பீதியூட்டுகிறது மரங்களின் அசைவு
மெல்ல நெருங்குகிறது
சலனமற்றிருந்த ஒரு பூதாகரம்

விரைந்துபோய்
ஆழ ஆழ மூழ்குகிறேன் நான்
முழுக்க முழுக்க நீரால் நிறைந்த
என் தலைமறைவுப் பிரதேசத்திற்குள்

என் உள்ளங்கை முத்தாய் ஒளிரும் இது என்ன?
வீணாகிப் போகாத என் இலட்சியமோ?
என் துயர்களை ஆற்றத்
தூதாய் வந்த வெறுங்கனவோ?

என்ன பொழுதிது?
மீண்டும் எட்டிப் பார்க்கிறேன்:
சலனம் கெட்டித்திருக்கும் இவ்வேளையுள்ளும்
காலம் திகட்டாது
கல்லுக்குள் தேரையான
என் உயிர்ப்பாட்டின் வேதனை.
என் நோய் தீரும் வகை எதுவோ?

இரத்தக் கறைபடிந்த சரித்திரமோ நான்?
இயற்கையைப் புறக்கணித்து வளர்ந்த
அதிமேதாவிக் கொழுந்தோ?
அன்பால் ஈர்க்கப்பட்டு
இன்று இம்மலைப்பிரதேசம் வந்து நிற்கிறேன்

முடிவுறாத காலச் சங்கிலி
தன் கனத்த பெருமூச்சுடன்
கண்ணுக்குப் புலனாகாமல் நிற்கிறதோ,
இப் பள்ளத்தாக்கின் மவுனத்திடம்
ஒரு தற்கொலையை வேண்டி?

ஏதோ ஒன்று
யாருக்கும் தெரியாமல்
மவுனமாய் நடந்துகொண்டிருக்கிறது

Read more...

Friday, March 8, 2013

வீதி

மாறப்போகும் எங்கள் வீடு
ஒரு கை வண்டியாய்க் குவிந்து
முடிவற்று இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது;
பக்கலில் பிஞ்சுக் கால்களோடு நான்;
பத்திரம் கருதி
அப்பா என் கையில் கொடுத்திருந்தார்
கரி பிடித்த எரியாத ஒரு சிம்னி விளக்கை.
என் நெஞ்செலும்புக் கூட்டுக்குள்
இன்று அந்த விளக்கு.
கெட்டித்தார் இளக்கும் அக்கினிப் பிழம்பு

பூவரச மரத்திலிருந்து ஒடித்த
குச்சியுடன் நிற்கிறார் அப்பா;
வீதி நெடுக அழுத்தமானதோர் கோடு இழுத்தபடி
கதறக் கதற அக்கா என்னைப்
பள்ளிக்கூடம் இழுத்துச் செல்கிறாள்.
அப்புறம் என்னாயிற்று எனது குரல்வளைக்கு?
வாயை அடைத்தது,
வானத்தில் எரிந்து நின்ற எனது முதல் கதறல்?
நகரின் பிரதான சாலையிலிருக்கும்
நண்பனின் தங்க நகை மாளிகையிலிருந்து கொண்டு
சாலையில் செல்லும் சவ ஊர்வலத்தை
வெறித்துக் கொண்டிருக்கிறேன். அங்கே
பால்யத்திலிருந்தே என்னை விடாது தொற்றி வரும் ’அது’,
மற்றும் தூளியில் ஒரு பிணமாய்ப் போய்க்கொண்டிருக்கும் நான்

எரியும் விளக்கோடு ஒரு நாள் நடந்தபோது
என் பக்கலில் வந்துகொண்டிருந்தது
வீடு அல்ல; அதுதான் என அறிந்தேன்.
அன்றுதான் நான் என் நத்தையின் பாடலை எழுதினேன்.
எனினும், பூர்த்தியாகாத அழகின் லட்சியம்போல்
கண்ணாடிப் பெட்டிக்குள்ளிருந்து கொண்டு
தம் புறம் எட்டாமையின் போதமில்லாது
கதைத்தபடி இருக்கும் தங்க நகைகள்
என்னுள் குமைகின்றன மீண்டும் மீண்டும்.
தலைச்சுமைகள் கூவும் வீதியில்
பாடல் முட்டையிட்டிருக்கும் என் தொண்டைக்குள்ளிருந்து
கிளம்ப மறுக்கிறது கூவல்.
டீ அடிப்பவனின் கைகளில் புகுந்து
அம்ருதத் துளிகளை
ஃபில்டரிலிருந்து இறக்கிக்கொண்டிருக்கிறது அது.
தெருப் பைப்பிலிருந்து ஒரு பெண்
தங்கக் குடத்தில் தண்ணீர் பிடித்துச் செல்பவளாய்
சாலையைக் கடக்கிறாள்.
பேராசையையும் காமத்தையும்
கேளி்க்கையின் ஜரிகை ஆடையால் மறைத்துக்கொண்டு
கூவி அழைக்கும் சினிமாச் சுவரொட்டிகள்.
மிகை அலங்காரத்துடன் நிற்பவளின் விழிகளிலிருந்து
வீதியெங்கும் விரிந்துள்ள காமவலை

டீ தூக்கிச் செல்லும் சிறுவன்
போக்குவரத்தினால் மோதிச் சிதறியவற்றிற்காக அதிர்கிறான்
பெகு கவனமாய்ச் சாலையைக் கடக்கும்
பள்ளிச் சிறுமியின் கையில் பயமற்றுத்
துள்ளிச் சிரித்துக்கொண்டிருக்கிறான் அவள் தம்பி
எங்கும், பஸ் சக்கரத்திற்குள் அரைபடுவதற்கு முன்
சாலை நடுவே காணப்படும் ஒரு பூவின் துல்லியம்;
வயிற்றுச் சதையைக் கீறிக் கொள்வதற்கு முன்
பார்க்கப்படும் கத்தியின் விளிம்பாய்க் கனலும் ஒரு கூர்மை.
இரவிலிருந்து ஒலிக்கும் ஓர் அழுகைக் குரலாய்,
ஒளி அதிகமானவுடன், கருங்கூந்தலின் ஹேர்பின்னில்
கொழக்கிட்டுக் கிடக்கும் தேவகுமாரனின் தலை.
நடுரோட்டில் நட்சத்ரமீன் வடிவில் ஒளிரும் ஒரு மரணம்

விதிகளிலிருந்து தப்பித்து ஓட முயன்ற மனிதனை
அடித்து நிறுத்தியிருக்கிறது ஒரு விபத்து.
விதியும் வீதியும் வேறுவேறல்ல என்பதை
இரத்தம் இது, சதை இது எனக் கொடூரமாய்
பிரித்து விளக்கிக் காட்டி நிற்கும் ஒரு செய்முறைப்பாடம்.
தூரத்துப் பறவையின் குரலாய்
ஒலிக்கும் ஒரு நாடோடிப் பாடல்:
”சாலையிலே துண்டை விரிப்போம்
காலையிலே கண்ணு விழிப்போம்...”

எல்லாவற்றையும் கபளீகரம் செய்துகொண்டு
இளித்துக்கொண்டு நிற்கிறது பிரக்ஞையின்மை

Read more...

Thursday, March 7, 2013

நதி

கவனிப்பாரற்ற அனாதைப் பிணத்தின்
கண்வழி நீராய்க்
கிடந்தது நதி
நான் தாகம் தீர்த்தேன்; கைகால் முகம் கழுவினேன்;
மார்புக் கதுப்பின் மணற்கரையில் நடந்து அமர்ந்தேன்.
ஆடை களைந்து ஆனந்தக் குளியலும் கொண்டுள்ளேன்.
என்றாலும் களையவே முடியாததாயிருந்தது
என் எல்லாச் செயல்களிலும் கலந்திருந்த
வேதனையானதொரு மௌனம்

நான் இருக்கும் இடம் குறித்து
எப்போதும் எழும் என் கேள்விகள்
பதில்களைத் தாங்களே தேடிக்கொள்கின்றன
ஒரு காட்டு விலங்கு தன் இரையைத் தேடிக்கொள்வதுபோல.
ஆகவே அவை பற்றிக் கவலையில்லை

தானாகவே ஒரு மாயக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு
இந்தக் கண்ணீரின் கரையோரமாய்த் தொடங்கி
ஒரு தீர்த்தயாத்திரை செல்கிறது என் உயிர்.
வழி நெடுக
கடவுளின் பிணம் நாறும் கோவில்களின்
நிரம்பிவழியும் குப்பைத் தொட்டி ஜனத்திரள்;
நவீனத் தொழில்நுட்ப வசதிகளால்
அலங்கரிக்கப்பட்ட கல்லறை வீடுகள்;
தொழிற்சாலைகளால் வசப்படுத்தப்பட்டுவிட்ட
அடிமை இல்லங்கள்;
உலகப் பொருள்களின் சந்தையான
நகரின் பிரதான சாலையூடே
அஞ்சி ஊளையிட்டுக் கொண்டோடும் காற்று.
புறப்பட்ட இடத்திற்கே அல்லது
புறப்பட்ட இடம் போன்ற இன்னொரு இடத்திற்கே
திரும்பத் திரும்ப வந்து சேரும் ’பேருந்துகள்’
எக்காலமும் போலில்லாது
மலைமலையாய்க் குவியும் மனிதக்கழிவுகள்
எல்லாம் கலந்து
மாசடைந்து கிடக்கும் நதி

பொங்கும் கண்ணீர் ஊற்று ஒன்றே
இம்மாசுகளைச் சற்றேனும் நகர்த்தும்
ஓர் இயக்கமாயிருக்கிறது

பிணமானவனின் தோள்மலைகள் கண்டு விம்மினேன்
காடு, மலை, பாலை, சதுப்பு, சமவெளி நிலமெங்கும்
பிணத்தை, அதன் மாமிசத்திற்காகப்
பிறாண்டிப் பிய்க்கும் மிருகங்களைப்போல்
கோரமான உழைப்பில் ஈடுபட்டிருந்த
மனிதர்களைக் கண்டேன்

எங்கே போய்க்கொண்டிருக்கிறேன் நான்?
கண்ணீர் உகுக்கும் பிணத்தின்
ஊற்றுக்கண் தேடியா என் யாத்திரை?
ஆழந்காண முடியாத முடிவற்ற வானமாம்
என் அகத்திலல்லவா இருக்கிறது அது?
மாயக் கவர்ச்சியால் உந்தப்பட்டும் ஈர்க்கப்பட்டும்
நான் நடக்கிறேன்
பேராசையாலும் விஞ்ஞானத்தாலும் சீரழிந்த
இந்த நிண உலகின் நாற்றம் அணுகாததும்
பெரிய போபுரங்களில்லாததும் ஒரு தேர்க்கொடி பறக்காததுமான
ஓர் ஆதர்ச மாதிரிக் கிராமத்தை நோக்கி
அதற்குரிய காட்டுப்பாதைத் தடத்திலே நான் போனேன்
கிழக்கிலிருந்து ஓடி வந்து கொண்டிருந்தது
ஒரு மாட்டுவண்டி
ஒளிபரக்க உதித்து வரும் சூரியனைப்போல்
முகம் அவனுக்கு; ஃபேன்ஸி பனியனில்
’ஏகப்பட்ட சந்தோஷம்’ என்ற எழுத்துக்கள்.
நான் வாய்விட்டு வாசித்த போது
”என் முகத்தைப் பார்த்தால் தெரியவில்லையா?”
என்கிறான் அவன்.
செல்வகுமாரனே! அதுதானே உன் பெயர்?
பாவியாகிய இந்தப் பொருளுலகில் நான்
திருவிழாப் பொருட்காட்சிக் கூட்டத்தில்
பெற்றோரைத் தவறவிட்டு அலறும் குழந்தை
செல்வகுமாரனே! அன்று உன் ஓலைக்கூரையின் கீழ்
நான் இதுவரை அனுபவித்திராத அமைதியைக் கண்டேன்
என்றாலும்
மரணத்தைப் பற்றியும் கண்ணீரைப்பற்றியும்
நான் உனக்குச் சொல்லிவிட்டு அகல்கிறேன்

Read more...

Wednesday, March 6, 2013

சிதை

அவிந்த நெருப்பும் உறைந்த புகை மேகங்களுமாய்
மரணத்தின் மடியி்ல்
சற்றே தலை சாய்ந்திருந்தது மத்யான வீதி
மரணமண்டபத் தூண்களாய்க்
கறுகறுத்து நிமிர்ந்த பனைகளூடே...
வெறுமையே
அளந்து அளந்து கொட்டும் முயற்சியாய்
முடிவற்ற வட்டங்களில்
மூழ்கியிருந்தது விண்வெளியில் ஒரு பருந்து

விரையும் லோடுலாரிகளின்
கனத்த சக்கரங்களின் கீழ்
அரைபடும் நெஞ்சுபோல்
சாலையில் அடிக்கடி கடந்து செல்கிறது
ஒரு வேதனை.
புழுதியும் அழுக்குமாகித்
திரும்பத் திரும்ப மழைக்காகக் காத்திருக்கும்
சாலையோரத்து மரங்கள், குடிசைகள்,
இன்று என் வேதனையை அள்ளமுனையாது
மௌனமாய் உற்று நோக்கும்
காலி உப்புப் பெட்டிகள்.
இஷ்டதெய்வம் ஒன்றின் பெயரை உரக்க விளித்து
வெடித்துவிடும் பழைய நைந்த ஓர் இதயம்
என்னிடமில்லை. எனினும்
கடற்காற்றின் தேவதைகள் பறந்து வந்து
களைத்த என் சொற்களை
ஆழ்ந்த நித்திரைக்குள் போர்த்த முனைகின்றன.
அந்தத் தேவதைகள் புலம்பிக் கொண்டோடும்படி
அவ்வப்போது இரும்புத் தடதடப்புடன்
வந்து நிற்கின்றன லாரிகள்.
வியர்வையில் பளபளத்தபடி
உப்பு சுமக்கும் மனிதர்கள் உதிர்த்த
கறுத்த வசவு வார்த்தைகள்
வெளியெங்கும் தீட்டியிருந்தன
ஓர் அசிங்கமான மௌனத்தை

ஆனாலும் இந்த வெயில்
ஒரு வாளின் பளபளப்பேதான்!
எனினும் வெயிலின் உக்கிரத் தகிப்பு
மழை போலவும் சிதை போலவும்
இவர்களைத் தீண்டுகிறது.
கடல் நீரில் உப்பெடுக்கும் முயற்சியில்
சிதையுள் புகுந்து
சிதையாது, மரிக்காது அல்லது
சிதைந்தும் மரித்தும்
சொல்லொணா வதையுடன்
இங்கே தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறது
மானுட மேன்மை அல்லது
மானுடக் கீழ்மை

எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்
உணர்ச்சித் தளத்தின் வெற்றுக் கூற்றுகள் இவை
ஆனால் இவை கண் கூடானவை:
சிதையில் கருகிய வெண்புறாக்களின்
கரிய நிழல்கள் காகங்களாய்
உயிர் பெற்றுத் திரிவதும்
கட்சிக் கொடிக்கம்பங்களின்
உச்சிநுனியில் நின்றபடி
தன் சுயாதீனக் குரலை ஒலிக்கும்
செடிகளின் ஓயாத சலனம்
காற்றெங்கும் பரப்பிய அமைதியின்மையில்
மீண்டும் ஒரு வேதனை கருக்கொள்வதும்

Read more...

Tuesday, March 5, 2013

துயில்

ஒளி உதிப்பதை ஒரு நாளும் பார்த்தறியாத நெடுந்துயில்
துக்கம் அதன் குணபாவம்
என்றாலும் உலகத்திரை முழுக்க ஒளி உமிழும் காட்சிகள்
அதன் குணபாவங்களோ சொல்லி முடியவில்லை

கன்னங்கரேலென்ற ஒரு வேலைக்காரப் பெண்ணின்
கைகளில் அசைந்து அசைந்து துலங்குகிறது ஒரு பாத்திரம்
பொறுமையிலும் உழைப்பிலும் சலிப்பிலும்
கசப்பிலும் கூட அது ஒளிர்கிறது
சமயத்தில் அச்சம் தருகிறது

நீண்டுவந்து என்னை உளவுபார்க்கும்
ஒரு விழியின் டார்ச் ஒளி
என் கண்களைக் குருடாக்கும் என உடன் உணர்ந்து
விலகி ஒளியும்.
அது மரு அமைந்த காதலின் உதடுகளில்
ஒரு மின்னலைப் போலத் தோன்றக்கூடியது.
அந்த மரு வளர்ந்து ஒரு கார்மேகம் போல்
இருட்டி நிற்கும் காலம்:
ஒரு துளி மழைநீரில் புவனத்தின் ஒளிவெள்ளம்

ஒரு புல்லின் இதழில் ஒளிரும் பேருவகை
வாழ்வை மேம்படுத்தும் கனவுகளை விரிக்கிறது.
அதில் கூடுகட்டும் நம்பிக்கைகள்
எப்போதும் துயரத்தில் முடிகின்றன
அழகும் மரணமும் நம்பிக்கைகளும் என்று
ஒரு விநோதக் கலவையிலான ஒரு காலைப்பொழுது
எப்படி இருக்கும்?

ஒவ்வொரு கருக்கலும்
என் துக்கத்தின் உருவகமாய் வருகிறது
விரிந்து கிடக்கும் எனது ஜீவ வெளியில்
இருண்ட ஓர் அச்சம் என்னை உறையவைக்கையில்
அரிவாள் பிறை நிலவு
என் சூடான இரத்தத்தை வழியவிடுகிறது

அழகை வழிபடுவதில்தான் புதைந்துள்ளதா விடுதலை?
அல்லது தியாகத்தின் உயிர்ப்பலியிலா?
தலை கவிழ்ந்து கைகூப்பி விழிமூடிப்
பிரார்த்திக்கத் தொடங்குகையில்
நிறுத்து! என அதிர்ந்த குரல் கேட்டு நிமிர்கிறேன்
ஓர் அகோர உரு
நீண்ட கொடும்பற்களும் வாளேந்திய கைகளுமான
உக்ர காளியாய்க் கர்ஜிக்கிறது
என்னை என் இருப்பிடத்திற்கு விரட்டுகிறது

ஒவ்வொரு கருக்கலிலும்
எனது முழங்காலின் ஆறாத ரணத்தைத்
துடைத்து மருந்து கட்டிவிட்டுப் போகிறது
வானத்திலிருந்து இறங்கி வரும் ஒரு தேவதை
அந்த பிரம்மாண்டமான அரசு மருத்துவமனையில்
அவள் பணிபுரிகிறாள் எனக் கேள்விப்பட்டு
என் குழந்தைமைக் கால ஞாபகங்களுடன் வந்தவன்
தடுத்து நிறுத்தப்பட்டேன், அந்த உடலிலும் ஆன்மாவிலும்
படிந்துவிட்ட சீரழிவின் அதிர்ச்சியால்

இன்று என் அறையின் ஏகமான இருளில்
தீபஜீவாலை போல் சுடர்கிறது
நி்ர்வாணமான ஒரு மனித உடல்
துக்கத்தின் நாவில் மட்டுமே சொட்டும்
ஒரு தேன்துளிக்கனல் அது.
எனில்
மகிழ்ச்சி என்பதை நான் எதற்காகத் தேட வேண்டும்?
ஒளி உதயம் ஒன்றை நான் ஏன் கனாக் காண வேண்டும்?

Read more...

Monday, March 4, 2013

உப்பு ஒளி

தொழுநோய் அரித்த விரல்கள்போல் நிற்கும்
இந்த மொட்டைச் சவர்களைச்
சீர்திருத்தவா? இடத்துக் கட்டவா?
கவலை படிந்த என் அந்தரங்கங்கள்
கரித்த அலுமினியப் பானைகளும்
அடுப்புப் புகையேறிய தட்டுமுட்டுச் சாமான்களும்
கலைந்த கொடித்துணிகளும்
நடுச்சாலையில் நசுங்கிய சாதுப்பிராணியின்
உள்ளுறுப்புகள் போல் பகிரங்கமாகிவிட்டன
இந்தப் புயலில்

உறைந்த என் இரத்தத்தின் நிச்சலனத்தை
ஓங்கிக் கரைத்துக்கொண்டிருக்கின்றன
மழையின் எண்ணிலா வெள்ளிகரங்கள்
ஒரு மரணத்துக்குப்பின்
உலகின் எல்லா ஓடைகளிலும்
என் உதிரம் கலந்து கலகலக்கிறது

மழைத்துளிகள் கிச்சுக்கிச்சு மூட்ட
நுரை சுழித்துக் கொண்டோடும் நதி
அதன் ஆனந்தத்திலும்கூட என் குருதியின் மரணமணம்

நெடுஞ்சாலையில் பதற்றமாய் விரையும் லாரிகள்,
உப்பின் குதலைவெண்சிரிப்பு
மீண்டும் கடலோடு கரைந்துவிடாமல்
தார்ப்பாயால் பாதுகாத்துக்கொண்டு பறக்கின்றன
ஒவ்வொருவர் உணவிலும் ஸ்பூன் ஸ்பூனாய்ப்போய்ச் சேர.
இருந்தும், எனது கூரை போய்விட்டது
எனது பாத்திகள் அழிந்துவிட்டன
வேகமான மழையின் கூர் நகப் பிறாண்டல்களால்
அதீதக் கறுப்பெய்தி
அச்சுறுத்தி நின்ற பனைகளின்
உச்சி ஓலைகளெங்கும்
காயத்துடன் திரியும் சிறுத்தையொன்றின் அலமறும் ஒலி

மழைக்குப்பின்
எதைப்பற்றியும் கவலைப்படாத ஓர் உப்பு ஒளி;
கறுகறுத்த பனைகளின் ஈர மினுமினுப்பில்
ஒரு வைரத்தின் தீவிரமாய்ச் சுடர்கிறது
முகம் காட்டும் சூரியன் முன்னெங்கும்
இன்னும் கரையாத கருமேகங்கள் மற்றும்
சொல்லொணாப் பாரமான என் விரக்தி வானம்

Read more...

Sunday, March 3, 2013

பாறைகள்

மண்ணின் முகத்தில் பாளம்பாளமான
கீறல்களை விதைக்கிறது
இன்று என் ஆசுவாசத்தின்
குரல்வளையை நெரிக்கும்
என் முதல் கதறல் படிந்த ஆகாயத்திலிருந்து
அக்னித் திராவகமாயப் பெய்யும் ஒளி

இரத்தவெறி கொண்ட சரித்திரத்தின்
பாறைகளில் இடறிவிழுந்து
நானும் என் முழங்கால்களைச் சிராய்த்துக்கொள்கிறேன்
என் சீற்றம், என் சிந்தனை, என் கவிதைகள்
எதையுமே ஏளனம் செய்வதாய் நிற்கின்ற
பாறைகளின் பின்னிருந்து மெதுவாய் எட்டிப்பார்க்கிறது
குழந்தையொன்றின் உதயமுகம்
ஒளிந்து ஓடிப்பிடித்து விளையாடும் குழந்தைகளாய்
வளைய வந்த என் உணர்வுகள் களைத்து
அப்பாறைகளின் மேல் சிற்பங்களைப்போல் அமர்ந்து
மூச்சுவாங்குகின்றன
பாறைகளிடையே சிற்றுலா வந்த எங்களுடன்
மரணமும் வனபோஜனத்தில் அமர்கிறது
பாறைகளின் அருவருப்பான பயங்கரமான மௌனத்தை
எங்கள் சிநேகப் பரிவர்த்தனை ஒலிகள் –
முகாமிடத்தைச் சௌகரியப்படுத்தியது போல் –
துப்புரவாக்கி சகஜப்படுத்திக் கொண்டிருக்கின்றன
காலம், ஒற்றைக் காலில் நின்றபடி
ஒரு கோடி நாவசைத்து
வெறுமையை உச்சரித்துக் கொண்டிருக்கும் –
எங்கள் தளம் விரிக்கப்பட்ட – மரக்குடை;
அதன் மற்றொரு கால்
மேகப் பொதிகளாகி வானில் பறக்கமுடியாத
பாறைகளின் பாரமாய் என் நெஞ்சை மிதித்து நிற்கிறது.
என் காயங்களை வருடுகிறது
ஆகாசப் பறவையின் சிறகுக் காற்று.
ஆறாத புண்ணொன்று தன் மாயவலியுடன் வந்து
என் முழங்கால் புண்ணுக்கு மருத்துவம் பார்க்கிறது.
தெள்ளிய நீரோடை ஒன்றைத்
தாகிக்கும் என் குரல்வளையை நெரிக்கின்றன
மரணத்தின் விரல்கள்

Read more...

Saturday, March 2, 2013

மரம்

என் மூச்சுக் காற்றால் ஊதிய
பலூனுக்குள்ளிருக்கும் காற்றைப்போல்
அசைவற்றுக் குந்தியிலிருந்தது காலம்.
ஒரு வெடிகுண்டை
அது வெடித்து விடாமலிருக்க வேண்டுமே
எனக் கவலையோடு பற்றியிருக்கும்
அனைத்து விரல்களையும்போல்
அவன் தன் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தான்

பெருத்த வேதனைக்குப் பிறகு
பூமியில் ஊன்ற ஒப்புக்கொள்ளும் கால்கள்
இன்று யதேஷ்டம்.
உள்ளங் கால்களில் வேர் அரும்ப
என் மண்டையில் ஏற்படும் இளக்கம்
இன்று யதேஷ்டம்.
இன்று இந்த விருட்சம்
என் தலைவிரிகோலம்.
கற்றோர் கூடிய அவையில்
’நீட்டோலை வாசியா நின்ற’ நெடுமரமாய்
என்னைப் புரட்டியிருந்தது மரணம்.
அன்றைய விடியலில்
மரம் அறிந்தவை கவிஞன் அறிந்தவை:
பிரபஞ்ச கானம், பிரபஞ்ச பாஷை, பிரபஞ்ச ஒழுக்கம்.
கற்றோனுக்குத் தெரிந்ததெல்லாம்: ’மக்கள் அவை
முந்தி இருப்பச் செயல், கற்பு, கைதட்டல் பெறல்.’

காலம் வெடித்த வெடிச்சப்தத்தில்
கலவரமுற்ற பறவைகளைப்போல்
கனத்த, உபயோகமற்ற
என் சிந்தனைகளைக் கிழித்துக்கொண்டு
வேகு வேகு என்று மரத்தை நோக்கிச்
சிறகடித்துக்கொண்டு வந்தது ஒரு கரிய காற்று.
சிறு ஆசுவாசத்தை விட்டு விட்டு அது மீண்டும்
ஆழம் காணமுடியாத ஆகாசத்தை நோக்கி
வேகுவேகெனச் சிறகடிக்கிறது.
கீழே, தன் ஒவ்வொரு இலையிலும்
ஒளியை ஏந்திக்கொண்டு நிற்கும் மரம்

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP