Friday, August 31, 2012

பொருண்வயிற் பிரிந்தவன்

பொருண்வயிற் பிரிந்த தலைவனோ அவன்?
(உன் தனிமையை நான் அறிவேனன்றோ?)
கடல் தாண்டி
காலம் பல கடந்து
வழுவாத ஒழுக்கத்துடன்
பெரும் பொருளீட்டிக் கொண்ட
செல்வனோ?

துரிதமாகவும் எளிதாகவும்
உன் முன் கொண்டுவரும் முகத்தான்
பொருளின் முழுமதிப்பும் குன்றாமல்
கையடக்கமான ஒரு பெட்டிக்குள்
அடக்கிக் கொண்ட விவேகியோ?

திறந்த அப் பெட்டிக்குள்
காட்சியளித்தது,
பொருளின் பொருளையெல்லாம்
உணர்த்தும் ஒரு கவிதையா?
அல்லது வெறும் பணம்தானா?
சொல்லடி என் தோழி,
எப்பேர்ப்பட்டவன் உன் ஆண்மகன்?

Read more...

நாறும் கழிவுநீர்த் தேக்கங்கள்

நல்லுறக்கம் நசிகிறது,
கொசுக்கொல்லிக்கும்
இராணுவத்திற்குமாய்க்
காசு செலவழித்துக்
காற்றை விஷமாக்கும்
கண்றாவிகளால்.

Read more...

தர்ப்பூசணிக்காரன்

பெருங் கருணை ஒன்றின் கைப்பாவையோ
தூதுவனோ, தேவனோ?

எப்போதும் பூஜ்யத்திலிருக்கும் தராசு முள்ளுடனும்
கனியின் குருதிச் செம்மை நோக்கியே பாயக் கூடிய
குறுவாளுடனும், தாகமில்லாதவர்களே மிகுந்து மிகுந்து
காணாமற் போனால்- பூச்சாண்டி காட்டும்
தயார்ச் சக்கரங்களுடன் கூடிய தள்ளுவண்டியுடனும்
நடைபாதையில் அவன் நின்று கொண்டிருக்கிறான்,
கொளுத்தும் கோடையிலே தண்ணீர்க்
கனி குலுங்கும் குளிர் தருவாய்!

காதற் பெருந்தகையோ, காமனோ
பேதை என் நெஞ்சிற் பித்தேற்றும் கோலமோ,
காதலையும் காமத்தையும் அறிந்து
உலகைப் புரந்தருளும் பேரறிவோ
தாக உதடுகளிற்
கரைந்தே விடுபவனோ, மாயனோ?

Read more...

Thursday, August 30, 2012

கரும் புள்ளி

மானுட முகத்திலொரு
கரும் புள்ளி வந்ததெப்படி?

உயிரின் ஆனந்தமாய்
மலர்ந்தாடிக் கொண்டிருக்கும்
குழந்தைக்குத் தெரியாது,
தன் பட்டுக் கன்னத்தில்
அம்மா இட்டிருக்கும்
கரும் பொட்டு எதற்கென்று.

அறிந்தும் அறியாதவளாய்
அவனோடு மகிழ்ந்து கொண்டிருப்பதென்ன
அவனது இளம் தாயும்!

Read more...

பேருந்து நிறுத்தமொன்றில்…

பேருந்து நிறுத்தமொன்றில்
வெகுநேரமாய் நின்றுகொண்டிருந்தாள்
ஒரு பெண்.

அக்கம் பக்கத்திலுள்ளோர்
சந்தேகக் கண்களும்
காமக் கண்களும் தொந்தரவு செய்ய
கலக்கமடைந்தாள்
அந்தப் பெண்.

ஒரு மனிதன் அவளை நெருங்கி
எங்கே போக, எந்த பஸ்ஸைத்
தேடுகிறீர்கள் அம்மணீ
என்கிறான்.

இல்லை; சொன்னபடி வரவேண்டிய
ஒரு ஆளைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
என்கிறாள் அவள்.

இவ்வளவு காலம் வராதவன்
இனிமேலா வரப்போகிறான்?
அவனுக்குப் பதிலாய்
என்னை ஏற்றுக் கொள்ளக்கூடாதா,
அடி பெண்ணே?
என்று எட்டிப்பிடித்து
சிரிக்கிறான் அவன்.

அவளும் பயமின்றித்தான்
அவனைத் திருமணம் செய்துகொண்டாள்
எனினும்
இன்று
காதலனாலும் கணவனாலும் ஒரு சேர
ஏமாற்றப்பட்டு விட்டவளே அவள்.

பேருந்து நிறுத்தத்திலிருந்து நீங்கி
நடக்கத் தொடங்கிவிட்டாள் அந்தப் பெண்.

அந்த அகாலவேளையில்
தன்னந் தனியாய்
அவள் நடந்து கொண்டிருந்தாள்;
நம்பிக்கைகள் கைவிடப்பட்டதனால்
முழுவிழிப்பொன்றுதான் பாதை எனக்
கண்டுகொண்டவளாய்
அவள் நடந்துகொண்டிருந்தாள்.

Read more...

Wednesday, August 29, 2012

செல்வந்தக் குணசீலன்

தன்துயரின் முதல் சொற்றொடரைத்தான்
அவன் உரைத்திருப்பான்
அதைத் தொடரவிடாமல்
அவர் அவனுக்கு உதவுகிறார்.
எத்துணை தெளிவு! எத்துணை விரைவு!

அவரது பாதுகாப்புப் படையில் ஒருவனாகி
அவரது வாயில் காப்போன்களில் ஒருவராய்
அமர்ந்துள்ளோர்தாம் எத்தனை பேர்!
மனிதனின் தகுதியையும் இயலாமையையும்
தனது பேரறிவால் தீர்மானித்தபடி
படியளக்கும் எத்தனை பெரியவர் அவர்!
எத்தனை குடும்பங்களைக் காக்கும்
பெருங் காமமும் பெருங் கருவியும்
அவர் பெற்றுள்ளார்!
இன்னும் இன்னும் என
அவர் துடித்துக் கொண்டிருக்கிறார்!

அவரது தேவை எல்லாம்
நீ அளக்கப் போகும்
உன்துயர்க் கதை அல்ல;
உனது வறுமையும் உழைப்பும்
உனது பொண்டாட்டி பிள்ளைகளின்
இளமையும் நோய்மையும் இன்னபிற
செல்வங்களும்தான்.

நகர வீதியின் மாசுக் கேடும்
அமைதியின்மையால் உயரும் வெப்பமும்
கருப்புக் கண்ணாடி இயற்றப்பட்ட
தனது குளிர் சாதனக் காரின்
உள் நுழையாது என அவர் நம்புகிறார்.
தங்கள் சோற்றிலும் நல்வாழ்விலும்
மண்ணள்ளிப் போட்ட விதியை நோக்கி
நீதிக்காய் வயிறெரிந்து அழும்
அபயக் குரல்களும் கதறல்களும்
தன் செவியை உறைக்காதபடியும்
நெரிக்கப்பட்டபடியும்
பிறர் பார்வையிலிருந்தும்
அவர் தம்மை மறைத்துக்கொள்ள விரும்புகிறார்.

Read more...

திருட்டுமுழி திருவாளத்தான் கதை

தனது என ஒரு தோட்டம் போட்டான்
என்ன விபரீதமோ இது என
வேலி சுற்றி வந்ததொரு
கூர்கொம்புக் குட்டி ஆடு
கண்டு நடுநடுங்கித்
தொலைந்தோம் என அஞ்சினான்
இரவோடு இரவாய்
வேலியில் ஆங்காங்கே
ஓட்டைகள் வைத்து
விட்டுக் கொண்டும் விரட்டிக் கொண்டும்
தந்திரமாய்க் காலம் ஓட்டினான்.

எல்லா மேய்ப்பர்களோடும்
கைகுலுக்கும்
பெரிய மனிதனாகிக் கொண்டான்.
தன் திருட்டு விழி மறைக்க வேண்டி
எல்லோர் கண்களுக்கும்
குருட்டுக் கண்ணாடிகள் வழங்கினான்.
மந்தை விட்டுப் பிரிந்துநின்ற
ஆட்டுக்குட்டிகளை
பசி கொண்ட ஓநாய் போல்
ஓடி ஓடித் துரத்திக் கொன்றான்.

Read more...

Tuesday, August 28, 2012

பேரிளம் பெண்

தன் குழந்தைப் பருவத்தையெல்லாம்
தாய் தந்தை இல்லாதவள்போல் கடந்தாள்.
தன் விளையாட்டுப் பருவத்தையெல்லாம்
நண்பர்களில்லாதவள்போல் கடந்தாள்.
தன் கல்விப் பருவத்தையெல்லாம்
ஆசிரியர்களில்லாதவள் போல் கடந்தாள்.
தன் கன்னிப் பருவத்தையெல்லாம்
ஒரு தோழியில்லாதவள்போல் கடந்தாள்.
தனது நெடிய இளமைப் பருவத்தையும்
மணம் செய்து கொள்ளாதவள்போல்
ஆணின் அண்மை உணராதவள்போல்
தாய்மையடையாதவள்போல்
பெற்று பேணி வளர்த்து பறக்கவிடும்
இல்லற இன்பமே காணாதவள்போல்
கடந்தாள்.
சோர்வின் பெரும்பாரம் அழுந்த
முதுமையின் கரைசேர்ந்து…
இன்று அவளை விம்மச் செய்த
ஆறாத் துயரமதைக் கண்டுநின்றபோது
அவளது தோளில்
மார்கழிக் காலைபோலும்
தொட்டு நிற்பது யார்?
அவனை எப்படி அவள் மறந்திருந்தாள்
இவ்வளவு காலம்?
அவளது சிசுப்பருவத்தின் முதற்சிரிப்பை இயற்றியவன்!
ஒவ்வொரு பருவத்திலும் அவள் தனிமையிலெல்லாம்
உடன்வந்து கொண்டிருந்தவன்!
கண்களில் நதி சுரக்க-நல்லவேளையாக-
இன்று அவள் அவனைக் கண்டுகொண்டாள்!
முதன்முதலாய் முகம்திரும்பி
அவன் புன்னகையைப் பார்த்துவிட்டாள்!
கணப் பொழுதில் அவளை ஒரு புது
மணப்பெண்ணாக்கிவிட்ட காதலன்!
எவர் கண்களுக்கும் புலப்படாத அரூபன்!
அவளது துயர வாழ்வின்
கண்ணீரைத் துடைத்து விட்டோன்!

Read more...

குறைப் பிறவியினரும் கோயில்களும்

குறைப் பிறவியும் குறைப் பிறவியும்
கூடிப் பிறந்தது
குறைவிலாததோர் மாணிக்கமாய்
உதித்த்தெப்படி?

தாயிடமிருந்து அம் மாமணிச் செல்வத்தைத்
திருடிக்கொண்டு சென்று
அதை ஒரு குறைப் பிறவியாகவே
சிதைத்துக்கொண்டு வந்து நிற்பது யார்?
ஏன்?

அதிர்ந்து நிற்கவைத்துவிடும்
மானுடத் துயர் அறியாத நிலையில்
சுகம் தேடிச் சுகம் தேடிச்
சதா அலையும் காமுகர்களாகிவிடுவது தவிர
வேறு வழியில்லையா? சுகம் நிலைக்க
இயற்கை மீதும் எளியவர் மீதும்
குதிரையேறிக் கொடிகட்டிப் பறக்கும்
ஈனப் பிறவிகளாவது தவிர
வேறு வழியில்லையா?

தீயினிற் புழுவாய் வதங்கும்
இக் குறைப் பிறவிகளிடமும் தோன்றும்
இயற்கையுந்தல்கள்,
வாழ்வினிமைகள் காணுங்கால்
இளக்காரமின்றிக்
கசியும் மனமெங்கே?

பரிவும் ஞானமும் கொண்ட பாவனையில்
சில்லறைகளை எறிந்துகொண்டு
பரிதாபமாய் வீற்றிருக்கும்
இக் கோயில்களைக் கட்டியதும்
காப்பாற்றிக் கொண்டேயிருப்பதும்
எத்தகைய குறைப் பிறவியினர் கை?

துயரழிக்கும்
மானுடப் பொறுப்பு தீண்டா நிலையில்
இக் கோயில்கள் கொண்டாட்டங்கள் திருவிழாக்கள்
மாளாச் சடங்குகள் கலைகள் மற்றும்
இலக்கியங்கள் அனைத்துமே
ஈனச் சுகம் தரும்
போகப் பொழுதுபோக்குகளன்றி வேறென்ன?

இக் குறைப் பிறவியினர்
கூட்டம் கூட்டமாய் வந்திங்கே
குழுமி நிற்பதன் பொருள்தான் என்ன?

Read more...

Monday, August 27, 2012

சாத்தானியப் பேரரசும் கடவுளும்

இவ் வுலகையே
ஓர் குடையின்கீழ் ஆளும்
அரசனாக்குகிறேன் உன்னை,
உன் பெயரை மட்டும்
என்னிடம் கொடுத்துவிடு என்றான்
சாத்தான்.

நிபந்தனைகளேதும் வேண்டாம்
அந்த அரச பதவியையும்
நீயே வைத்துக்கொள்
என் பெயரையும்
இதோ பெற்றுக் கொள் என்று
கையளித்துச் சென்றுவிட்டார்
கடவுள்.


சாத்தானியப் பேரரசெங்கும்
மாசுபடுத்தப் படாத அரும் பொருளாய்
துயரப் படுவோர் இளைப்பாறும்
மென் தோள்களாய்
இன்தீண்டல்களாய்
சாத்தானைத் தேவனாக்கும்
பெரும் பணியாய்
இடையறாகருணா இயக்கமாய்
பேரறிவாய்
மெய்மையாய்
எங்கும் நிலவியபடி
எங்கும் திரிந்து கொண்டிருந்தது
கடவுள் எனும் பெயரற்ற பேரன்பு.
பெருங்கொடை.
பேரறம்.

Read more...

தன் குறையுணர்ந்த மனிதன்

வியத்தகு மட்டை வீரச் சிறுவனுக்கு
போலியோ கால்கள்.
அவனது குறி எப்போதுமே ஃபோர் சிக்ஸ்தான்!
அல்ல, அல்ல, ஆறு மட்டுமேதான்.

அதீத சுரணைமிக்கோன், விழிப்புடையோன்.
வீழ்த்தவரும் எல்லாப் பந்து வீச்சுக்களையும்
நேர் கொண்டு விளாசும் தீரன்.
என்றாலும்
எதிர்ப்படும் எவரையும்
அது காயப்படுத்தி விடக்கூடாது.
துடித்துக் கொண்டிருக்கும் எவர் கைகளிலும்
அது அகப்பட்டு விடவும் கூடாது.
காணும் முகமனைத்தும் ஒரே மலராய் மலரும்படி
பந்து வானுயர்ந்து
தன் எல்லை விட்டும் நீங்க வேண்டும்.
அதுவே அவன் குறிக்கோள்.
அது ஒன்றே.

Read more...

Saturday, August 25, 2012

இன்பச் சிரிப்புகளும் பொம்மைகளும்

துயரமே உருவாய்க் காணும்
அவர் கரை தெரியுமா உங்களுக்கு?

அவரது இதயக் கனியே போல்
ஒரே ஒரு பெண்குழந்தைதான் அவருக்கு.
அக் குழந்தையின் கள்ளமற்ற சிரிப்பில்
தூண்டல் பெற்றவராய்
ஓராயிரம் ஆனந்தக் கவிதைகள்
எழுதிக் கொண்டிருந்தார் அவர்.
வீட்டை நிறைத்துவிட்டார்
அத் தெய்வம் விளையாடுவதற்கென
விதவிதமான பொம்மைகளால்.
பெண் என
அவள் முழு வளர்ச்சியடைந்த பின்னும்
அனுபவங்களாலாகும்
மூளை வளர்ச்சியடையாது
மாறாத இன்பச் சிரிப்பும்
பொம்மைகளோடாடும் விளையாட்டுமாய்
அவள் நின்று விட்டதைக் கண்டு
உடைந்து போய்விட்டாரோ அவர்?

அவள் நெஞ்சையெல்லாம் ஆட்கொண்டு
அவளை வஞ்சித்துக் கொண்டிருக்கிற
அப் பொம்மைகளை
அவள் முகம் வாடும்படி
எப்படிப் பிடுங்கி எறிய முடியும் அவரால்?

திருமணம் மருத்துவமாகலாமென
மணம் முடித்து வைத்த பின்னும்
தன் குழந்தைகளையும் கணவனையும்
பொம்மைகளாகவே கண்டு
அவர்கள் உயரைக்
குடித்துவிட்டு வந்து நிற்பவளைக் கண்டு
அவளது மாறாத இன்சிரிப்பைக் கண்டு
கோபங் கொள்ளவா,
வெறுக்கவா,
அழவா,
அவரால் என்ன செய்ய இருக்கிறது?

Read more...

காதலியைக் கைப்பிடித்துவிட்ட

காதலியைக் கைப்பிடித்துவிட்ட
குதூகலத்துடன்
கடைவீதியை நோக்கி
நடந்து செல்வது என்பது
சாதாரண நிகழ்வா?

காதலியின்
பொன்னணி
பறித்தோடிச் செல்லும் திருடனை
ஆளரவம் குறைந்த நீள் சாலையில்
தலை தெறிக்கத் துரத்திச் செல்வதென்பதும்
சாதாரண நிகழ்வா?

கண் தெரிய
ஓடிக்கொண்டேயிருந்த திருடன்
திடீரென அவனை-
அவன் அதுவரை
கண்டேயிராத உலகின் நடுவில்
கைவிட்டு மறைந்து விட்டதும்
சாதாரண நிகழ்வா?

Read more...

நீ இங்கே வருவாய் என்று...

முதலில்
நீயே இந்த பூமியின் அரசன்
என உணர்ந்தாயானால்
எனக்குத் தெரியும்
நீ இங்கே வருவாய் என்று.

உனது கையாலாகாத்தனத்தின்
உரம் தளர்ந்து விட்ட
தாழ்வு மனப்பான்மையில்தான்
கடவுளர்கள் இங்கே உதிக்கிறார்கள் என
நீ உணரும் போழ்தே
எனக்குத் தெரியும்
நீ இங்கே வருவாய் என்று.

அறமும் அமுதசுரபியும் அமைதியுமே
உனது இலட்சியம் என்பதையும்;
அஞ்ஞானமே
நம் அனைத்துத் துயருக்கும்
காரணமென்பதையும்; ஞானம் என்பது
எந்தப் பிரிவினைக் கூறுகளையும்
சம்மதிக்காது என்பதையும்
நீ உணரும் வேளை
எனக்குத் தெரியும்
நீ இங்கே வருவாய் என்று.

இப் பிரபஞ்சத்தின்
பேரிசையை உணர்ந்தவனாகி
தோன்றிவிட்ட நம் மனித சமுதாயத்திலும்
அதே போலொரு பேரொழுங்கு
சாத்தியமே என்றும் அதை இயற்றுதலே
மனிதப் படைப்பின் உச்சம் என்றும்
பேர் வேட்கைபற்றி எரிந்து கொண்டிருப்பாயானால்
எனக்குத் தெரியும்
நீ இங்கே வருவாய் என்று.

அழகிலும் பிரம்மாண்டத்திலும்
உன்னை நீ மறப்பது கண்டு
தன்னைத் தான் மறப்பதிலேதான்
அழகும் நன்மையும் மெய்மையும்
துலங்குவதறிந்து,
பேதமறுக்கும் வாளே
துயரறுக்கும் வாளும்;
தீவினைகளின் ஊற்றுக்கண்ணே
துயரங்களின் ஊற்றுக்கண்ணும்;
கேளிக்கையை
பகட்டினைப் புரிந்து கொள்ளும் நெஞ்சமே
எளிமைக்கு இரங்கும் நெஞ்சமும்
ஏழைமுன் குற்றவேதனை கொள்ளும் நெஞ்சமும்;
அச்சத்தினாலன்றி
போர்களின் துரதிருஷ்டக் காட்டுமிராண்டித்தனத்திற்குக்
கலங்கும் இதயமே
மெய்யானஅமைதிக்கு ஏங்கும் இதயமும்;
என்பதையெல்லாம் நீ காணும் வேளை
எனக்குத் தெரியும்
நீ இங்கே வருவாய் என்று

பூஜை சடங்கு சம்பிரதாயங்கள்
பொழுதுபோக்கு கேளிக்கைகள் எல்லாம்
நம் உணர் வெழுச்சிகளைத்
துப்புரவாய் மழுங்கடித்துக் கொன்றுவிடும்
உதவாக்கரைப் பொய்மைகள் என்பதை
நீ கண்டுகொள்ளும் போதில்
எனக்குத் தெரியும்
நீ இங்கே வருவாய் என்று.

Read more...

மந்திரவாதி

ஒருவர் பாக்கியில்லாமல்
ஊரிலுள்ள ஆண்கள் பெண்கள் குழந்தைகள்
அத்தனை பேரும்
அடித்துப் புரண்டுகொண்டு வந்து நின்றார்கள்.
அந்த மந்திரவாதியைக் காண.

அவர் தொட்டுக் கொடுத்தது எல்லாமே
சில வினாடிகளில் பொன்னாக மாறின.
ஒருபாடு மக்கள் விதவிதமான பொருட்களை எல்லாம்
கொண்டுவந்து கொண்டுவந்து பரிசோதித்து விட்டனர்
ஆனால் அப் பொன்மையானது
சில நாழிகை நேரம்தான் என்று
முன்னமேயே சொல்லிவிட்டிருந்தார் அந்த மந்திரவாதி.

அரசன்முதல் நாட்டின்
முக்கிய பிரதானிகள் வரை
அனைவரும் ஒரு சபையாய்க் கூடி
அவரை எதிர்கொண்டனர்.

இந்த வித்தையால் நமக்கு என்ன லாபம்?
ஆசைகளாலும் மோசடிகளாலும்
மக்களிடையே நல்லெண்ணமும் அமைதியும் அழிந்து
வெறுப்பும் துயருமல்லவா பரவிவிடும்?

அய்யன்மீர்!
நான் சொல்வதைச்
சோதித்துப் பார்க்க வேண்டுகிறேன்
நீங்கள் அனைவருமே
ஜடப் பொருள்களைத்தான்
கொண்டுவந்து கொண்டுவந்து நீட்டினீர்கள்
அவை பொன்னாகின.
இப்போது ஒரு வேண்டுகோள்.
உங்கள் காராக்கிருகச் சிறையிலிருந்து
மிகக் கொடிய கைதி ஒருவனைத் தேர்ந்து
என்னிடம் கொண்டுவாருங்கள்
அன்பனே என்று நான் அவனை
ஆரத் தழுவித் தீண்டிய பின்
அவனைத் துணிந்து விடுதலை செய்துவிட்டு
அவனைக் கவனித்து வாருங்கள்
அப்போது இந்த வித்தையின்
அருமையை உணர்வீர்கள்.

நல்லது. நீர் சொல்வது நன்கு புரிகிறது.
ஆனால் அவனும் சில நாழிகைகளில்
பழைய நிலைக்குத்தானே வந்து விடுவான்?

ஆம், அய்யா. அப்போது
அவனை மீண்டும் ஒருமுறை
கட்டித் தழுவ வேண்டும்
...
ஆம், அய்யா,
மீண்டும் மீண்டும் மீண்டும்.

Read more...

Friday, August 24, 2012

பக்திப் பழங்கள்

கையில் விசிறியுடன்
இடுப்பாடை மட்டுமே அணிந்த
ஒரு வேனிற்கால மிதவெப்பமண்டலவாசி
பழுத்த பூசணிபோல் துலங்கு
மேனியெங்கும் பூண்ட திருநீற்றுப் பட்டைகளும்
கவலையின் ரேகை படியா
மந்தகாசப் புன்னகையுமாய்
வந்து கொண்டிருக்க,

’பக்திப் பழம்! பக்திப் பழம்!’
என வணங்கி வியந்தபடி
வழிவிட்டது கூட்டம்.
நம்மைப் போலவே இருக்கும்
இவனுக்கு மட்டும் வந்த வாழ்வைப் பாரேன்
என்று சற்று அசூயை கொண்டது,

கூடையிலுள்ள ஒரு குண்டுத் தக்காளி.

Read more...

கையால் மலமள்ளும்...

கையால் மலமள்ளும்
தீண்டாத் துயர் நடுவே

முழு மனிதன்
புனிதன்
நீலகண்டனைச்
சும்மா சொல்லக்கூடாது
பெரிய மனிதன் பெரிய மனிதன்தான்
எல்லா மலங்களையும் கூட்டி வழித்து
ஒரே உருண்டையாய்த்
தன் வாய்க்குள் கொண்டுபோய் விட்டான்.

அய்யோ... குடல் புழுத்து அழுகிச்
சாவதற்கா எனப்
பாய்ந்து போய்
அவன் தொண்டையைப் பிடித்து நிறுத்தி
ஆடிப் போய் நிற்கும் பார்வதியை
பேதைமை பேதைமை என உள்சிரித்தபடி
அரவணைத்துக் கொள்கிறான் கண்டன்.

காதல் கொண்டு
அவள் இதழ்களைக் கவ்வும்
அவன் இதழ்களின் நோக்குதான் என்ன?

எத்தகைய திடீர் அதிர்ச்சி அது!
உடலெங்கும் மின்னூட்டம் பாய
தீராப் பசி கொண்டவள் போலவள்
அவன் அதரபானம் பறிகிறதென்ன?
இதுநாள் வரை இல்லாத தித்திப்போ?

காதல் புரளும் மார்பினன்
அவனது பேச்சிலும் மூச்சிலும்தான்
எத்தகைய நறுமணம்!

Read more...

Thursday, August 23, 2012

அதுவரையுமில்லாத பரிவு

அதுவரையுமில்லாத பரிவுப் பெருக்குடன்
பாதுகாத்துக் கொண்டு நடந்தது,
சாலையில் செல்லும் சின்னக் குழந்தையினை
அதைவிடச் சற்றே பெரிய குழந்தை.

Read more...

கோட்டைகளும் கொலைக் கருவிகளும்

துயர்நிலமாய்த் திரிந்த்தெப்படி,
உயிரின் ஆனந்தக் குழந்தைப் பருவம்
முடிவில்லாப் பெருவிரிவாக்கமாய்த்
திகழ விதிக்கப்பட்ட இப் பூமி?

தொடரின்ப நாட்டமோ, பயமோ,
தாம்-பிறர் எனும் பேதங்களூடே
பிறக்கும் பாரபட்ச விஷத் துளிர்களைக்
கண்டுகொள்ளாது விரையும் வேகமோ,
சுரணையின்மையோ, அன்பின்வழி
பெருகும் அறிவு இன்மையோ?

முதிர் இளமைப் பருவத்தில்
அணிந்துகொண்ட போர்ச் சீருடையோ,
தனக்குள்ளே பதுங்கியிருக்கும்
கோட்டைகளையும் கொலைக் கருவிகளையும்
காலை முதற் கடனாய்ச் சரிபார்த்துக் கூர்படுத்தியும்
அந்தி இறுதிக் கடனாய் அதன் குருதி கழுவித் துடைத்தும்
தயார் நிலை பேணிக்கொண்டிருக்கும்
நம் வாழ்வோ?

Read more...

விலங்கினை விட மனிதன்

விலங்கினை விட மனிதன்
பல படிகள் மேலேறியதனாலோ
இனக் குழுக்கள் தம்மிடையே
இரத்தம் சிந்திக்கொண்டிருந்தன?

இன்றும்
போரும் துயருமாய் வதைபடும் நிலைதானோ
விலங்கினின்றும் மனித விலங்கு
அடைந்துள்ள முன்னேற்றம்?

என்ன செய்து கொண்டிருக்கிறாள்,
கவிஞனே, நீ அறிந்த
உன் காதல் தெய்வம்?

”ஒரு வீட்டார்
தம் வீட்டுக்குள்ளே
மணம் செய்துகொள்ள வேண்டாமென்று
சொன்னது அவளல்லவா?”

இன்றும்
பசித்து அலறும் வாயில்
அம்மா,
சூப்பியைத் திணித்துவிட்டுச் செல்வதாலோ
வாய் முன்நீண்ட
விலங்குகளாகவே தொடர்கிறோம், நாம்?

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP