Thursday, January 31, 2013

ஓர் ஒளிக்கற்றை

மாசுபட்ட இப்பூமி
புழு வைத்த சிறு இலந்தைப்பழம்போல் ஆக
பிரபஞ்சவெளி வீதியில்
அகண்ட நதிபோல் நீண்ட ஓர் ஒளிக்கற்றையாய்
வந்து நின்றது அது

அறைக்குள் புகுந்து
மூளையெங்கும் ஊடுருவி
இரவெல்லாம் உரையாடி
இந்த அமைதியான காலையிலும்
அவ்வாறே நிறைந்து நின்றது

விடைபெற நிற்கிறதா?
எல்லாவற்றையும் கூட்டிச் சுருக்கிய
இறுதி வாக்கியமாய்
என்ன சொல்ல முயல்கிறது?
சொல்லிவிட்டதா? போய்விட்டதா?
ஆம்
என் அறை அமர்ந்திருக்கும் இப்பூமி
மகாவிஸ்தீரணமாகும்படி
தூரத்தே போய்விட்டது

அது என்னோடாடிய உரையாடல் -
வார்த்தைகளில் இல்லை அது
ஒரு பேரமைதி நிம்மதி சாந்தி
அது மட்டும் எப்போதும்
தன் பிரம்மாண்டம் மாறாமல்
தங்கிவிட்டது

Read more...

சொற்கள்

பேசி முடித்த ஒவ்வொரு வேளையிலும்
புதிரானதொரு துக்கம் அழுத்துகிறது
என் சொற்களே
தன் நோக்கத்திற் கெதிராய்ச்
செயல்பட்டுவிட்ட மாதிரி

முதன் முதலில் தோன்றிய சொல்
’நான்’ ஆக இருந்தது
அதை அழிக்க எனத் தோன்றின
ஆயிரம் சொற்கள்
தோன்றிக்கொண்டே இருந்தன
சொற்களின் ரணகளக் கூச்சல்
அனைத்தும் அழிந்தன ஒருபோது
ஒலியிலாச் சொல்லொன்று
ஒளிர்ந்தபோது

ஆனந்தமானது அவ்வேளை
நல்லவேளை
என் பேச்சை அவிழ்த்துவிடும்
நபர் யாரும் இல்லை
பறவைகளின் ஒலிகளில் சொற்களில்லை
பரிதியின் பொன்னில் சொற்களில்லை
அந்தக் காலைக் குளிர்விரலில் சொற்களில்லை
மரங்களின் அசையும் பச்சை நாவுகளில்
மேகங்களின் ஒளிரும் மெல்லிய நகர்வில்
சொற்களில்லை ஆனால்
இருந்தது ஓர் உரையாடலின் கனி

கட்டித் தழுவி முத்தமிட்டோ
காலில் விழுந்தோ
நான் உன்னைக் காட்டிக் கொடுத்துவிடுகிறேன்
நீ ஒவ்வொரு முறையும் சிலுவையிலேறி
ஒவ்வொரு முறையும் உயிர்த்தெழுகிறாய்

Read more...

Wednesday, January 30, 2013

இயற்கை

அன்று கண்விழித்தபோது
எதிரே நின்றிருந்தது அது
இயற்கை
எவ்வளவு எளிய ஒரு சொல்

கடவுள் இல்லாத ஓர் ஆலயம்
இல்லாத கடவுள்
நான் அணிந்திராத மணிமுடியை
வீசி நொறுக்கிய சிதறல்
எண்ணற்ற வயதின் எண்ணற்ற சாதனைகளின்
வெற்றிப் பதக்கங்கள் சிதறிக் கிடக்கும் கோலம்
அதன் மேல் ஓர் ஒளிமூட்டம் போல்
சொல்லொணாததோர் அமைதி அடக்கம்
நெகிழ்ச்சி தாழ்மை மென்மை
எதாலும் ஊடுருவ முடியாததாய்
எதையும் ஊடுருவக் கூடியதாய்
அதன் உறுதி
என் கண்கள் மூடிய பிறகும்
இருக்கும் அக்காட்சி
அதைக் கண்டவர் எவருமில்லையோ?

என்ன செய்வதென்றறியாது
எத்தனை சிலைகளைப் படைத்து
எத்தனை மலர்களைக் கிள்ளி இறைத்துவிட்டோம்
ஒரு மலராவது அந்த அர்ச்சனையின்போது
மகிழ்ந்திருக்குமா?
ஒரு கல்லாவது தான் சிற்பமானதில்
பெருமைப்பட்டிருக்குமா?

Read more...

புதிய குழந்தை

அனுப்புவோனோ
தூதுவனோ இல்லாத
அற்புதச் செய்தி நீ.
இதயத்தை
ஒரு பரிசுப் பொட்டலமாய்ச் சமர்ப்பிக்கவோ
ஓடோடியும் வந்தேன் நான் உன்னைக் காண?
எங்கிருந்து வருகிறோம்
ஏன் எதற்காக என்பதையே அறியாத
சின்னஞ் சிறு ஜீவனே,
எத்தனை கோடி ஆண்டுகள்
கடல் தன் கர்ப்பத்துள் வைத்துன்னைத் தாலாட்டியது
எத்தனை நட்சத்திரங்கள் எத்தனை காலங்கள்
கண்கொட்டாமல் உன் வருகையை
எதிர்பார்த்திருந்தன?
இன்று நாங்கள் உன்னைக் காண்கிறோமா?
புத்தம் புதிய விருந்தாளியே
இன்று உன் வருகைமுன்
நாங்கள் கூசிக் குறுகி நிற்கிறதேன்?
எங்கள் மூளை பதிவுகளால் நிறைந்தது.
பாதுகாப்பு பயம் அதன் அடித்தளம்.
அதன் விபரீத உச்ச விளைவு எங்கள் போர் ஆயுதங்கள்
எத்தகைய குரூரங்களினால் காய்ந்து உறைந்தவை
எங்கள் கைகள்?
எவ்வளவு மென்மை எவ்வளவு உறுதி
எவ்வளவு பரிசுத்தம் உன்னில்

உன் வருகையைப் பதிவு செய்யும்
அரசு அறிவதென்ன?
உனக்குத் தயாராய் நாங்கள் வைத்திருக்கும்
வாழ்க்கை என்ன?
எங்கள் மகிழ்ச்சியின் தூய்மை/தூய்மையின்மை குறித்து
நீ என்ன எண்ணுகிறாய்?
எண்ணவே மாட்டாய்.
மாபெரும் கருணையினதும் மன்னிப்பினதுமான
செய்தியன்றோ நீ.
எங்கள் ஆசைகளையும் கனவுகளையும்
அச்சங்களையும் பெருமைகளையும்
பரிசீலிக்காமலேயே நாங்கள் உனக்குச் சூட்டுகிறோமோ?
நாங்கள் உன்னைச் சிக்கவைத்த
ஆபத்துகளினின்றும்
மரணத்தின் மூலம் தப்பித்தே
இன்று வந்துள்ளாயோ?
உன் முகத்தில் எங்களின் சாயல் கண்டு எழும்
எங்கள் குதூகலத்தின் பொருள்?
இச் சாயல்கள் மூலம் நீ உணர்த்தும் குறிப்பு?

Read more...

Tuesday, January 29, 2013

விடிவு

1.
எத்தனைமுறை இரத்த வெள்ளத்தில்
மாண்டு மரித்தாலும் திரும்பத் திரும்பப்
புத்துயிர் முறுவலுடன் எழுகிறான் சூரியன்
அவ்வேளை
இரவின் ஆழத்துள் கனன்றெரிந்த
கோடானு கோடி நட்சத்ரப் புண்கள்
எங்கு போயின?
மறைந்திருந்து தாக்கும் அவற்றை முன்னுணர்ந்து
அலறும் சூரியன்
மரித்தபின்
எந்த ஒரு தீண்டலால்
திரும்பத் திரும்ப உயிர்த்தெழுகிறான்
ஒரு சிறு கறையுமின்றி?

தன் அனுபவப் புண்கள்
கோடானு கோடிப் புண்களெங்கும் எதிரொலித்து
அவனைத் தாக்கி அழிக்கவும்
அவன் எவ்வாறு இடம் கொடுத்தான்?

2.
இந்த வானத்தின் இருளும்
ஒளியின் சுக்கல் சுக்கல்களான விண்மீன்களும்
நெஞ்சை அடைக்கின்றன
என் விழி ஓடி ஓடி அழுதபடி
அந்த மீன்களைப் பொறுக்குகின்றது
என் வேதனைமேல் கருணை கொண்டு
ஒன்றோடொன்று தாங்களாய் இணைந்து
தங்கள் எண்ணிக்கையைக் குறைத்தபடி இருந்தன

காலை என உதித்தது
சிதறாத ஒளி ஒன்று

Read more...

விழிப்பு

விடிகாலை
என்னால் விவரிக்க ஒண்ணாத
ஒரு மாமனிதனைப் போல்
என்னைத் தொட்டு எழுப்பக் கூடுமா

அல்ல
அது ஒரு மனிதனல்ல
ஒரு பரிசுப் பொருளாய்
என் முன் விரிந்திருந்த உலகம்
ஒரு மனிதனல்ல

இதயத்தில் பொங்கி
என் உடலெங்கும் சுறுசுறுப்பாய்ப்
பாயும் இந்த இரத்தத்தின் மொழியை
எப்படி மொழிபெயர்ப்பேன்
அன்பு என்பேனா
காமம் என்பேனா
வாழ்வின் துடிப்பு என்பேனா
மரணம் என்பேனா
என்ன வலி இது
என்ன ஆனந்தம் இது
அழகின் எதிரொலியா
என் தனிமையின் தவிப்பா
தன்மையின் மவுனமா
இரு பக்கங்களும் ஒன்றாகும்
எந்த ஒரு மதிற்சுவர்மேல் நிற்கிறேன்
எந்த ஊசி முனை இது?

அவ்வேளை
எதிர்ப்படும் உன்னைக்
கட்டிக் தழுவும் என் கரங்களுள்
கடமைகளின் அழுத்தம் மறந்து
ஒரு கணமேனும் உயிர்த்திருப்பாயா?

Read more...

Monday, January 28, 2013

இனி ஒருக்காலும்...

இப்பூமியிலேயே மிக அழகானதோர்
காட்சியை நான் கண்டுவிட்டேன்
இனி ஒருக்காலும் அக்காட்சியை விட்டென்
விழிகள் அகலாது
வழி தவறியவன் போலவோ
வண்டி தவறவிட்டவன் போலவோ
இனி ஒருக்காலும் என் விழிகள் முழிக்காது
இனி ஒருக்காலும் என் கால்கள் பிறிதோரிடம்
தேடி அலையாது
இனி ஒருக்காலும் பதற்றத்தினால்
என் நெஞ்சம் துடிக்காது
இனி ஒருக்காலும் ஆசைகளை
என் தோள்கள் சுமக்காது
இனி ஒருக்காலும் துயரங்களால்
என் நடை தளராது
இனி ஒருக்காலும் நால்வர் தோள்களிலே
என் கைகள்தன் கூட்டைக் கட்டாது
இனி ஒருக்காலும் மனிதர் முதுகின்மேல்
என் மேடை அமையாது

இப்பூமியின் மேல் தன்னந் தனியாய்
மனிதன் ஒருவன் நடந்து செல்லும் காட்சியை
நான் கண்டுவிட்டேன்
அவன் கால்களின் இயக்கத்தையும்
விழிகளையும் நான் பார்த்துவிட்டேன்
அவன் நின்றால்
எத்தகைய பாடலில் பூமியும் சிரித்தது
அவனை நான் மிக அண்மையில்
பார்த்துவிட்டேன் பேசிவிட்டேன்
என்று எங்கிருந்து தன் பயணம் தொடங்குகிறது
என்று எங்கு போய் அது முடிகிறது
கேள்வியும் அறியான் விடையும் அறியான்
மரணத்தைவிடத் தான் மேலானவன் என்றது
அவனது காம்பீர்யம்
எனினும் மரணமே அவன் குரலின்
கனிவின் காரணம்.
அவன் கொந்தளிப்பின் ரகசியமும்
அன்பெனத் தென்பட்டது,
தொலை தூரத்து அழைப்பொலியாய்
அவன் குரலில் கனன்றது நாதம்

இப்பூமியிலேயே மிக அழகானதோர் காட்சியை
நான் கண்டுவிட்டேன்
இப் பூமியின் மேல் தன்னந்தனியாய்
மனிதன் ஒருவன் நடந்துசெல்லும் காட்சியை

Read more...

வெகு யோசனைக்குப் பின்...

எங்கிருந்துவந்து சூழ்கிறது இந்த விழிகளைப்
பக்குவமாய்க் காக்கும்இந்த நீர்?

காட்சியளிப்பதே தன் கடமையென உணர்ந்தவராய் எழுந்தார்
துயர் குழப்பமிக்க இவ்வுலகில் தன் கடமை என்னவென்ற
வெகுயோசனைக்குப் பின் கடவுள்

Read more...

Sunday, January 27, 2013

ஒவ்வொரு கோடை மாலையும்

ஒவ்வொரு கோடை மாலையும்
எங்கள் மொட்டைமாடியை மாற்றுகிறது
அவசரமானதோர் வாசஸ்தலமாய்
காட்டுவெளியில் கட்டிய ஒரு கூடாரமாய்
மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலின் மேல்தளமாய்

பாதாள உலகமாய் ஆகிறது வீடு
எனினும் அங்கேதான் போயாகணும்
நாங்கள் சேகரித்த சவுகரியங்கள் அனைத்தும்
அங்கேதான் என்பதால். மற்றும்
பாம்பு தீண்டி மரித்த காதலியை மீட்கவும்

இந்தக் கப்பல் மூழ்கிவிடும்
நெருங்கிவிட்டது பனிப்பாறை
நட்சத்ர வானை இழந்த பாதாள உலகுக்குள்தான்
நாங்கள் இனிமேல் வாழப் பழக வேண்டும்,
பிரதிபலிக்கும் நட்சத்ரங்களுடனும்
அலைமோதும் சந்திர சூர்யர்களோடும்
ஆர்பியஸின் பாடலோடும்
தேவதைகளின் மின்விசிறிச் சிறகுகளினடியில்

கடலின் பாதாளத்திற்குள்ளும் கோடையுண்டு
மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலின் மேல்தளம் போன்ற
மொட்டைமாடியுண்டு

Read more...

சூர்ய மின்விசிறி

எனது அன்பான எக்ஸ்ஹாஸ்டிங் மின்விசிறியே
இடையறாது சுழலும் என் சூரியனே
ஆக்கும் செயல்களால்
புகைமண்டி இருண்டு
கண்ணைக் கரிக்கும் இந்த அறையில்
எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்காத
செயல்வீரம் நீ

Read more...

Saturday, January 26, 2013

கவிஞனின் புரட்சி

மூளை புகைந்து எழுந்த காமமோ?
உழைப்போ உள்தகுதியோ இன்றி
ஒய்யாரமாய் வாழ்ந்தது
தன் தொடர்ச்சியை விழையும் தவிப்போ?

எங்குபோய் நிற்குமிந்தத் தகிப்பு?

துதி தெறிக்கும் பூஜைகள்
பத்தினிப் பெண்டாட்டியும்
புத்திர உத்தமர்களும்
அண்ணாந்து பார்க்கும்படியாய்
அய்ந்தாறு சின்னவீடுகள்
செல்வம்
செல்வாக்கு
அதிகாரம்
அடக்குமுறை
கிளர்ச்சி
இரத்தக் களறி

Read more...

குழிப்பந்து

எந்த ஒரு குழியிலும் அமரவிரும்பாது
உருள விரும்பும் பந்தின் சோகம்
அறியாதவர்கள் அந்தச் சிறுவர்கள்

உருண்டோடும் பந்து
ஏதாவதொரு குழியில் அமரும்
எந்த ஒரு குழியிலும் அமரவில்லையெனில்
திரும்பத் திரும்ப உருட்டப்படும்

குழிப்பந்தெடுத்துத் தாக்குவதற்கும்
தாக்குதலினின்று தப்பிப்பதற்கும்
எப்போதும் துடிப்போடிருக்க வேண்டும்
அது ஒரு விளையாட்டு அவர்களுக்கு

Read more...

Friday, January 25, 2013

பாவம்

யார் எப்போது எவர்மீது
இதை உச்சரிக்கிறார்கள்?
கருணையின் நிழலில் பதுங்கியபடி
இந்த வாளுக்கிரையாகவிருக்கும்
ஆயிரமாண்டு வயதுடைய கொடூரனே
உனக்குள் சுழல்கிறது வர்ணாசிரமக் காப்பு
பூர்வஜன்மப்
பாவபுண்ணியம் பேசும் பிறப்புத் தத்துவம்
உன் மரணத்திற் பிறந்துள்ளது
கருணையின் செயல்வடிவம்

Read more...

தீவின் அகம்

தளக்கல் பதிக்கப்பட்ட இந்த மொட்டைமாடி
விநோதமான ஒரு தீவு
விசித்திரமான பாலை
பாழ் தகிக்கும் பாறை

சுற்றிலும் திடீரென்று
நான் அப்போதுதான் கண்ணுற்ற வெள்ளம்,
விண்ணோடு கொஞ்சும்
ஒரு பள்ளத்தாக்குக் கடல் அமிர்தம்,
மரணக் கைப்பிடிச் சுவர்,
வேகுந் துயர் கண்டோ காணாதோ
பூமி மடியிலிருந்து பொங்கித்
தாவி அணையும் ஒரு படிக்கட்டு
செல்லப் பிராணி ஒன்றின் மிருகப் பரவசம்

நான் மரித்தேன் அக்காதல் முன்னால்
அடைந்தேன் பள்ளத்தாக்கின் குளிர்மடியை
அழைத்துச் செல்லப்பட்டேன்
கதவு திறந்து
விநோதமான அத்தீவின் அகத்திற்குள்
கடல் அமிர்தத்தின் கருவறைக்குள்
பெருவளைக்குள்
ஒளிக்குகைக்குள்

Read more...

Thursday, January 24, 2013

சர்க்கஸ் சுந்தரி

ஒத்திசைவுமிக்க இப்பிரபஞ்சத்தின்
ஒத்திசைவுமிக்க ஒரு படைப்பு என்பதோ
அந்தரத்தில் ஊஞ்சலாய்த் தொங்கும் இந்தக்
கழியில் வந்து நிற்கும் இச்சுந்தரியின் அழகு ரகசியம்?

அழகும் இசையும் பழகுமிந்த நடனத்தின் ரகசியமோ
சிந்தையை ஊமையாக்கியது?

Read more...

மூன்றாவது மாடியின்கீழ்

இந்த மின்விளக்குக் கோலம்
அம்மா, உன் கழுத்துமணி ஆரம்-எனப்
பொங்கியதோர் நெஞ்சின் கீழே
மனிதர்கள் ஓராயிரம் மதலைகள்.
தலைக்கு மேலே விண்மீன் வைரங்கள் கோடித் தூசுகளாக
நடக்கும் இரு கால்கள்

Read more...

நீயுமொரு கிறுக்கென்றால் வா

நீயுமொரு கிறுக்கென்றால் வா
உன்னிடம் மட்டும் சொல்லத் துணிவேன் அதை.
பல படிப்பாளிகளுக்கும் பண்டித சிரோன்மணிகளுக்கும்
வாய்க்காத
மேதமையின் இரகசியத்தை நான் உனக்குச் சொல்கிறேன்:

”எல்லாச் சொற்களும் கிட்டத்தட்ட
ஒரே பொருளையே குறிக்கின்றன”
மனதில் வை. யாரிடமும் இதைச் சொல்ல முனையாதே
எனக்குப்போல் உனக்கொருவன் கிடைத்தாலன்றி

ஊமையொன்று ஓர்
ஊமைதேடிப் போகும்
சரளமாய்ப் பேசிக் கொண்டிருக்க.
எவ்வளவு கொடுமையானது ஊமையொன்று
உளறுவாயனிடம் மாட்டிக்கொள்வது

Read more...

Wednesday, January 23, 2013

காவியம்

எட்டுத் திக்குகளும் மதர்த்தெழுந்து
கைகட்டி நிற்க
எந்த ஓர் அற்புத விளக்கை
நான் தீண்டிவிட்டேன்?

கைகட்டி நிற்கும் இப்பூதத்தை ஏவிக்
காவியமொன்று பெற்றுக் கொள்வதெளிது
ஆனால் திக்குகளதிரத் தாண்டவமாடும் மூர்த்தீ
நான் எதற்காகக் காத்திருக்கிறேன்?

Read more...

தொலைபேசி

எனக்கு என்றதும் தான் என்ன சந்தோஷம்
எங்கிருந்து
யாரென்னை அழைக்கிறார்கள்
என்ன சேதி
எல்லாம் அறிந்ததுபோல்
என்ன சந்தோஷம்
(அழைப்பொலி கேட்கையிலெல்லாம்
அஞ்சியதுண்டு ஒரு காலம்)

பேனாவும் தாளும் எடுத்துப்
பிடித்துவைத்துக் கொள்ளவில்லையெனில்
அடித்துச் செல்லப்பட்டுவிடுமோ தகவல்கள்
கண்காணாத அந்த வெள்ளத்தில்?

காதருகே ஒலிக்கிறது
நான் அறிந்திராத உலகத்திலிருந்து அந்தக் குரல்
என் பதில் எதையும் எதிர்பாராத அந்தக் குரல்
என்னைப் பித்துப் பிடிக்கவைக்கும் அந்தக் குரல்
தானே துண்டித்துக்கொள்ளும் அந்தக் குரல்

இன்னும் என் இதழருகே நிற்குமுனக்கு
என்னதான் தாகம்?
பேச்செழாது நிற்கிறது
உன்னருகே என் இதழ்

Read more...

Tuesday, January 22, 2013

இரவோடிரவாக

...யாருமறியாவண்ணம் எழுந்து
இவ்வீதியைப் பெருக்கி முடித்துவிட்டு
யாருமறியாவண்ணம் வந்து படுத்துக்கொள்ள வேண்டும்
பூமலரக் காலையில் நீ உலாவுக்கு எழும்போது
உன்னை வியப்பிலாழ்த்த வேண்டும். அத்தோடு
என் காதலை நீ புரிந்துகொண்டு நெகிழும் உன் கோலத்தை
நீயுமறியாவண்ணம் ஒரு மூலையிலிருந்துகொண்டு
நாணத்தால் என் கன்னங்கள் சிவக்க
ஒளிந்து நின்று பார்க்க வேண்டும்
காதல் ரகசியத்தின் போதையை நான் அனுபவிக்க வேண்டும்

ஆனால் இவ்வெண்ணங்களே இன்று ஓர் உபாதையாகிவிட்டன
மடிமிகுந்து தூங்கிவிடுகிறேன்
ஒவ்வொரு காலையும் உன் முகத்தில் விழிக்கக் கூசுகிறேன்

வளர்ந்தபடியே இருக்கவோ இவ் வாதைகள்?

Read more...

மரங்களின் பச்சை உச்சிகளின் மேலே...

மரங்களின் பச்சை உச்சிகளின் மேலே...
நெஞ்சைக் கவ்வும் ஒரு துயர்

வானை வருடிச் செல்லும் அந்தப் பறவைகள் எங்கே?
ஒரு கணமும் பிரியாத அந்தக் கார்மேகங்கள்?
ஈரம் மாறாத அந்த மலைகள்?
சிலிர்க்க வைக்கும் அந்தத் தீண்டல்?

மரங்கள் சூழ்ந்த அந்த இல்லம் எங்கே?
தொட்டு அமரனாக்கிய அந்த மலர்கள்?

ஹோவென எழுந்து
புழுதியால் அறைகிறது காற்று
நேரம் காலம் அறியாது
இதோவென வருகிறது அமர்கிறது
ஒரு குறுநடைச் சிசு, மடி மீது

குழந்தைகள் ஏறி அமரும் சிம்மாசனம்
பறவைகளின் சிறகு வருடும் ஆகாசம்
ஏரிகளில் முகம் பார்க்கும் கார்மேகம்
ஈர மலைமுலைகள் வழங்கும் பாலாறு
எந்தப் புழுதியாலும் மாசுபடாத வெட்டவெளி

மரங்களின் பச்சை உச்சிகளின் மேலே...
நெஞ்சைக் கவ்வும் ஒரு துயர்

Read more...

Monday, January 21, 2013

புல்லாங்குழல்

அபூர்வமாய்த் திறந்திருந்த தோட்டம்
துள்ளி ஓடிய ஒற்றையடிப் பாதையின்
ஓரத்துப் புல்தரையில் ஒரு புல்லாங்குழல்
ஏகாந்த மவுனத்தின் காலடியில் அனாதையாய்

தாவரங்களின் மெல்லிய அசைவில்
இருத்தல் பற்றிய விவாதம்.
பறவைகளின் குரல்கள் அதற்குத் தூபம்போட
தாமரைக் குளத்தில் தவளை விழும்
தாளம் அதற்கு முத்தாய்ப்பிட
அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தது புல்லாங்குழல்

யாரோ ஒரு வித்வான் தவறவிட்டிருந்தான் அதனை அங்கே
(அங்கே வருவோர்க்கெல்லாம் அநேகமாய் அது ஒரு வழக்கம்)
அவன் மாற்றுப் புல்லாங்குழலோடு
பாட்டிசைத்துக் கொண்டிருப்பான்
ஊருக்குள்ளே இந்நேரம்

தோட்டத்துப் பணியாள் ஒருத்தியின் குழந்தை
அப்புல்லாங்குழலைக் கையிலெடுத்து
புபு என்று ஊதி ஊதிப் பார்த்து ஓய்ந்தது
அவளும் தனக்குப் பயன்படாதது கருதி
விட்டுவிட்டாள் சருகுகளோடு சருகாய்
விம்மியது புல்லாங்குழல்

சிதறிக்கிடந்த பருக்கைகளைக் கொறிக்கவந்த அணில்கள்
அப்புல்லாங்குழலைத் தீண்டிவிட்டு விலகிக்கொண்டன
கிளையிலிருந்து குதித்த குரங்கு ஒன்று
கைதேர்ந்த வித்துவான்போல் கையிலெடுத்து சோதித்துவிட்டு
சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என
விட்டெறிந்தது தூரே
மூங்கிற் புதர் மடியில் போய்
வீழ்ந்தது புல்லாங்குழல்
அதுவரை திகைத்து நின்றிருந்த அவன்
லேசான மனத்துடன் நடக்க ஆரம்பித்தான்.
தோட்டத்தைவிட்டு வெளியே வந்தபோது
நகரத்தின் இரைச்சலுக்கு மத்தியிலிருந்து
ஒரு புல்லாங்குழலிசை கேட்டது

புல்லாங்குழல் ஒன்றை
வாசித்துக்கொண்டிருக்கும் இதழ்போல்
நெடிதுயர்ந்த மரங்களுக்கிடையே சூர்யன் தகித்தது

Read more...

துளசிப் புதர் நடுவே

அனைத்து இயல்களும் கூடிய ஒரு கணிதச் செயல்பாடோ
ஏதோ ஓர் உக்கிரம் கண்விழித்து
சகலத்தையும் உலுக்கி வேறோர் ஒழுங்கில் அடுக்கிவிட்டு
மீண்டும் விழிமூடிக் கொண்ட சாகசமோ

துளசிப் புதர் நடுவே வெகுகாலம் தேம்பியபடி
சிக்கிக் கிடந்த ஒரு தென்னோலைக் கீற்று
எதிர்பாரா வேளை ஒன்றில் பாம்பாய் நெளிந்து
மீண்டும் ஓலையானது?

உண்மைதான். நேற்றிருந்த தோட்டமல்ல
இன்று காணும் இத்தோட்டம்

Read more...

Sunday, January 20, 2013

அக்காக் குருவி பாடுகிறது

”காரணமற்றதோர் காரியமாம்
பாடல் என்பது”
”உன் பாடலில் ஏன் இத்தனை
துயர் கசிகிறது?”
”எதற்கெடுத்தாலும் காரணம் தேடும்
இதயத்தின் துயர் அது”

Read more...

இனியதொரு விழாவொன்றின்போது

அறிமுகம் செய்துவைத்தேன் இருவரையும்
உருண்டு விழுந்த பாறைக்குள்ளே
அகப்பட்டதோர் மலைஎலி போல
நெளிந்தது அங்கே ஒரு சங்கடம்

Read more...

அறைக்குள் நுழைகையில்

அறைக்குள் நுழைகையில்
’அது’ அங்கே அமர்ந்திருந்ததைப் பார்த்துவிட்டேன்,
எந்தவித அலங்காரமுமில்லாமல்
மனம் கொள்ளாஅழகுடன்
மணமகனை எதிர்நோக்கி இருக்கும்
முதலிரவுப் பெண்போல
என் ஆர்வத்தைத் தூண்டியபடி

’அதன்’ கைமட்டும் நீண்டுவந்து கதவைத் தாழிட்டது.
யாருக்கும் கேட்காத ஓர் ஒலியுடன்
’அது’ ஏதும் பேசவில்லை.
சொல்லொணா இரகசியத்தைச் சொல்லும் மவுனம்.
’அதன்’ விழிகளும் அறை நிறைந்த ’அதன்’ ஆகிருதியும்தான்
பேசின பேசின பேசின முடிவற்று
நான் களைத்துப் போகும்வரை; பிறகு தூக்கம்

விடிகாலையில் ’அதனை’க் காணோம்.
மற்றுமொரு மாயாஜாலமாயிருந்தது
வெளியிலிருந்து ’அது’ கைவளைகள் குலுங்கக்
கதவைத் தட்டியது

Read more...

Saturday, January 19, 2013

அறியாததல்ல

நெருக்கடி வேளை வாகன விரைவில்
நேரமில்லாது போயிருக்கலா மெனினும்
நான் அந்த இடம் நிற்பேன் என்பது
நீ அறியாததாய் இருக்காது

திடீர்தூறல் விழத் தொடங்க
காயும் களநெல் பரபரப்பில்
நீ என்னை ஏறிட்டுப் பார்க்கா திருந்தாலும்
நான் அங்கேதான் நிற்பேன் என்பது
நீ அறியாததாய் இருக்காது

நெடுங்காலப் பிரிவின் பின்னும்
நம் சந்திப்பு நிகழவே யில்லை எனினும்
நான் அங்கேதான் நிற்பேன் என்பது
நீ அறியாததாய் இருக்காது

கண் மங்கிக் கால் தளர்ந்து
அலைக்கழியும் மனம் ஒழித்து நீ அமர்ந்திருக்கையிலும்
நான் அங்கேதான் நிற்பேன் என்பது
நீ அறியாத்தாய் இருக்காது

எவ்வேளையானாலும் எந்த இடமானாலும்
உன் பார்வைக்காய்த் தகித்தபடி
நான் அங்கேதான் நிற்பேன் என்பது
நீ அறியாததாய் இருக்காது

எவ்வேளையானாலும் எந்த இடமானாலும்
உன் பார்வைக்காய்த் தகித்தபடி
நான் அங்கேதான் நிற்பேன் என்பது
நீ அறியாததாய் இருக்காது

Read more...

குழந்தைகள் விளையாடுகின்றன

பள்ளிக்கூடங்களுக்கும் தொழிற்கூடங்களுக்கும்
இடையேயுள்ள நிலங்களில்
குழந்தைகள் விளையாடுகின்றன

மேதாவித்தனம்
என்னைக் கைவிட்டிருக்கும் வேளையில்
எல்லாத் தொழிற்கூடங்களும் ஒரு கணம்
இயங்காமல் நின்ற வேளையில்
குழந்தைகள் விளையாடுகின்றன

கரைமணல்கள் சிலிர்க்கக்
கடலலைகள் குதித்தெழும்பி ஆனந்திக்கக்
காற்று சிறகடிக்கக்
காண்பொருள்கள் யாவும் உடல் சிலிர்க்க
நீச்சல் நீந்த சிறகுகளையெல்லாம்
அந்தரீஷம் தாங்கி நிற்க
உலகமெங்கும் குழந்தைகள் விளையாடுகின்றன

குழந்தைகளின் சந்திப்பு நிகழ்கிறது
அவர்களையும் சேர்த்தே
எவர்களும் அறியாததோர் பிரதேசத்தில்

தன்னேரிலாததோர் மாநாடு அது
அங்கே பிரதிநிதிகள் அல்ல,
முழு உலகத்தின் மொத்தக் குழந்தைகளும் சந்திக்கின்றன.
விவாதங்கள் இல்லை
மவுனமே மொழிகிறது.
தீர்மானங்கள் இல்லை
நிறைவேற்றமே நிகழ்கிறது.
விளைவாக இங்கே
உலகமெங்கும் குழந்தைகள் விளையாடுகின்றன

Read more...

Friday, January 18, 2013

மதில்சுவர் அப்புறம்

பள்ளித் தோழர்களான இரு குழந்தைகள்
விருந்தாளிகளாய்க் கூடினர் ஒரு வீட்டில்.
வீதியில் அதனைக் கொண்டாடும் விதமாய்ப்
பந்தையும் மட்டையையும் எடுத்து ஆடினர்
சந்தித்ததிலிருந்து அந்திவரை.
இல்லை; அந்தி வரவில்லை இன்னும்
ஆட்டம் முடிக்கும் அந்த நேரம் வரவில்லை

அந்த நேரம் வரக்கூடாது வரக்கூடாது
அந்த நேரம் வரக்கூடாது.
வராது வராது வரவே வராது
ஆனால் அந்தோ – விழுந்தது பந்து,
ஒரு பெரிய சாக்கடைத் தொட்டியில்!
நொடிந்தவராய் இருவரும் தந்தையிடம் ஓடினர்!

கருணையுள் நீந்தும் கண்மணிதானோ
சாக்கடைக் கருமையில் பந்தின் மிதப்பு?

மீணடது களிப்பு மீண்டது சொர்க்கம்
மீண்டது ஆட்டம்
ஆட்டம் ஆட்டம் ஆட்டம் –
பொங்கிய வேகத்தின் பந்து இப்போது
மதிற்சுவர் தாண்டி விழுந்தது அப்புறம்

இரும்புக் கேட்டின் இடுக்குவழியே – அமைதியாக –
இருந்தது இருந்தது – ஆனால் –
எடுத்துத் தரவேண்டியவர் வந்தார்,
இல்லை என்றார்.
அப்பந்தும் அவ்விடம் இல்லாமல் மறைந்தது

’பிதாவே இவர்களை மன்னியும்...’ என்று
இயேசு இறைஞ்சினார் அச்சிறார்களிடத்து

Read more...

அவனைப் பற்றி

அவன் தலையில் மணிமுடியாகியிருந்தது
வேதனையின் பார்வை.
கால்களில் சிறு அணியாகியிருந்தது
காலத்தின் ஒரு துண்டு.
உடலுக்கு ஆடையாகியிருந்தது
இரு துருவங்களாலும் நெய்யப்பட்ட காலம்.
அவன் தாகத்திற்கு நீராகியிருந்தனர்
தவிப்பின் மனிதர்கள்.
தலைசாய்க்கக் கட்டிலாகியிருந்தது
முட்கள் தகிக்குமொரு பாறை.
நடப்பதற்குப் பாதையாயிருந்தது
மனித மனங்களின் நெகிழ்ச்சி.

Read more...

Thursday, January 17, 2013

இருளோடு

...நாம் செய்துகொண்ட சமரசம் சரிதானா?
கூடுதல் பகல் வேண்டி
பரிதியைப் பிரதிபலிக்கும் இந்த நிலவோடும்
மின்விளக்குகளோடும்
முயற்சிகள்தாம் எவ்வளவு?
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
வீழ்த்தத் தவறுவதில்லை இரவு
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளும் என்று
நாளின் பகுதியாகவே ஆகிவிட்டது இரவு

கூட்டுக்குள்ளிருக்கையில் இந்த இரவு
சீக்கிரமே வந்துவிடுகிறது
கூட்டின்மேல் வந்திருக்கையில்
கூடுதல் பொழுது கிடைக்கிறது

ஓய்ந்து அமர்ந்திருக்கிறது இதோ
வானத்தைச் சிறகால் அளக்க முயன்ற என் பறவை
அதற்குத் தெரிகிறது
”அங்கே போய்விட்டால்
இரவென்பதே இருப்பதில்லை”

Read more...

கருணை கொண்டு

...நான் வழங்குவதாக எண்ணிக்கொண்டிருந்தேன்.
அதைத் தேடி
என் கதவை உலுக்கும் சிறார்களாய்
நீ வந்துகொண்டிருந்திருக்கிறாய்.
அன்று எப்படி நான் உடைந்துபோனேன்!
என் ஓய்வுக்கு இடைஞ்சல் பண்ணுவதாக வெடித்து
உன் கல்லெறிக்குக் கோபித்து
ஒரேயடியாய் உன்னை விரட்டிவிட்டேன்
உன் ஏமாற்ற முகம் மட்டும் விலகாமல் தகிக்கிறது
உன் வரவின் இரசியத்தை அறிந்து என் மனம் துடிக்கிறது
என் துடிப்பை அறிந்து
திரும்பவும் திரும்பவும் நீ வருவாய் என
உன் தனிப் பெருங்கருணையை எதிர்பார்த்து எதிர்பார்த்து
வளர்ந்த வேதனையே நானாகி நிற்கிறேன்
மாலையில் தொழிற்சாலைகளிலிருந்து
வீடு செல்லும் தொழிலாளிப் பெண்களும்
குழந்தைகளும் வழிப்போக்கர்களும் வருகிறார்கள்
உன்னை எதிர்நோக்கியபடியே அவர்களுக்கும் வழங்கிக்
கொண்டிருந்தேன்.
நீ வந்தாயோ நான் இல்லாதபோது?
மத்யான ஓய்வின் தொந்தரவு பொறுக்காத என் மனைவி
உன்னை விரட்டியதில் கோபங் கொண்டு
என் மதிற்சுவர் ஒட்டி வளரும்
அலங்காரச் செடிகளையெல்லாம் பிடுங்கித்
தூர எறிந்து
சென்றிருக்கிறாய்

Read more...

Wednesday, January 16, 2013

அது ஒரு மாயம்தான்

அது ஒரு மாயம்தான்
ஒரே சமயத்தில்
வலிமைக்கே இலக்கணமாயும்
வலிமையே அற்றவனாயும்
அவன் காட்சி தருவது.
வலு மிக்கோர்க்கு அவன் வலு தெரியும்.
வலு மிக்கோர்க்கு அவன் வலு எதற்கு?
வலுவிலார் அவன் வலுவின்மையையே காண்பார்.
வலுவிலார் வலுவில்லாரை நெருங்கார்.
அவன் தனிமையின் இக்கதையில் மாயமில்லை.
தனிமைதான் ஒரு பெரும் மாயம்

Read more...

இருள் பிரியாத

...இக்காலைப் போதில் நம் பிரார்த்தனைகள்
அடிபம்பின் ஒலிகளாய்
வறண்ட நெஞ்சொன்றை இடிக்கின்றன
ஒளி வரட்டும்
வறண்ட இந்நெஞ்சிற் புகுந்து
அது நீராய் நிரம்பட்டும்
நிரம்பி வழிந்து பெருகும்
அந்த வெள்ளத்தில்
உயிர்கள் மிதக்கட்டும்
நெஞ்சை இடிக்கும் பிரார்த்தனை ஒலிகள் மடியட்டும்
வெள்ளத்தின்மேல் சிறகடிக்கும்
பறவைகளின் ஒலிமட்டும் கேட்கட்டும்

Read more...

கைதியை

...இரகசியமாய்த் தப்பிக்க வைக்கிறது
சிறை ஜன்னல் வெளியே நிற்கும் ஒரு மரம்
ஒரு பாதம் பதித்து ஒரு பாதம் தூக்கி
அது நடனமிடுகிறது கைது செய்யப்பட முடியாத
அதன் ரசிகர்கள் முன்னால்

”உன் நடனத்தைப் பார்க்க என
உன்முன் அமர்த்தப்பட்டிருக்கும் நாற்காலிகள் ஆயிரம்.
இறுதிப் பகுதி இருக்கைகள் ஒன்றில்தான்
என் தகுதியிடம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது
ஆர்வமிகுதியால்
முன்னே காலி விழும் இருக்கைகளைப்
பின்தொடர்ந்து பின்தொடர்ந்து
இன்று உன் முகத்தோடு முகம் பார்க்கும்
அண்மையை எட்டிவிட்டேன்.
நீ என்மீது கொண்ட பார்வை –
அதை எப்படிச் சொல்வேன்!
நீ என்மீது வீசிய அழைப்பே
என்னை உந்திக்கொண்டிருந்த
’ஆர்வமிகுதி’ என்பதையறிந்தேன்”

Read more...

Tuesday, January 15, 2013

வெற்றுக் குடத்தைத் துலக்குகிறாய்

வெற்றுக் குடத்தைத் துலக்குகிறாய்
எத்தனை கரிசனம் உன்முகத்தில்!
சூர்யக் கதிர்பட்டு ஜொலிக்கிறது அது,
அனைத்தினும் முக்யவஸ்து தான்தான் என்பதுபோல்

உன் இடையை அதற்காகவோ செதுக்கினான்?
மார்புகளைத் தாங்க வேண்டாமோ அது?
உன் கைகள் அதன் தோளிலே –
ரொம்பப் பிரியமோ அதனிடம்!

நீங்கள் அள்ளிவரும் நீருக்குத்தான்
காத்திருக்கிறதோ இந்த அகிலம்?
மனிதனின் பிணியையும் மருந்தையும் நீர் அறிவீரோ?
மனிதத் திலகங்களின் தாகத்தை நீர் அறிவீரோ?

வெற்றுக் குடங்கள் செய்வதையே முடிவான
வினையாக நான் இன்று தேர்ந்தெடுத்தேன்
வெற்குக் குடங்களே பெருஅலறல் செய்கின்றன,
உன் கைபட்டுப் பாடுகின்றன

Read more...

அய்யோ பாவம்!

அவனைத் தொட்டு எழுப்பிவிட்டு
தன் சமிக்ஞையைப் புரிந்துகொண்டு
பின்தொடர்வான் என்ற முழு நம்பிக்கையில்
திரும்பிப் பாராமல் செல்லும் சூரியனை
அய்யோ பாவம், அவன் அறியவில்லை

இருள் சூழ்ந்ததும் ஏற்றிய அறை விளக்கொளி
வீதியில் விழுந்ததையும்
விளக்கணைத்துப் படுத்துக்கொண்டதும்
வீதி விளக்கொளி அறைக்குள் விழுந்ததையும்
அய்யோ பாவம், அவன் அறியவில்லை

Read more...

அவரை நான் பார்த்ததில்லை

”அவரை நான் பார்த்ததில்லை
நிழற்படத்தில்தான்
அவரைப் பார்த்திருக்கிறேன்”
என்றார் அவர்

பெரும்பான்மை மனிதர்களின்
அவலமே அதுதான்

Read more...

Monday, January 14, 2013

தோசை சுடுதல்

எத்தனை துக்கம்.
உன்னைச் சுற்றிக் குறுகிய அறை.
நலங்கெடுக்கும் வெப்பம்.
வெளியிலிருந்து வரும் காற்றால்
ஒருநாளும் அதைக் குறைக்க முடிந்ததில்லை

இரும்புக் கல்லின்கீழ் எரிகிறது இதயம்.
இரும்புக் கல்லின்மேல் அந்த இதயமே
வேகும் தோசையும்.
அறை வெப்பத்தால் அதிகரிக்கிறது
அதிகரிக்கிறது உன் துயர்

இத்தனைத் துயர் தாங்கியபடி
எவ்வளவு காலமாய் நீ
யாராலும் கவனிக்கப்படாமல் நிற்கிறாய்?
இன்னும் நீ எதிர்பார்க்கும் பொருள்
உன்னைத் தீண்டவில்லையா?
இன்னும் உன் நெஞ்சை வெடித்துவிடாதபடி
காத்துக் கொண்டிருப்பது எது?

சரியான நேரத்தில் உன்னைத் தட்டித்
தோசையைத் திருப்பிப் போடச் செய்தது எது?
அந்தக் கணம் முதல்
இனியதோர் ராக ஸ்வரமாய்
உன்னுள் பாடத் தொடங்கியது எது?

கொடுக்கமட்டுமே அறிந்ததாய்
உன் இதயம் மாறிவிட்டதெப்போது?

Read more...

குட்டிச் சூர்ய அருவி

அந்தப் பிரதேசத்தில்
அது கோடை காலமானாலும்
அதிகாலையானதால்
இயற்கை நீண்ட புல்வெளியாய் இருந்ததாலும்
குளிர்ச்சியாக இருந்தது

அடிவானத்தில் வழிந்துகொண்டிருந்தது
ஒரு குட்டிச் சூர்ய அருவி
தானாய் உருவான ஒரு பாதையில்
சக்கர நாற்காலி உருண்டு கிடந்தது
தளர்நடைக் குழந்தையையும் தாயையும் பார்த்து
ஒரு சிறு காட்டுப்புல்பூ அசைந்துகொண்டிருந்தது
நீண்ட மவுனம் போன்ற தூரத்தில்
அதே மாதிரி ஒரு குழந்தையும் தாயும்
புல்வெளியிட்ட முள்வேலிக்குள்
இரண்டு பேருக்குமிடையே உரையாடலற்ற
மவுனத்தின் விரிப்பு

உரையாடலற்ற மவுனம்
குழந்தைகளின் தசை துடிக்கும் உடலசைவுகளாலும்
வாய் கிளப்பும் கூச்சல்களாலும்
தாய்மார்களின் பரஸ்பர புன்னகைகளாலும்
விரிய விரும்பியது.
அது கடுங்கோடை காலமானாலும்
காலத்தை வென்று நின்றிருந்தது அந்தப் பொழுது.
தொடுவானத்தில் வழிந்துகொண்டிருந்த
குட்டிச் சூர்ய அருவி
சற்றே வளர்ந்தது
அத்துடன் வேலிமுட்களின் கூர்மையும்

முள்வேலிக்குள்
முழுவளர்ச்சியடைந்த ரோஜா ஒன்று
தன்னை ஒட்டிவளர்ந்திருந்த மொட்டின் மீது

தலைசாய்த்து
வீணாய் மலர்தலைப் போதித்துக்கொண்டிருந்தது
ஆனாலும் அவசியமாயிருந்தது அதன்
வளர்ச்சிக்குப் பின்னும் நுனி வாடிக் கருகி நிற்கும்
அருகாமைச் சோகம்

அன்பை ஒருகை மறுகைக்குப் பரிமாறிக்

கொண்டிருக்கையில்
அந்த ரோஜா இதழ்களில் ஏற்படும் அசைவு
முற்றிலும் புரிந்துகொள்ளப்படாத சோகத்தால்
அந்தப் பிரதேசமெங்கும் துடிக்கிறது

கடுங்கோடை ஆரம்பமாகிறது

Read more...

Sunday, January 13, 2013

நாற்காலியும் நட்சத்திர மண்டலமும்

மனதைப் பறி கொடுத்தல்லவோ
(உட்கார்ந்தபடியே எழுதவும் சாப்பிடவும் தோதான)
இந்த அழகிய நாற்காலியை வாங்கினேன்
(சட்டென்று எழுந்து வெளியேற முடியாதபடி
மேஜைபோல் ஓர் பலகைத் தடுப்பு உண்டு அதற்கு)

நான் சற்று எழுந்து நகர்ந்தாலும் போதும்
என் குடும்பம் பதறுகிறது

அறைக்குள்ளே எழுந்து நடந்தால்
அமைதியிழந்தேனோ என எண்ணி
என்ன என்ன என்று ஆளாளுக்குக் கேட்கிறார்கள்

அறையைவிட்டு நான் வெளியே கிளம்பினால்
வேறுவேறு தட்பவெப்பம் மற்றும் பண்பாட்டுக்
கவனம் குறித்து அவர்கள் படும் கவலைகள்
சொல்லி முடியாது

என் நாற்காலியில் அமர்ந்தபடி
நட்சத்ர மண்டலங்களைப் பார்த்தபடி இருக்கிறேன்
அப்போதும் அவர்கள் அஞ்சுவது தெரிகிறது

நான் இந்த நாற்காலியில்
எப்படி அமர்ந்திருக்க விரும்புகிறார்கள் அவர்கள்?
மனதைப் பறிகொடுத்தல்லவோ
நான் இந்த நாற்காலியை வாங்கினேன்

Read more...

தவளைகள்

குதித்துக் குதித்துக் குதித்தே
நிதம் சாகின்றன
தூரம் வந்துவிட்ட தவளைகள்

Read more...

Saturday, January 12, 2013

காணிநிலம் கேட்டேன்

காணிநிலம் கேட்டேன்
ககனம் முழுதும் தந்தாய்!
உன்னைப்போல் இன்னொருவன் கேட்டதற்கு
ஒரு கோடி வித்துக்கள் பொழிந்தாய்!
காதல் மிகக்கொண்டு
என் அருகிலேயே இரு என்றேன்
எங்கும் நீ நிறைந்தாய்!
இன்பத்தால் என் நெஞ்சம் வெடித்துவிடாதபடி
அவ்வப்போது சிறு சிறு இடர்களையும் கொடுத்தாய்
என்னைப் புதிய உயிராக்க
என்னுள்ளே இருந்து கொண்டு
என்னென்ன வினைகளினைச் செய்துவந்திருக்கிறாய்!

என் காயங்களை நீ குணமாக்கப் படுக்கவைத்தால்
நோய் என்று அதனை நான் இகழ மாட்டேன்
என்னை நீ தூங்க வைத்தால்
இனி மரணம் என அதை நான் சொல்ல மாட்டேன்
கரும்பலகையில் நீ அழித்தழித்து எழுதும் எழுத்துக்களுக்காய்
இனி ஒருக்காலும் பதறமாட்டேன்

உன் கழுத்தைக் கட்டிக்கொண்டு
உன்னிடம் தொங்குவேன் நான் பெரிய தொந்தரவாக.
சொல், என்னைவிட மதிப்புமிக்க ஆபரணம்
வேறு உண்டோ உனக்கு?
சொல், சொல்லும்வரை விடமாட்டேன் நான்

Read more...

அவன் வீடு

கற்பாறைகளின்மேல் கட்டிய புத்திசாலியல்ல அவன்
எல்லாத் திசைகளும் சந்திக்கும் ஒரு நாற்சந்தியின்
பள்ளத்து மூலையில் உள்ளது அவன் வீடு
மழை பெய்தால் கடல் சூழும் தீவு அது
ஒவ்வொரு மனைமீதும் பொழிந்து கழுவி
ஓடிவரும் வெள்ளம் அதைச் சூழும்
ஒரு மடையனைப் பார்ப்பதுபோல்
அவனையும் அவ்வீட்டையும் பார்த்துப் போவர்
தவறிப்போய் அவ்வழி வந்தவர்கள்.
வெள்ளம் புகுந்த வீட்டின் மொட்டைமாடியில் நின்றபடி
அவன் பார்ப்பான் அவர்களை.
அவர்களுக்கு தன் மனையின் ஒரு கதவைத் திறந்து
மறுகதவு வழியாய் அவ்வெள்ளம் கடக்க உதவுவான் அவன்
அப்புறம் அவர்கள் அப்பக்கம் வரமாட்டார்கள்
வரவேண்டி நேர்ந்தாலோ கண்டிப்பாய் அவன் உதவுவான்

அவன் இருப்பான் அசையாமல்
கடல் சூழ்ந்த தீவில்
அவர்களைச் சிந்தித்தபடி

அவ்வெள்ளம் சற்று வற்றும்
அப்புறம் வீட்டைச் சுற்றித் தேங்கியிருக்கும் நீர்
சாக்கடையாகியிருக்கும்
அவன் மட்டுமே அதை
அகற்றுவதற்கு நேர்ந்தவனாய்த் துடிதுடிப்பான்
அத்துடிப்பில் மகிழ்கிறானோ இரகசியமாய்?
ஒரு மடையனாய்
பள்ளத்தில் வீடுகட்டிப்
படாத பாடுபட்டும் உள்ளுக்குள் மகிழும் பைத்தியமோ அவன்?

Read more...

Friday, January 11, 2013

லேடீஸ் அன்ட் ஜென்டில்மென்

இதோ உங்கள் கனவு நனவாகிறது
உங்கள் அடிமனத்தின் ஆவலை நிறைவேற்றும்
அந்தப் பிரதேசம் உருவாகிவிட்டது ஓடோடி வந்து நீங்கள்
பிரஜையாகிக் கொள்ளவேண்டியதுதான் பாக்கி
(எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளதால்
உங்கள் இடத்திற்கு இப்போதே முந்திக் கொள்ளுங்கள்)
சுற்றி ஐம்பது கிலோமீட்டர் தொலைவிற்கு
மாசு உண்டாக்கும் எவ்வித ஆலைகளும்
எக்காலத்திற்கும்
உருவாகாதபடித் திட்டமிடப்பட்டுள்ளது
(எங்கள் தொலைநோக்குப் பார்வைக்கு
மிகப் பெரிய சாட்சியம் இது)

பிரதேசத்தின் ஒவ்வொரு இடுக்கின் தூய்மையும் அழகும்
நல விஞ்ஞானிகள் மற்றும் கட்டடக் கலை வல்லுநர்களால்
ஒவ்வொரு கணமும் கண்காணிக்கப்படுகின்றன.
மீத்தேனை வெளியேற்றாத புதுவகைச் சாதனங்களால்
எல்லா இல்லங்களும் ஏ சி செய்யப்பட்டுள்ளன.
பிரஜைகள் பேட்டரியால் இயங்கும் கார் மட்டுமே
வைத்திருக்க அனுமதியுண்டு.
உங்கள் பொன்னுடலுக்கேற்ற தட்பவெப்பநிலையை
கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் வான்மிதவைக் கலங்கள்
(உலகிலேயே முதன்முதலாய் அறிமுகப்படுத்தப்படுகிறது இங்கேதான்)
உங்கள் மனதைத் தொல்லைப்படுத்தும்
ஏழை எளியவர் எவருமே கிடையாது
எல்லாப் பணிகளுமே கணினிப்படுத்தப்பட்ட
கருவிகள் மூலமே செய்யப்படுகின்றன
நல்லூதியம் பெறும் விஞ்ஞானிகள் மற்றும் இன்ஜினீயர்கள்
இலவச சேவைக்காய் எப்போதும் தயார்நிலையில்.
உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான பூங்காக்கள்.
ஆனால் அங்கே
நறுமணமூட்டப்பெற்ற தென்றல் காற்று எமது புதுமைப் படைப்பு
(ஒவ்வாமைக் கவனத்துடன் வடிவமைக்கப்பட்டது)
மற்றும் மினரல் வாட்டர் டேங்க்.
பிரதேசத்தைச் சுற்றி வானுயர்ந்த சுற்றுமதில்போல்
பிரதேசத்திற்குள் நுழையும் காற்றை வடிகட்டித்
தூய்மைப்படுத்தும் மாபெரும்
’மேக்யரோபியூர்’ சல்லடை இயந்திரம்.
(நமது பிரதேசத்தில்தான் முதன்முதலாய் அமலுக்கு வந்திருக்கும்
விஞ்ஞானச் சாதனை எண் – 2)

அதிநவீன மனிதர்களான உங்களுக்காக உருவாக்கப்ட்ட
இந்த அதிநவீனப் பிரதேசத்தின்
அதிநவீனப் பாதுகாப்புப்படை
எங்களது சிகரப் படைப்பாகும்

மேலும் எமது சகோதர நிறுவனத்தின்
’காண்டவ வனத்’திற்கு
(எல்லாவித வேடிக்கை விநோத கேளிக்கைகளும்
உங்களுக்காகவே ஒருங்கமைக்கப்பட்ட
விடுமுறை நாள் சொர்க்கம். ஆசியாவின்
நம்பர் ஒன் வாட்டர் தீம் பார்க்)
இங்கிருந்தே செல்ல சுரங்கப் பாதையுண்டு
(பிரதேசவாசிகளுக்கு மட்டும் இலவச அனுமதி)

காண்டவ வனத்தின், விரைவில் துவங்க இருக்கும்
விரிவாக்கத் திட்டத்தின்கீழ்
நீங்கள் கனவுகூடக் கண்டிராத வியத்தகு
கலை இலக்கிய நுகர்வுக் களஞ்சியங்கள்:
மயிலாப்பூர் வனத்தில் திருவள்ளுவர் உலவுவார்.
ஒரு பொத்தானைத் தட்டிக்கேட்டால்
1330 குறளையும் அப்படியே ஒப்பிப்பார்.
கம்பனையும், ஷேக்ஸ்பியரையும், தாந்தேயையும்
அப்படியே உலவவிட்டுள்ளோம்.
இன்னும் மகா காவியங்களின் மகத்தான
கதாபாத்திரங்களுடன் (ஸ்ரீராமன் முதல் அன்னா வரை)
நீங்கள் இஷ்டப்பட்டவர்களுடன் இஷ்டப்பட்ட நேரத்தில்
உரையாடி மகிழலாம்.
ஒரு பொத்தான் உதவியுடன்
ஊர்வசியும் ரம்பையும் உங்கள் மடியில் விழ
நீங்கள் கொஞ்சலாம்.
சில இடங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியது
சில இடங்கள் பெண்களுக்கு
சில இடங்கள் குழந்தைகளுக்கு
குழந்தைகள் இலக்கியத்தின் முக்கிய பாத்திரங்கள் எல்லோருடனும்
இனி குழந்தைகள் நேரிலேயே பழகலாம்
இனி கலைஞர்களே தேவையில்லை
கலையை நுகர்பவர்களே தேவை

இன்னும்
எல்லாவற்றையும் அறிய ஆள அனுபவிக்க
உங்கள் கனவுலகின் நனவுலகப் பிரஜையாக
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம்
கீழ்க்கண்ட பாரத்தைப் பூர்த்தி செய்து
உடனே நீங்கள் எங்களைத் தொடர்புகொள்ள
வேண்டிய முகவரி...
இன்டர்நெட்டிலும் எங்களை நீங்கள் அடையலாம்
எங்கள் இ மெயில் விலாசம்...

Read more...

அவர்கள் கதை

அந்தஸ்து காட்டும்
அவன் மினிவேனை நிறுத்தி
ஏறிக் கொள்ளலாமா எனக் கேட்டதற்கு
இடமில்லை எனப் பகர்ந்தான்.
எவரும் வருத்தப்படுவதற்கில்லாத
யதார்த்தமான நிகழ்ச்சிதான். ஆனால்
அவர்கள் கதை அறிந்தவர்க்கோ
அது ஆழமான யதார்த்தம்

Read more...

Thursday, January 10, 2013

தொலைத் தொடர்புக் கருவி

கண்ணெதிரே மவுனமாய் இருந்தது அது
நான் தேடியது அது இல்லை எனினும்
நான் தேடியிருக்க வேண்டிய பொருள்
அதுதான் என்பதுபோல்
என் இருப்பை அதிரவைத்தது அது

ஆயிரக்கணக்கான மனிதர்களை
ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டிய
பேர்புகழ் மேடை முழுங்கிகளெல்லாம் சாதித்தது என்ன?

யுஎன்ஏயை விடவா
பெருந்திட்டம் உன்னிடமுள்ளது?

சேவா நிறுவனங்கள் ஆயிரம் வந்த பின்னும்
காணவில்லையே வீதியில் அந்தப் பாடலை

சொற்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்காத
எந்தப் பேருண்மையை நீ
வெளியிட்டுவிடப் போகிறாய்?

இருக்கும் இயற்கையை விடவா
அழகு உன் படைப்பு?

மவுனமாய் இருந்தது அது
ஒரு நாளும் பழசாகிவிட முடியாப் புதுமையுடன்
எதனாலும் சிதைக்க முடியாவலிமையுடன்
தன் இருப்பு ஒன்றே இருப்பு எனும் இருப்புடன்
அனைத்தையும் ஒதுக்கியும் விலக்கியும்
உட்கொண்டிருக்கும் வலிமையாக
எந்த முரணும் முயற்சியுமில்லா ஆற்றலாக
ஒப்பில்லா அழகுடன் ஒப்பிலாக் கருணையுடன்
எவராலும் தொடமுடியாத் தூய்மையுடன்
சமரசமற்றதும் இரக்கமற்றதுமான குரூரத்துடன்
அறியப்பட முடியாத அறிவுடன் ஆழத்துடன்
அது இருந்தது இடையறாத தன் வினையாற்றலுடன்
அது இருந்தது அறியப்பட்டிருக்காத உலகத்தின்
அறியப்பட்டிருக்காத ஒரு பொருள்போல்

Read more...

கல்லும் கடவுளும்

எனக்குள்ளே என்ன பெருமுயற்சி முரண்டிக்கொண்டிருக்கிறது
இனம்புரியாத இந்தத் துக்கத்திற்கும் வாதனைக்கும் காரணமாய்?
அதைக் காணத்தான் என்பதுபோல் எழுந்து
நடந்துகொண்டிருந்தேன்
எனக்குள்ளே நான் நடப்பதுபோல் அந்த வீதியில்.
என் கால்கள் நின்றன அந்த இடத்தில்.
அந்த இடத்தைப் பண்படுத்தி
ஒரு கல்லைக் குளிப்பாட்டி ஆடை கட்டி
அங்கே நட்டிக் கொண்டிருந்தான் ஒருவன்
அந்தக் கல்லைக் கெஞ்சியும் கொஞ்சியும் மன்றாடுவதுபோல்
இயங்கிக் கொண்டிருந்தன அவன் விரல்கள்

Read more...

Wednesday, January 9, 2013

உயரம் ஏறுபவன்

உயரம் ஏறி ஏறிச்
சிறுத்தையான உடலுரம்
மனித குணங்களிலே மேலான
அடக்கப் பண்புக்கு அவனே உதாரணம்
தொழிலிலோ நிபுணன்
நியாயமான கூலியையே பேசினான்
ஏதோ ஒன்றுக்குக் கட்டுப்பட்டவன்போல்
கயிற்று வளைக்குள்
கால்களை இட்டுச்
சர சரவென்று ஏறினான் உயரம்
சரக் சரக் கென்று நாலே வீச்சில்
தள்ளினான் தென்னங் குலைகளை
ஆம் அவன் செயல்திறமே ஒரு தீரம்
அவன் ஒவ்வொரு செயலிலும்
பாளையருவாளின் கூர்மை
கொண்டைக்கு வெயில் பாய்ச்ச
அவன் கழித்துத் தள்ளிய
தென்னோலைகள்
கிரீச்சிட்டு அவன் புகழ் பாடியபடியே
காற்றில் தவழ்ந்து தரையை வணங்கின

தேங்காய்களைத் தொலித்துக்கொண்டே
அவன் சொன்னான் சுற்றுப் புற முகவரிகளை;
அவனை எங்கே எங்கே எனத் தேடும் வாடிக்கையாளர்களை.
ஒரு பொய் இருக்கக் கூடாது
ஒரு களவு இருக்கக் கூடாது என
அந்த இரகசியத்தையும் அவன் வெளிப்படுத்தினான்
அந்தத் தென்னைகளின் நோயினை அறிந்திருந்தான்
மருந்துப் பையையும் எப்போதும் அவன் சுமந்தான்
நோய் தீர்ந்து காய்த்துக் குலுங்கப் போகும்
காட்சியினைச் சித்தரித்தான் கவிஞனைப்போல்

பரம்பரைத் தொழில்காரன்
உயரம் ஏறி இருக்கையில்தான்
பிடி தளர்ந்து
தென்னங் குலைபோல் விழுந்து
மரித்தாராம் அவன் தந்தை

மூன்று தென்னைக்கு மருந்து வைக்க
அறுபது ரூபாய்
இரண்டு தென்னைகளும் ஏறி இறங்க
பதினாலு.
இருந்தது ஐம்பதே ரூபாய்
மாசக் கடைசியானதால் மிச்சக் காசை
நாள மாலையே தருவேன் என்றதற்கு
தாராளமாய் ஒப்புக்கொண்டான்
ஆரஞ்சுப் பழ அளவே தேறிய
இருபத்தைந்து காய்களைத் தொலித்துத் தரக்
காசு வேண்டாமென்றிட்டான் கருணாகரன்
ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன்
மீதி 24 நாளை மாலை என்றேன்
மீண்டும் அதுக்கென்ன சார் என்றான்
என் தயக்கத்தைப் பரிகசிப்பவனாய்

மறுநாள் மாலை வந்தவனிடம் கொடுக்க
நாலு ரூபாய் சில்லறையே இருந்தது
உடைக்க முடியாத இன்னொரு
ஐம்பது ரூபாயை அவனிடம் கொடுத்து
சில்லறைக்கு அனுப்பினேன்

திரும்பிவரவில்லை அவன்

தென்னைகளின் சிரிப்பில் அவன் தெரிந்தான்
திருட்டுப் பூனைகளின் விழிகளில் அவன் தெரிந்தான்

Read more...

Tuesday, January 8, 2013

அந்தப் பறவை

உன்னைத்தானோ நான் தேடிக்கொண்டிருந்தது?
கறுப்புக் கொண்டையாய் ஒரு கிரீடம்
கழுத்தில் சிவப்பு வண்ண ஆரம்.
எதிர்பாராத இன்பச் செய்தியாய்
பசலைக் கொடிப் பந்தலின்கீழ்
திடும்மென்று வந்துதித்து நின்றாய்

என் பொறுமையை நீ அறிவாய்
என் துயரை நீ அறிவாய்
இன்று என் குதூகலத்தையும் நீ அறிவாய்தானே?

வெகு கவனமான பரிசீலனைக்குப் பின்தான்
உன் கூட்டினை என்னிடம் அமைக்க
முடிவு செய்வாயெனத் தெரியுமெனக்கு
அன்று நீ என் எலுமிச்சை மரத்தில் கூடு கட்டியதில்
எத்தனை ஆனந்தம் எனக்கு
எத்தகைய பேற்றை நான் பெற்றேன்.
நீ பிறப்பித்த ஜீவன்களை என் கவனத்தை மீறி
என் அண்டைச் சிறார்கள் சீண்டிவிட்டதால்
விட்டோடி விட்டாய் ஒரே போக்காய்

என் நெடுந்துயரை நீ அறிவாய் – இன்றேல்
மீண்டுமொரு வாய்ப்பளிக்க வந்திருப்பாயா இன்று?
நான் நன்கு அறிவேன் உன் இதயத்தில்
எனக்குள்ள இடத்தைப் பற்றி.
நீ உன் இன்பியிடம் எடுத்துச் சொல்வாய்,
அழைத்துவருவாய் அவளை.
அதே எலுமிச்சை மரம் காத்திருக்கிறது உங்களுக்கு
பப்பாளிக் குலைகளும் ஒவ்வொன்றாய்க்
கனிந்துகொண்டிருக்கின்றன
அண்டைச் சிறுமனிதர்கள்
அவர்கள் காலில் விழுந்து கேட்டுக் கொண்டாவது
கவனித்துக் கொள்கிறேன்
இம்முறை உங்களை இழக்கத் தயாரில்லை நான்.
வாருங்கள் உங்கள் குரல் அமிர்தம்
இந்தத் தோட்டத்தில் சிந்தட்டும்.
பாழ்பட்டுக் கிடக்கும் இந்நிலம்
உய்யட்டும் நும் வரவால்

Read more...

சிற்பி

அவன் அந்தக் கல்லைத் தூக்கிக் கொண்டுவந்து
திம்மென்று தரையில் வைத்தபோது
அந்தக் கல்லுக்கு அது தெரியாது
ஏனென்றால் அது ஒரு கல்

அவன் அதன்மீது உத்தேசித்த ஒரு வடிவத்தைத்
தீட்டியதையும் அது அறியாது
ஏனென்றால் அது ஒரு கல்

அப்புறம் ஒரு பெரிய உளியையும்
சம்மட்டிநிகர் சுத்தியையும் கொண்டு
உத்தேசித்த வடிவம் நீங்கலான பகுதிகளையெல்லாம்
முரட்டுத்தனமாய் மோதிக் கடாசியதையும்
அது அறியாது
ஏனென்றால் அது ஒரு கல்

உத்தேசித்த உருவத்தின் காந்தி
உள்ளே சிலிர்க்கச் சிலிர்க்க
சிற்றுளியும் சுத்தியலும் கொண்டு
செதுக்கிக் கொண்டிருக்கிறான் சிற்பி வெகுநுட்பமாய்

இப்போது அது ஒரு சிலை
கல்லிலிருந்து திமிறித்
தன்னைத் தானே விடுவித்துக் கொண்டிருக்கும் சிலை

இப்போது அது ஒரு சிலை
இறுதி வேலையான கண்திறப்பு ஒன்றுக்குக்
காத்திருக்கும் சிலை

இப்போது சிலைக்குக் கண்திறப்பு நடக்கிறது
கண் திறந்ததும்
சிற்பக் கூடமெங்கும் ஒரு புத்தொளி
அங்கே சிற்பியைக் கண்ட சிலைக்கு
எச்சலனத்தையும் இயற்றவொண்ணாத் திகைப்பு
பார்த்தவிழி பார்த்தபடியே நிற்க
அதனிடம் நிலைகொண்டது
முடிவற்ற தியானம்

Read more...

Monday, January 7, 2013

நம்ம அருணாவைப் பார்த்தீர்களா

நம்ம அருணாவைப் பார்த்தீர்களா
வெகுளி மகிழ்ச்சி கொண்டு
விழிவீசிச் சுட்டினாள் என் மனைவி

பத்தாயிரம் ரூபாய் பட்டுப் புடவையின்மேல்
நாற்பது பவுன் நகை பாரம் கழுத்தை இழுக்க
தூக்கிய தலையோடு
ஒவ்வொரு விழாச் சந்தர்ப்பங்களிலும்
ஒரேமாதிரிதான் காட்சியளிக்கிறாள் அருணா

நர்சரிப் பள்ளி போவதற்குமுன்
அவள் எப்படி இருந்தாள் என்பது
அவளுக்குத் தெரியுமோ தெரியாதோ
படிப்பில்தான் எத்தனை வேகம் காட்டினாள்!
அரசுத் தேர்வுகளிலும் அரசு வேலைத் தேர்வுக்கும்
போட்டி போட்டுப் படித்தாளே அவள்!
வெற்றிவாகை சூடிய கையோடு
மணாளன் ஒருவனையும்
படக்கென்று கைப்பிடித்தாள்

அந்த பத்தாயிரம் ரூபாய் பட்டுப்புடவையின்மேல்
நாற்பது பவுன் நகை பாரம் கழுத்தை இழுக்க
தூக்கிய தலையிலே கூடுதலாய்
அசுவமேத யாகம் செய்யப் போகிற ஒரு
சக்கரவர்த்தினிப் புன்னகையோடு
ஒவ்வொரு விழாச் சந்தர்ப்பத்திலும்
ஒரேமாதிரிதான் காட்சியளிக்கிறாள் அருணா

நம்ம அருணாவைப் பார்த்தீர்களா
நான் கவனிக்கவில்லையோ என நினைத்து
மீண்டும் உசாவினாள் என் மனைவி.
”பார்த்தேன், பார்த்தேன்.”

Read more...

வேதனை என்பது...

சொன்னதைச் செவிமடுக்கத் தவறியவன்
சொன்னவன் முகத்தை உற்றுப் பார்ப்பதுபோல்
அவன் பார்த்தான் அந்த முருங்கை மரத்தை.
சொன்னது கேளாத செவிடனைத்
திரும்பவும் பார்ப்பதுபோல்
அவனைப் பார்த்தது அது.
பூவிலிருந்து பிறந்த பிஞ்சு வளர்ந்து வளர்ந்து இவ்வேளை
பக்குவமான காயாகி இருந்தது – ஒன்றே ஒன்றுதான்.
முதிர்ந்து முதிர்ந்து அந்த ராஜ்யத்திற்குத்
தகுதியற்ற குடிமக்களாய் ஆனதுவே பிறிதனைத்தும்,
வேதனை என்பது ஒன்றே ஒன்றின் விழிகளில் எரிவது

Read more...

Sunday, January 6, 2013

கண்டேன்

பள்ளத்தாக்கின் சிறுமரத்தை
மலையோடு போட்டி போட்டு
வானளாவ வளரச் செய்ததைப்

புல்லை, மூங்கிற்
பெருமரமாகச் செய்ததைக்

கண்டேன் அந்தக் கானகத்தில்
நான் நின்ற வேளை

Read more...

மதிப்பிற்குரிய

மொழியியல் வல்லுநர் அவர்களுக்கு
வணக்கம்.
வாழ்க உங்கள் மொழி மைய வாதம்

உங்களுக்குத் தெரியும்:
நம் காடுகளில் அருகிவருகின்றன புலிகள்.
உங்களுக்குத் தெரியும்,
புலிகளைப் பார்த்திராத எம் மக்கள் சிலருக்கு
புலி என்ற சொல் ஒன்றே புகல் என்பது
இந்தப் பரிதாபநிலைமீது இரக்கம் கொள்வாரும்
நீங்கள் அல்ல என்பதை நான் அறிவேன்
உங்களுக்கு ஓர் யோசனை
உங்கள் விளக்கைக் கையிலெடுத்துக் கொள்ளுங்கள்
முடிவுறாத இந்த இரவின் வழியே
மொழிக் கிடங்கைச் சென்று அடையுங்கள்

ஏன் இப்படி உங்கள் இதயம்? உங்கள் கைகள்?
பயப்பட வேண்டாம். காவலர் எவரும் இல்லை
புலி என்ற சொல்லைத் தேடி எடுத்துவிட்டீர்களா?
சிறு தடயமும் இன்றி அதை அழித்துவிடுங்கள்
யாருக்கும் தெரியாது. அவ்வேளை
கானகத்தின் கண்காணாப் பகுதியிலிருக்கும்
அநதச் சில புலிகளும் துடித்து மடிவதைக் கேட்பீர்கள்
அல்லது அந்த அவலக் குரல்
உங்கள் செவிகளைத் தொடாமலும் போகலாம்
வந்துவிடுங்கள். நிம்மதியாய்த் தூங்கி எழுங்கள்

நல்ல தூக்கமில்லை என்கிறீர்கள்
திரும்பி வரும் வழியில்
உங்களைப்போலவே யார் யாரோ வந்துபோன
சுவடுகளையும் தடயங்களையும் நீங்கள் கண்டது
திரும்பத் திரும்ப உங்கள் மூளையில் புரள்வது
காரணமாயிருக்கலாம்
விடுங்கள். நிமிர்ந்து நில்லுங்கள், நடங்கள்.
உங்கள் வெற்றிநடையைத் தடுத்து நிறுத்தியபடி
அடிக்கடி உங்கள்முன் காட்சியளிக்கிறது
ஒரு மரம் – ஆக்டபஸ் – பயப்படுகிறீர்கள்.
மீண்டும் மரம் என்ற சொல்லழித்து அமர்கிறீர்கள்.
ஆனால் மரம் சாகவில்லை
நீங்கள் செல்லுமிடமெங்கும்
சொல்லற்று நிற்கிறது அது
நிலைமாறாத கால்களை ஊன்றி
நெஞ்சைக் காட்ட விரித்த கைகள்
வானில் நெளியும் விசித்திரத்தோடு

Read more...

Saturday, January 5, 2013

வீடும் யாத்ரீகனும்

எந்தெந்த தேசங்களிலெல்லாமோ
நான் சந்திக்க நேர்ந்த அந்த யாத்ரீகன்
அன்று ஒரு வீட்டின்முன் நின்றுகொண்டு
வீதியையே பார்த்துக்கொண்டிருக்கக் கண்டேன்
நிலையான அச்சித்திரத்தின் முன்னே
வந்து மறைந்துகொண்டிருந்தனர் பயணவழிப்போக்கர்கள்
பயணவழிப்போக்கர் விழியில்
சற்று நேரம் தெரிந்து மறையும் சித்திரம் அது

Read more...

அந்தச் சுவர்க் கடிகாரம்

எப்போதையும்விடத் தீவிரமாய் இப்போது
பொன்மணி போலொரு பொருளை விரும்பினேன்
காலம் இற்றுவிழப் படுக்கையில் விழுந்த என் எதிரே
அதைக் காணவே கண்டு துடிதுடித்தேன்

நண்பனை அழைத்து ஒரு சுவர்க் கடிகாரம்
வாங்கிவரச் செய்து மாட்டினேன் எதிரே.
அய்யோ, அதன் அழகு சொல்லி மாளாது.
அநத் அழகும் வியப்பும் ஒரு வினாடியும் மறையாது.
ஒவ்வொரு வினாடியும்
தன்னைத்தானே புதுக்கிக்கொண்டிருக்கும்
பொன்மணி போலொரு பொருள் அதை –
ஆ, எப்படிச் சொல்வேன் அதன் அழகை!

அதை நான் தேர்ந்தெடுக்கவில்லை;
ஆகவே அது மிக அழகாயிருந்தது.
ஆனாலும் அதன் பொன்மணி வண்ணத்திற்காய்
குறிப்புக் கொடுத்திருந்தேன்.
ஆகவே அது மிகமிக அழகாயிருந்தது.
எவ்வேளையும் என் எதிரே இருந்தபடி
மாறா அழகாய் உயிர்த்துக்கொண்டிருந்தது அது

தூக்கம் விழித்து எழுந்த என் தியானத்திற்குப்
பக்கவாத்தியமாய்
பின்னணி இசையாய்
இல்லை
என்னை அளக்க முயலும் அளவையோ அது?
இல்லை
சாட்சியாய்
ஒரே துணையாய்
தியான மந்திரமாய்
இல்லை
தியானமாகவே
இருந்தது அது

Read more...

Friday, January 4, 2013

கொதித்து ஆறிய நீர்

தண்ணீரை எனக்கு ரொம்பப் பிடிக்கும்
தண்ணீர் குறித்து இவ்வாறு பேசுவது உளறல்
எனினும் உளராமல் இருக்க முடியவில்லை

பிடிக்கும் என்றாலும்
ஐஸ்வாட்டரைத் தொடமாட்டேன்
(காரணம் உங்களுக்குத் தெரியாததல்ல)
தாயைக் கழித்தாலும் தண்ணீரைக் கழிக்காதே
என்றொரு பழமொழியுண்டு. இக்காலமோ
நீர்பற்றி எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய காலம்
மண்ணில் விழுந்த நீரைக் கைகளால் அள்ளுவதோ
காலால் அலம்பிக் குதித்து விளையாடுவதோ கூடாது இப்போது
மலைவனப் பிரதேசங்கள் இதற்கு விதிவிலக்கு எனினும்
அங்கும் பாறைகளில் குதித்து ஆடும் நீரையே
ரொம்பவும் பிடிக்கிறது
வானிற்கும் பூமிக்குமிடையே
அது மழைத்துக்கொண்டிருக்கும் கோலத்துக்கு அடுத்தபடி

இரைந்துகொண்டோ அழுதுகொண்டோ
குடத்தில் விழும் குழாய்நீர் –
அதை நாம் நம்புவதில்லை.
நீரையே நம்பாத ஒரு நோய்க்காலம்தான்
வந்துவிட்டதே நமக்கு. எள்றாலும்
தண்ணீரை எனக்கு ரொம்பப் பிடிக்கவே செய்கிறது
டாக்டர்,
உங்கள் அறிவுரையின்படி கொதித்து ஆறிய நீர்
அந்த அருவி நீருக்கு அடுத்தபடி

Read more...

எனக்குப் பழங்களை ரொம்பப் பிடிக்கும்

எனக்குப் பழங்களை ரொம்பப் பிடிக்கும்
காரணம்:
சிசு பற்றும்
தாய் முலைகள்போல அவை இருப்பதால்

எனக்குப் பழங்களை ரொம்பப் பிடிக்கும்
காரணம்:
அவற்றைப் பிறருக்கு வழங்குகையில்
அப்பழங்களைச் சமைத்தவன்
நான்தான் என்பதுபோல்
என்னுள் ஓடும் ஒரு மின்னல்

எனக்குப் பழங்களை ரொம்பப் பிடிக்கும்
காரணம்:
திவ்யமான மவுனம் அவைகளுடையது
இருப்பினும் என்னைப் போலவே பாஷை தேடி
ஒரு நிறத்தையும் மணத்தையும் பெற்றிருக்கின்றன

எனக்குப் பழங்களை ரொம்பப் பிடிக்கும்
காரணம்:
உடமையாளர் அந்நியர் என்ற பேதம் காட்டாதவை அவை

எனக்குப் பழங்களை ரொம்பப் பிடிக்கும்
காரணம்:
பறவைகளுக்கும் அவைகளைப் பிடிக்கும்

எனக்குப் பழங்களை ரொம்பப் பிடிக்கும்
காரணம்:
அவை தங்களை நாடுவோர்க்குத்
தங்களை முழுமையாய் அளித்தும்
அழியாதிருக்கும் இரகசியம் கொண்டவை

எனக்குப் பழங்களை ரொம்பப் பிடிக்கும்
காரணம்:
மலர்களைப் போலும் வண்ணங்களுடையவை அவை

எனக்குப் பழங்களை ரொம்பப் பிடிக்கும்
காரணம்:
அவை ரொம்ப வெளிப்படையானவை
பாதுகாப்பற்றவை. என்றாலும் சில பழங்கள்
தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்
சிறுசிறு உத்திகளைக் கொண்டிருப்பதும்
தமக்காக அல்ல
தமக்காக அவை எதையும் செய்வதில்லை
அவை விதைகளைத் தம் உயிர்போலக்
கொண்டிருப்பதையும் அறியாதவை

எனக்குப் பழங்களை ரொம்பப் பிடிக்கும்
காரணம்:
யாருடையவோ இதயம்போல அவையிருப்பதால்

Read more...

Thursday, January 3, 2013

கைத்தொலைபேசிக்காரன்

திடீரென்ற ஓர் அழைப்பொலியைக் கேட்டாலும்
பதறாமல் அதற்குப் பழக்கப்பட்டவர்போன்ற
நிதானத்துடன் சிறிது தாமதமுமின்றி
சூழலை விட்டும் விலகியவராய் ஒதுங்கி
எங்கோ தூரத்திலுள்ள ஒரு குரலோடு
அவர் தொடர்பு கொள்கிறார்
அவ்வேளை அருகிலுள்ளவர்களெல்லோருமே
அவரால் கைவிடப்பட்டவர்கள் போலாகிறார்கள்
அவர் பேசி முடித்துவிட்டுத் திரும்புகையிலும்
அவர்கள் முகத்தில் அச்சோகம் ததும்புகிறது

அவர் யாரோடு பேசினார், என்ன பேசினார்
என்பதல்ல முக்கியம்
அவர் யாராயிருந்தாலும் அந்த யாரோ ஒருவர்
அவர்களுக்கு அந்நியராகவே ஆகிவிடுகிறார்
முகந்தெரியாத அந்த நபரின்
குரலுக்குச் செவிசாய்த்து நிற்கும் இவர் முகத்தில்
அவ்வப்போது துவக்கத்தில் சற்றே நெருடினாலும்
உடனே சரியாகப் பற்றிக்கொள்ளும்
அன்னியோன்யம், கவனம், அக்கறை...
அப்போது வசீகரமிக்க ஒரு காதலராய் அவர் காட்சியளிக்கிறார்
சுற்றியுள்ளவர்களிடமெல்லாம் பித்தேறுகிறது பிரேமை அவர்மீது
அவரால் உரையாட முடிகிற
முகம் தெரியாத அந்த யாரோ ஒருவர்மீது அந்நியமும்
பொறாமையும் இவரால் கைவிடப்பட்டது போன்ற
அந்த சோகமும் துடைக்கப்படாமலேயே
அந்த பிரேமை கனல்கிறது

அந்தக் கருவியை இடுப்பில் செருகி அமர்த்திவிட்டு
அவர் புன்னகையுடன் அவர்களை நோக்குகிறார்
அவர்களைப் படித்துவிடுகிறார்
அந்த யாரோ ஒருவர்தான் நீங்கள் ஒவ்வொருவருமே என்கிறார்
அவர்களுக்கு அது புரிகிறதில்லை
எல்லாம் பிதற்றல்களாகத் தெரிகின்றன

Read more...

இந்த இரவில்

இந்த இரவில் அறையப்பட்டு
ஒழுகும் இரத்த காயங்களுடன்
தாகவிடாயால்
உயிருடன் இறந்துகொண்டும்
இறந்து உயிர்த்துக்கொண்டும்
ஒரு ஜீவன்பாடும் அவஸ்தையை நீ அறிவாயா
உன் வானத்தை இடிமின்னல் கிழிக்கும்போது,
புயற்காற்று உன் விளக்குகளையெல்லாம் அணைக்கும்போது,
உன் கதறலைப் பொருட்படுத்தாத ஒரு மவுனவெளி
உன்னைத் திடுக்குறவைக்கும்போது?

அழுத்தும் இந்த வேதனை
மனிதவாசமற்ற பனிமுகடுகளில் திரியும்
பனிமனிதனின் காலடிப் பதிவுகளினாலா?
எந்த ஓர் இரகசியச் செயல்பாட்டின்
பொருள் புரியாத வலி இந்தத் தனிமை?

இந்தக் கொடூர உலகில்
சிறு அதிர்ச்சிக்கும் தாளாது மாண்டுவிடும்
மென்னுயிர்கள் ஆயிரத்தின் கல்லறைகள் மீதே
வீடுகொண்டிருக்கும் அவனுள் குடி கொண்டுவிட்டதோ
அந்த
மென்னுயிர்களின் ஆவிகள்?
யாருமறியாத இம்மூளைப் பிரபஞ்சத்தில்
யாரோ செய்யும் கதிர்ச் சிகிச்சையின்
படுத்தல்களோ இந்த வலி?

துயின்று கொண்டிருக்கும் மனிதகுமாரனின் தலையில்
ராவோடு ராவாக ராஜ்யபாரம் துறந்து ஓடிப்போன
கடவுள் தன் மணிமுடியைச்
சூட்டிவிட்டதால் வந்த பாரமோ?

Read more...

Wednesday, January 2, 2013

வீட்டின் முன் ஒருவன்

வீட்டிற்குள் வீட்டை விரும்பாத ஏதோ ஒன்று
அவனை எப்போதும் வீட்டின் முற்றத்திற்கே துரத்துகிறது
வானத்தின் ஒளிவெள்ளத்தில் மிதக்கும் முற்றத்தின்
பச்சைத் தீவுதான் அவன் விரும்பும் இடமோ?
எவ்வேளையும் வீடு தன்னகத்தே வைத்திருக்கும்
சிறு இருளோ அவனைத் துரத்திக்கொண்டே இருப்பது?
படுக்கைநீள ஜன்னல் ஒளியில்
அவன் குளித்துக்கொண்டிருக்கும் போதும்
கட்டிலுக்கடியிலும் அறைமூலைகளிலும்
அது மவுனமாய்ப் பதுங்கியிருக்கிறது
முந்தானையை இழுத்துச் செருகி
பெருக்குமாற்றைத் தூக்கிக்கொண்டு நிற்கும் அவள் கோலம்
அந்த இருளுக்கெதிரான சீற்றம்போல் கனலக் காண்கிறேன்
ஆனால் அத்தனை நிதானமும் அத்தனை அழகும் ஒளிவீச
தூசுப் படிவுகளையும் கசங்கிய காகிதங்களையும் ஒதுக்குவதுபோல்
அந்த இருளை அவள் விரட்டுகிறாள் எவருமறியாமல்.
இருந்தும் வீட்டுக்குள் வீட்டை விரும்பாத ஏதோ ஒன்று
அவனை விடாமல் துரத்திக்கொண்டேயிருக்கிறது முற்றத்திற்கு.
வீட்டிற்கு முந்தைய ஆதி நாடோடிக் காலமொன்று
அந்தப் பச்சைவெளியில் பருவகாலங்கள் போல்
நிலைகொள்ளாமல் சென்றுகொண்டேயிருக்கிறது
இந்தப் பக்கமோ ஆழமற்ற அத்திவாரங்களுடன்
வளர்ந்து வளர்ந்து நிற்கும் வீடுகள்
கட்டடங்கள் நகரங்கள் நாடுகள் நாகரிகங்கள்
திடீர் திடீரென்று சரிந்து ஓலமிடும் அழிவுகள்
என்றாலும் வீடு என்று ஒன்று வேண்டவே செய்கிறது
மனிதனை மனிதனிடமிருந்து அது பிரித்தாலும்
போர்க்காலத்துப் பதுங்குகுழிகள் போல அவை செயல்பட்டாலும்.
நுழைவாயிலேயே நின்றுவிட்ட கோலம் போல்.
முற்றத்தில் நின்றுகொண்டிருக்கும் அவனிடம்
யாரோ சொல்கிறார்கள்: ”நல்ல மனிதர்கள்
தம் வீடுகளைத் தம் வீடுகளினின்றே பாதுகாத்துக்கொள்கிறார்கள்”
நாடோடியாய் அலைந்துகொண்டிருந்த ஒரு யாத்ரீகன் அவன்
இன்று ஒரு வீட்டின் முன்னே நின்றுகொண்டு
வீதியையே பார்த்துக்கொண்டிருக்கிறான்
நிலையான அச்சித்திரத்தின் முன்னே
வந்து மறைந்துகொண்டிருக்கின்றனர் பயணவழிப்போக்கர்கள்
பயணவழிப்போக்கர் விழியில்
சற்றுநேரமே தெரிந்து மறையும் சித்திரம் அது

Read more...

அவனும் அவர்களும்

காலம் காலமாகவே
அவர்களுக்கு அவன்மீதும் நீதிமீதும்
இஷ்டமில்லை

அவனுக்குத் தடைவிதித்த
காலங்கள் போய்விட்டதனால்
அவர்களால் தடுக்க முடியவில்லை
அவனுடைய வளர்ச்சியினை

அவன் வளர்ந்தான்;
அவர்கள் அவனைக் கண்டுகொள்ளவில்லை.
அவன் மேலும் வளர்ந்தான்;
கண்டு கொள்ளாமலிருக்கவும் முடியாமற் போனதனால்
அவனை அவர்கள்
தங்கள் தளபதிகளாய்
அடியாட்களாய்ப்
பெருமைப்படுத்திக்
கண்டுகொண்டார்கள்.
அவன் மேலும் வளர்ந்தான்;
மீண்டும் அவர்கள்
கண்டுகொள்ளாதிருக்கப் பார்த்தார்கள்.
அவன்மேலும் வளர்ந்தான்;
தங்கள் அடியாட்கள் கொண்டே
அவனை அவர்கள்
தீர்த்துக் கட்டும் வழிகளையெல்லாம்
உபயோகித்தார்கள்.
தப்பிப் பிழைத்து
அவன் மேலும் வளர்ந்தான்;
அவனை அவர்கள்
தங்கள் சரியாசனத்தில் அமர்த்தியபடியே
சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
துக்கமோ சந்தோஷமோ இன்றி
அவன் மேலும் வளர்ந்தான்
கட்டிப் பிடித்து
அவனோடு ஒட்டி உறவாடியபடியே
அவனை விஷம் வைத்துக் கொன்றார்கள்,
எவருக்கும் தெரியாதபடி,
தங்களை உருவாக்கிய அதே விஷம் வைத்து

Read more...

Tuesday, January 1, 2013

இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும்

”அவர்களைத் தடுக்காதீர்கள்
அவர்களை என் அருகே வர அனுமதியுங்கள்” என்றவர்
தன் பீடத்திலிருந்து தள்ளிவிடப்பட்ட பின்தான்
தானாகவே குழந்தைகளை நாடி வந்தார்

மனித உறவுகளிலேயுள்ள
அதீத வன்முறைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல்தான்
இறுதியாக அவர் குழந்தைகளை நாடி வந்தார்
என்றும் சொல்லலாம்

இன்று அக் குழந்தைகளுக்கு அவர் இயேசு அல்ல
ஓர் ஆசிரியனும் விளையாட்டுத் தோழனுமாவார்.
மனிதர்களுக்கும் அவர் இயேசு அல்ல
கொஞ்சம் மனப்பிறழ்வும் கோழைத்தனமும்
தோல்விகளும் கூடிய அப்பிராணி

இன்று அவருக்கும் அவர் இயேசு அல்ல
அந்த மனிதன்!
மனுக் குலம் தன் தோற்றம் முதற்கொண்டு
கனாக் கண்டுகொண்டிருந்த அந்த மனிதன்
முற்றுணர்ந்தோன்,
கவிஞன்,
தீரன்

Read more...

ஆயிரம் பேரும் ஆயிரம் நுனிபற்றி

ஆயிரம் பேரும் ஆயிரம் நுனிபற்றி
தத்தமது பக்கம் இழுக்க
கிழிந்து போகாது
அத்தனை பேரின் ஆசைகளையும் நிறைவேற்றும்
இச்சையே தன் வடிவமாகும் –
உன்னை நான் அறிந்தேன்
ஒப்பிலாப் பேரமைதி கொண்டேன்

அந்த ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளத் தவறுகிற
ஒரு போர்ப் பின்னல் நிகழ்ந்துகொண்டிருக்க
அதுவேயாகும் – உன் கட்டழகின் – வடிவைத்
துல்லியமாய் நான் அறிகிறேன்.
எத்துணைப் பேரழகி நீ! எத்துணைப் பேரன்பு நீ!
என் நோயினைக் களைந்த மாமருந்து நீ!

நானுனைக் கண்டபோது
நீயுமெனைக் கண்டுகொண்டாய்
பார்வை மாறாமல் நாம் ஒருவரையொருவர்
பருகிக்கொண்டிருக்கும் இவ்வேளை குலைய
என் காதலை நான் உன்னிடம்
பிரகடனம் செய்யவா எனக்
காமிக்கத் தொடங்கும்போது
என் காமத்தையும் கற்பனைகளையும் பொசுக்கிக்
கைக் குழந்தையென எனை அணைத்துக் கிடக்கும்
உன் கரத்தை உணர்கிறேன்

எனினும் நான் வளருவேன் என் அன்னையே
உன்னுடையதே போன்ற குணங்களனைத்தும் பெற்று
வளர்ந்து வந்துன்னைக் கரம் பிடிப்பேன்
இவ்வுலகிலுள்ளோர் எல்லோர் முன்னிலையிலும்
உன்னை நான் அவர்களுக்குக் காட்டுவேன்

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP